Tuesday, October 07, 2008

இரு கவிதைகள் - உயிரோசை


அடிமைகளை உருவாக்குவது எப்படி
அனிதா




அடிமைகளை உருவாக்குவது எப்படி

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

இன்று இந்த அறையில்

இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்


உடைந்ததில் தேறியவ‌ற்றை
எடுத்துப் போக வந்துவிட்டார்கள்
பிரிய‌த்துக்குறிய‌வ‌ர்க‌ள்

அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய அள்ளிப்போனான்

பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப் புத்தகமும்
அப்பாவுக்கு

என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு மறுநாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு

மீத‌மிருக்கும் சில‌
சித‌றுண்ட‌ நான்
சித‌றுண்ட‌ நீ
கொஞ்ச‌ம் ர‌த்த‌ம்

நன்றி : உயிரோசை

Saturday, October 04, 2008

பனிக்குடம் - சில கவிதைகள்







1. தீங்கு

குரங்கொன்று ஒரு நாள்
கூரைமேல் குதித்தது
அங்கிருந்து வேப்பமரமேறி
தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி
வீட்டிற்குள்ளும் வந்தாயிற்று

என் பங்கு சோறு உண்டு
காது வரை போர்வையிழுத்து
கதகதப்பாய் உறங்கும்
இப்பொழுது இருதயம் கிழித்து
கறி தின்கிறது

வலிக்கும் என்றறியாததாய் நடித்தபடி

2. சேறு

களைத்துப் போய் வீடு நோக்கி
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கான சேற்றில்

இதன் அருவருப்பும் அழுக்கும்
இப்பொழுது பழகிவிட்டது
முதல் முதலில் வலது கால் வைத்த
சிலிர்ப்பும்
மிருதுவாய் தனக்குள் இழுத்த சுகமும்
இப்பொழுது இல்லை.

சில நேரம் குழைவாய்
சில நேரம் காய்ந்தும் இறுகியும்
பல நேரம் உடலெங்கும் வழிந்து
களையவும் பொறுக்காது
ஆடைகளை அழுக்காக்கும்.

பல நூறு ஆண்டுகளாய்
என்னை போல சேறு பழகியவர்கள்
என்னைத் தேற்றுகிறார்கள்

காரில் செல்லும் தோழி
ஏளனமாய் பார்த்துக் கடக்கிறாள்
அவள் இறங்க காத்திருக்கிறது
அவளுக்கான சேறு.

3.முத்தங்களாலான கூட்டில்

முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்
திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை
தொடர்ந்துபோக சிரமமாகிவிடுகிறது
ஒவ்வொரு முறையும்

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவுகூறுகின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும்.


4.தங்கத்தோடு

பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறந‌கர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.

தங்கத் தோடு தொலைந்துவிட‌
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.

5.மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

6.சுயம்

தேவையற்ற கணங்களில்
என் தாய்மை விழித்துக்கொள்கிறது.

தலை கோதி முகம் தடவி
தொடை சாய்த்து சேர்த்தணைத்து
வேர்களுக்கெல்லாம் நீரூற்றினாலும்
பூ பறிக்கையில் சிறிது சதையும்
வழித்துக்கொண்டு வருகிறது

தெரிந்தே தொடரும்
பகிர்தலுக்கான ஆயத்தங்கள்

முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை

எனக்குத் தெரியும்
இப்பொழுதொன்றும் அவசரமேயில்லை

உலகில் மிஞ்சிய கடைசி ஆணும்
வற்றும் கடலின் கடைசி திவலை நீரும்
தனக்காய் பறிக்கையில்

தாயுள்ளமாவது மண்ணாவது.



நன்றி : பனிக்குடம் காலாண்டிதழ்

Friday, September 12, 2008

இரு கவிதைகள்



1. அவள்

இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்

துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.

கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது

முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.


2. பழக்கம்

மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.

முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.

குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.

பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.

நன்றி : மணல் வீடு

Thursday, July 17, 2008

கதவு

கதவுகள் சூழ்ந்த அறையின் இருள் நீக்கி
பாதி திறந்திருக்கிறது ஒரு கதவு.

மயக்கம் தெளிந்தும்
கட்டப்பட்ட கைகளின் இறுக்கம் தளர்த்துவது
அத்தனை எளிதாய் இல்லை.

பாதி திறந்த கதவு வழி
உள்ளே வருகின்றன
பரிச்சயமற்ற குரல்கள்
தொடர்ந்து வீசுகிறது சாராய வாடை
எப்பொழுதுக்குமான இயலாமையில் அழைக்கின்றன
பிரியத்தின் குரல்கள்
அவ்வப்போது வரும் காற்று
தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது

பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.
அவ்வளவே.

மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.

Monday, July 14, 2008

பஸ் ஸ்டேண்ட் அழகிகள்

இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்

துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.

கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது

முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.

-அனிதா

பழக்கம்


மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.

முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.

குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.

பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.

-அனிதா

Saturday, June 07, 2008

உருமாற்றம்

பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்

மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்

உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்

பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன‌.

போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.

