Monday, January 24, 2011

கப்பற் தொழிற்சாலை

கப்பல் செய்து தரச் சொல்லி
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை

முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது

எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது

வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்

காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது

-அனிதா

4 comments:

  1. மிக மிக அருமை
    :)

    ReplyDelete
  2. அட்டகாசம் போங்கள்.
    காத்திருந்தால் தானாய் வெளிப்பட
    கவிதை போலல்ல கப்பல் செய்வது...

    இதை நான் ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  3. manalveetirkku kavithai anuppungal.
    hari

    ReplyDelete