Thursday, November 07, 2013

விலகல்

எதிர்பாராத வேளையில்
பரணிலிருந்து விழுந்தது
அந்த பச்சை தோல் பை

தேடிய காலத்தில் எல்லாம் கிடைக்கவில்லை.

கோபம் கண்ணடைத்த ஒரு நாளில்
தரை தெறிக்க வீசியது
கடைசியாய் நினைவிலிருக்கிறது.

அதற்கு முன் என் கையோடு கையாய்
அத்தனை பூரிப்பாய்
அடங்கா கர்வியாய்
கூடவே தான் இருந்தது.

என் இயலாமைகளையும்
அச்சங்களையும்
அடர் மழை நாளொன்றின் தீராத வெறுமையையும்
பார்த்திருக்கும் அதனிடம்
எப்படி சொல்வது
பூரண வாழ்வு பெரு மகிழ் நாட்களென்று..

பூஞ்சை படர்ந்து கனத்திருக்கும் அதை
உற்றுப் பார்த்தபடியே நின்றிருந்தேன்
சரி இருக்கட்டுமென
தானாக நடந்துச் சென்று
அலமாரியின் கீழ் தட்டில்
படுத்துக்கொண்டது.

-அனிதா

Monday, March 04, 2013

அதுவே கடைசி

கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான் அறிந்திருந்தேன்
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.

இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.

நீ

பருக தணியாத தாகம்
இறைக்கத் தீராத நீர்
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்
அள்ளி குறையாத கைமணல்
நினைத்து சலிக்காத காதல்
தீராத்தேடல்
உன் பிரியம்

வாசம்

நான் தூங்கிட்டேம்மா
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்
தூறல் புகைத்த செம்மண் வாசம்
போலவே தீர்க்கமானது
உறங்கும் குழந்தையின் வாசம்
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.
நான் அறியுமுன்னே
அறையெங்கும் பரவியிருக்கிறது அனிச்சைவாசம்.