- அனிதா

நன்றி : வார்த்தை

Thursday, April 03, 2008

கடலாகி



காத்திருக்கவோ கிளம்பிப் போகவோ சொல்வதற்கு
யாருமில்லாத சுவடுகளற்ற மணலில்
மாராப்பின் பிரக்ஞைகளற்று
கடல் வெறித்துக்கொண்டிருக்கிறேன்

ஒழுக்கங்களின் பட்டியல் குறுகிக்கொண்டிருப்பினும்
நிலவு படிந்திருக்கும் நீரின் வெம்மையை மீறிய
அடி ஆழத்தின் குளுமை புரியும் எனக்கு.

உன் நல விசாரிப்பைப் போலவே செயற்கையாய்
பெயரில்லாத இந்தக் கடலின் மறுகரைக்கு
ஏதேனும் பெயர் வைத்திருக்ககூடும்
வாழ்தலை சீராக்குவதில் முனைந்திருப்பவர்கள்.

பிரிதொரு நாளின் வெப்பம் தணியத் துவங்கி
நக இடுக்கின் மணல் பிரித்தெடுக்கையில்
பிரியங்களை நினைத்துக்கொண்டவளாய்
கடல் அள்ளி அகண்ட பரப்பில்
மடித்தெடுத்துக்கொண்டு புறப்பட்டேன்

இடம்பெயர்தலின் கேள்விகள் ஏதுமின்றி
புரண்டு படுக்கிறாள்
இன்னும் கனவு கலையாத கடற்கன்னி.

- அனிதா
நன்றி : புதிய பார்வை

Wednesday, March 26, 2008

வித்யா ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..

திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும், விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும் தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.

போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து, சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம்.

வித்யாவின் வலைப்பூவை(http://www.livingsmile.blogspot.com/ )எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட "இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள். திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள். வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும் வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை. ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.

திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும், கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும் ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள். வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக கடினமான வேலையாகிறது.

வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது "இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் - இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும் நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும் ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.

இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ் என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள். சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும் விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் உணர்ந்திருப்பார்கள்.

நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும், பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின் வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை பூரித்துபோவார்களென தெரியவில்லை.

ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான, மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும் இல்லை சரியாகிடும் என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல், பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும் தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம். விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு செய்தும் காப்பாற்றுவதில்லையா?

திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல் முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.

Tuesday, February 12, 2008

இரு க‌விதைக‌ள்



ஏனென்றால்


ஊற‌ப்போட்ட‌ அரைம‌ணியில்
துவைத்து உல‌ர்த்திவிட்டேன்
திர‌ண்டு வ‌ரும் மேக‌ம் எந்நேர‌மும்
கொட்ட‌த்துவ‌ங்கும்

அல்ல‌து ச‌ட்டென‌ க‌லைந்தும் போக‌லாம்
ச‌தை துளைக்கும் வெயில் இற‌ங்கி
ஈர‌ம் உறிந்து வெளுக்க‌டிக்க‌லாம்

எத்த‌னை அழைத்தும் கீழிற‌னங்காம‌ல்
மொட்டைமாடியிலேயே அம‌ர்ந்திருக்கிறேன்

கார‌ண‌ங்க‌ள் கோர்த்தே ச‌க‌ல‌மும் செய்யும் என்
தோழிக‌ளுக்கு ம‌ட்டும் சொல்கிறேன்
வாக‌ன‌ப் புகையில் திண‌றித் த‌ப்பித்த‌ காற்று
வ‌றுத்த‌ க‌ட‌லை வாச‌ம் சும‌ந்து
என் துணிக‌ளை முத‌லில் உல‌ர்த்த‌
இப்போது வ‌ரும்



என் ம‌க்க‌ள்


விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கைக‌ளை
வாய் பிள‌ந்து வெறித்த‌ப‌டி ந‌க‌ர்கிற‌து
இந்த‌ ம‌ழைப்ப‌ய‌ண‌ம்

கூரைத் தொட்டு துருக்க‌ம்பிக‌ளில் வ‌ழிந்து
தொடைந‌னைக்கும்
ஜ‌ன்ன‌லோர ஈர‌ம் உத‌டு சுழிக்க‌ச்செய்கிற‌து

மிக‌மெல்லிய‌ இசையாலும் குறைக்க‌
முடிய‌வில்லை
அக‌ண்ட‌ தோள் சாய்ந்து ம‌ழை ர‌சிக்கும்
முன்னிருப்ப‌வ‌ள் மீதான‌ துவேஷ‌த்தை

ப‌ய‌ண‌ச்சீட்டை மோதிர‌ இடுக்கில் சொருகி
இருந்த‌வ‌ளின்
ப‌ட்டைச்ச‌ரிகைக்கு பொருந்தாத‌
நிற‌க்க‌ல‌வைப்ப‌ற்றி
சொல்ல‌லாமென்றிருந்த‌போது

ம‌ண‌ற்சூடு அட‌ங்காத குறுகியத்
தெருமுனையில்
ந‌லுங்காம‌ல் இற‌க்கிவிட்டு
ம‌ற்ற‌ங்க‌ளின்றி ப‌ய‌ணிக்கிறார்க‌ள்
இத்த‌னை நேர‌மும் த‌னிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த‌

என் ம‌க்க‌ள்


ந‌ன்றி : புதிய‌ காற்று

Thursday, January 17, 2008

சில கவிதைகள்


புதிய பார்வை பொங்கல் சிறப்பிதழில்.. (ஜனவரி 16-31 , 2008 )


1. குளத்துப் பறவை
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள்
க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்து ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.

