Monday, January 24, 2011

சுடச் சுட மழை

வெப்பம் தாளாமல்
பிரிந்து நடக்கையில் தான்
பொழியத்துவங்குகிறது பெருமழை

அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி
ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது
ஆசுவாசமாயிருக்கிறது
ஏனெனில்
நீர் சொக்கும் ஆடைகளில்
இருக்கவே செய்கின்றன
அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான
சாத்தியகூறுகள்

இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்
இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்
எதிர்பாராமல் இளகுகின்றன

கலங்கி இருப்பினும்
குளிர்ந்து வழிந்தோடுகிறது
ரோட்டோரத்து செம்மண் நீர்

போதிலும்
நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்
நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
அலைகழிதலில்
ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது
நிகழ்

- அனிதா

8 comments:

  1. நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
    அலைகழிதல்.

    இந்த ஒற்றை வரி நிறைய செய்திகளைச்
    சொல்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தேன் சொட்டுகளாய் கவிதை மழை.
    அருமை. நன்றி.

    ReplyDelete
  3. //போதிலும்//
    அருமை :-))))

    ReplyDelete
  4. உங்களின் வழக்கமான பாணியிலான கவிதை முடிவில் நிகழ் என்கிற வார்த்தையில்லாமலேயே கவிதை முடிவடைந்திடுகிற உணர்வு வருகிறது

    ReplyDelete
  5. மழை நின்றபின்னும் விழும் தூவானமாய், படித்து முடித்த பின்னும் மறையவில்லை உங்களது கவிதைச் சாரல்..!!!

    ReplyDelete
  6. Sabarigiri5:36 PM

    திறந்த விழியில் கனவையும் வடிக்கும் கவிதைகள் - நன்றி

    ReplyDelete