Thursday, August 16, 2007
என் பிரிய வழிபோக்கனுக்கு
காதலோ காமமோ கவிதையோ
எது தோன்றினாலும் பேசு.
கனவுகள் நெய்வதும்,உயிர் உருக காத்திருப்பதும்
இதயம் பரிமாறுவதும்
இன்ன பிற வசனங்களையும்
பொறுமையாய் கேட்டுக்கொள்கிறேன்.
நெடு நாள் சலிக்காமலிருக்கும்படியாய்
கவனமாய் நினைவுகள் சேகரித்துவை
பிரிவுகள் பற்றிபேசாது இருள் கவியும் வரை
என் விரல்பின்னி தோள்சாய்ந்துக்கொண்டிரு.
என் ரயில் வரும் வேளை
தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
நகர்ந்துவிடு.
Tuesday, August 07, 2007
அந்தர் முகம் - நாவல்
எத்தனை விதமான மாயைகள் சூழ வாழ்கிறோமென புரியும்போது உண்மை முகத்தில் அறைகிறது. கதையின் நாயகனைப் போல பலரும் நம்மைச் சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மீதான நமது அபிப்பிராயங்கள் சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லை. அல்லது அவர்களைப்பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ள நாம் மெனக்கெடுவது கூட இல்லை. வேஷங்களிட முற்படாத மனிதர்களை வேஷமணிந்தவர்கள் புறக்கணிப்பதும் அலட்சியமாய் கையாள்வதும் தினமும் நம்மிடையே நடப்பதுதானென உணர்த்துகிறது.
கதையெங்கும் ஒரு மெல்லிய எள்ளல் இருப்பது பெரும் பலம். எத்தனையோ நிகழ்வுகளை கடந்தபோதும் ,சமூகம் குறித்தான நாயகனின் கண்ணோட்டம் மாறாமலிருப்பதும், மாற்றிக்கொள்ள தேவை இல்லையென நமக்கு படுவதும் அந்த கதாபாத்திரத்தின் மதிப்பை கூட்டி விடுகிறது.
கதை நெடுக மெல்லிய நீரோடை போல பெண்கள் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களை கையெடுத்துக்கும்பிடுங்கள் என போதிக்காமல், பெண்களே சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம் காரணம் என்றும் பழிச்சொல்லிகொண்டிருக்காமல், சற்று கூட குறைய இருந்திருந்தாலும் அர்த்தங்கள் மாறி விடும் அபாயம் இருக்கும் இது போன்ற கதைகளில் மிக கவனமாக கையண்டிருக்கிறார் வீரேந்திரநாத்.
திரைப்படம் பார்ப்பதுபோல் ஆங்காங்கே தோன்றினாலும் மனிதர்களின் பொய் முகங்களை கிழித்தெறியும் இது போன்ற நாவல்களில் அவைகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.
சமூகம் என்ற ஒன்றை உடைத்தெறியும் எண்ணங்கள் இல்லாமல், அதற்குள் இருக்கும் மனிதமன அழுக்குகளை மட்டுமே வெளிக்கொண்டுவர மேற்கொண்ட சிறந்த முயற்சி இது.இந்த நாயகன் நிச்சயம் உங்களருகில் இருக்கும் ஒருவரை நினைவுபடுத்துவான் அல்லது அவன் நீங்களாகவே கூட இருக்கலாம்.இப்படி தான் இருக்கிறோம் எனத்துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ள முடிந்தால் இந்த கதை ஒரு நல்ல அனுபவம்.
-அனிதா
Friday, August 03, 2007
டாஓ டே சிங்க் - சீன நூல்

ஏறக்குறைய இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன மொழியில் உருவாக்கபட்ட டாஓ டே சிங்க் (Tao Te Ching), சீன புத்தகங்களிலேயே மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் எனலாம். எல்லா நிகழ்வுகளின் அடிப்படையிலும் விவாதங்களே வேண்டியிராத உண்மை ஒன்றிருப்பதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம் எல்லா சீன சித்தாந்தங்களுக்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.
டாஓ டே சிங்க் எனத் தட்டச்சினால், எண்பத்தியோரு அதிகாரங்களே கொண்ட இந்த நூலின் பல வடிவங்கள் வந்து குவிந்துவிடும். அரை மணியில் படித்துவிடலாம் என்றாலும் மலரை பற்றிய விவரணை மலரை குறிக்கவில்லை என்றும், மண் பற்றிய வாக்கியங்கள் மண்ணைச் சொல்லவில்லை என்றும் உணரும் நேரம் புத்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.