2. இந்த இரவில்
ஒரு நினைவு மக்கத் துவங்கியிருக்கிறது
மின்விசிறி வேகத்தில் கலைகிறது
இன்று முடிக்கவியலாத வேலையொன்று
கொடியில் குவிந்த ஆடைகளுள் ஒளிந்துகொள்கிறது
காலையில் பிச்சை கேட்டவன் முகம்
குளியலறை நீரோடு ஆவியாகிவிடுகின்றன‌
காழ்ப்புண‌ற்சிகள்

விடிய‌ல் உள்ளிழுத்துக்கொண்ட‌ ம‌ண் ஈர‌ம் ம‌ட்டும்
இன்னும் க‌ன‌வினில் ம‌ண‌க்கிற‌து.

3. யாருமற்ற நிழல்
கடைத்தெருவில் மிதிபடும் நிழல்களை
கசந்து வெறித்தபடி தனியே உறுமிக்கொண்டிருந்தது அது.
மிருகமோ பறவையோ
எதனுடனும் பொருந்திவிடாமல்
உடலற்று இறுகியிருந்தது.

வெறிப்பிடித்ததென்றும் ரத்தம் குடிக்குமென்றும்
மிரட்சியாய் பேசிக்கொண்டார்கள்
தன்னிலிருந்து பிரிந்துவிடாத நிழல் வைத்திருந்தவர்கள்

நிசப்தம் பொழிந்துக்கொண்டிருந்த முட்புதரில்
வேரென படர்ந்திருந்ததின் நெற்றி தேடி முத்தமிட்டு
என்னவாயிற்று என்றேன் சன்னமாய்
இறந்துவிட்டதாய் சொன்னது
என் உதடுவழிந்த குருதியைத் துடைத்தெடுத்தபடி

புரிந்ததென கண்சிமிட்டி நகர்ந்த கணத்தில்
தடையங்க‌ளின்றி கரைந்துவிட்டது.

4.காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின

பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்

காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை.


ந‌ன்றி : புதிய‌ பார்வை

Thursday, January 03, 2008

சில கவிதைகள்..



கவிதைக்காரி

அத்தனை ஆர்வமாய் அந்த பரிசைப்
பிரித்திருக்க வேண்டியதில்லை
அவள் புகைப்படம் காட்டி சாயல்
ஒப்பிட்டிருக்கவும் வேண்டாம்

நான் கற்பித்துக்கொண்டிருந்த
என் இனிய பயணம்
இனியும் களிக்கும்படியாய் இருக்கப்போவதில்லை

விரல் பின்னி எனக்காய் இழுக்கும் கலை
கைவராதாயினும்
வெற்றிடங்களை உன் வெப்பத்தால்
நிறைப்பதும் சலித்தாகிவிட்டது

முத்தமூறி உன் முகமழிந்துவிட்ட
வெறும் அட்டைகளைப்பற்றி
இப்பொழுதாவது சொல்லிவிடுகிறேன்

தன்மை மறைந்து
அவந‌‌ம்பிக்கைக்குள் குறுகத்துவங்கும்
இந்த இரவில் என்னை நினைத்துக்கொள்
இதெல்லாமும் மீறி

உன்மீதான காதல் நிலைத்துவிடலாம்.


********************************************************************************************************


இல‌க்கு

அலுவல் களைப்பு உனக்கு.
எனக்கும்தான்.

இருந்தும்
உடைமாற்றும் நிமிடத்தில்
நீளலகு பறவை தலைமேல் வந்தமர்ந்தது

இருள் அப்பிய‌ குகைப் ப‌ய‌ண‌மும்
வௌவால்க‌ளின் துர்வாடையும் மீறி
சுக‌ம‌ளித்துக்கொண்டிருந்த‌ன‌
வ‌ழியெங்கும் கீறிக்கிட‌ந்த‌ சித்திர‌ங்க‌ள்

மீண்டும் ந‌ம்மை வீடு சேர்த்து
த‌ப்பிதோம் பிழைத்தோமென‌
ப‌ற‌ந்தோடிவிட்ட‌து ப‌ற‌வை
நீ இன்னும் என் முலைச் சுருக்க‌ங்க‌ளில் புதைந்திருக்கிறாய்

நினைவில் வ‌ந்த‌ ப‌சிக்கு
சில‌ புளித்த‌க் க‌னிக‌ளை உண்ணுகிறேன்
நீயும் ப‌சியாறு
ப‌ற‌வை எந்நேர‌மும் திரும்ப‌லாம்
இம்முறைக்கான‌ இல‌க்கு உன் த‌லையாய் இருக்க‌லாம்.


- அனிதா

நன்றி : குமுதம் தீராநதி