Friday, September 12, 2008

இரு கவிதைகள்



1. அவள்

இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்

துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.

கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது

முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.


2. பழக்கம்

மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.

முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.

குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.

பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.

நன்றி : மணல் வீடு

5 comments:

  1. இருநாட்களுக்கு முன்பே இக்கவிதைகளை மணல்வீட்டில் படித்தேன் அனிதா.கவிதைகள் அருமை.
    நன்றி.

    ReplyDelete
  2. புது கவிதை பதிவிட்டிருக்கிறீர்களோ என்றெண்ணி வந்தேன்..

    இந்த கவிதைகள் ஏற்கனவே பதிவிட பட்டவையே. :((

    இருந்தாலும் மணல் வீடில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.. மென் மேலும் எழுதுங்கள்.
    :)))

    ReplyDelete
  3. Anonymous9:04 PM

    உன் மூன்று வருட கவிதைகள்
    தனிமையில் இருந்த என்னை தடியால் அடித்தது
    என் காதலி கவிதையையும் தாய் தமிழையும்
    எவ்வளவு பிரிந்திருக்கிறேன் என புரியவைத்தமைக்கு மிக்க நன்றி.

    உணர்வும் கவிதையும் கடினமாயிருந்தாலும்
    பிரித்து பறுமாரிய பலாசுவை ...

    நன்றியுடன் - வாழ்துக்கள்.

    ReplyDelete
  4. "பாவடையில் கரைபடாமல்
    பள்ளிக்கு போய்வர
    இன்னும் நாளாகலாம்".

    vaazhthugal....

    ReplyDelete