வள்ளுவரை யாரேனும் பார்த்திருக்கிறார்களா, அவர் தாடி வைத்திருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேள்விகள் மிச்சமிருப்பதுப்போல டாஓ டே சிங்க்கை எழுதிய லாவோ ட்ச்சு (Lao Tzu - வயதான வாலிபன் என்று பொருள்) பற்றியும் சரியான தகவல்கள் இல்லை. இருந்தும் சுவாரஸ்யமாய், அவர் மிக வயோதிகமான நிலையில், எருமை மேல் பயணித்து மலைகளுக்குள் வசிக்க விரும்பி புறப்பட்ட நேரம், ஒரு எல்லை காவலாளி அவரை நிறுத்தி அவர் கற்றவையும் போதித்தவையும் எழுதி தருமாறு வேண்டிக்கொள்ள, அவர் அங்கேயே எழுதிக்கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாயும் பின் அவரை யாருமே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆழ்ந்து படிக்க வேண்டாம். தட்டையான முதல் வாசிப்பிலேயே மனது மிக லேசாகி விடுகிறது.கவிதை போன்ற சின்ன சின்ன உவமைகளுடனும், மிக எளிய கற்பனை செய்துக்கொள்ளமுடிந்த விவரணைகளுமாக தொடரும் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த போதகரின் அனுபவங்களை வழிபோக்கனின் அலட்சியத்தோடு சொல்லியிருப்பதுத் தெரிகிறது.
புத்தகத்திலிருந்து சில :-
அதிகாரம் 3
திறமைகளை பெரியதாய் எண்ணாமலிருந்தால் பொறாமைகள் வருவதில்லை. பொருட்களை மதிப்பிடாமலிருந்தால் திருடும் எண்ணம் வருவதில்லை. இன்னவை தான் பிடித்தவை என முடிவுகளெடுக்காமலிருப்பின் குழப்பங்கள் வருவதில்லை.
தேவையற்ற எண்ணங்களால் இதயத்தை நிறைப்பதற்குபதில் நல்ல உணவு உண்டு வயிறு நிறைக்கலாம். நோயில்லாமல் காத்துக்கொள்ள முற்படலாம். ஆசைகளற்ற சாதாரண மனிதனிடம் சாமர்த்தியக்காரர்களின் வேலைகள் எடுபடுவதில்லை. எதிர்ப்பார்ப்புகளின்றி காரியங்களைத் தொடர்ந்தபடி இரு. தொல்லையே இல்லை!!
அதிகாரம் 45
சிறந்த சாதனைகள் முழுமையற்றவையாக தெரிகின்றன, இருந்தும் அதன் உபயோகங்களை அலட்சியப்படுத்திவிட முடிவதில்லை. பூரணமாய் இருப்பது ஒன்றுமில்லாததாய் தெரிகிறது, இருந்தும் அதை வற்ற வைக்க முடிவதில்லை.
மிக நேராக இருப்பது கோணலாக தெரிவதும், சிறந்த அறிவு குழப்புவதாய் தெரிவதும், சிறந்த பேச்சு திக்குவதாய் தோன்றுவதும் இவ்வாறாகவே இருக்கிறது. அசைவது குளிரை குறைக்கிறது. அசைவற்றிருப்பது சூடு தணிக்கிறது.
அமைதியாய் இருப்பது எல்லா சஞ்சலங்களையும் நேர்படுத்திவிடுகிறது.
மேலும் படிக்க :-
http://en.wikipedia.org/wiki/Tao_Te_Ching
http://www.religiousworlds.com/taoism/ttcstan3.html
http://www.sacred-texts.com/tao/taote.htm
Thursday, July 12, 2007
நெடுங்குருதி - ஒரு பார்வை
தினந்தோறும் வேலையிலிருந்து வேம்பலைக்கு திரும்புவதுபோல் இருந்தது இத்தனை நாளின் நெடுங்குருதி வாசிப்பு. இவ்வளவு அருகிலிருந்து ஒரு கிராமத்தை இதுவரை பார்த்ததில்லை.
ராமகிருஷ்ணன் அவர்களின் ஆரவாரமில்லாத கனமான நடை பழகியதுதான் என்றாலும் நானூறு பக்கங்களும் தோய்வில்லாத நடை வியக்க வைக்கிறது. ஒரு குடும்பத்திலிருந்து கதைத் துவங்கினாலும் குறிப்பாய் யார் பார்வையிலும் கதை சொல்லப்படவில்லை. சில நேரம் வெவ்வேறு மனிதர்களிடம் நெருங்குவதும் சில நேரம் விலகுவதுமாய் நகர்கின்றன நிகழ்வுகள்.
சம்பவங்களை கோர்த்துச் செல்லும் அழகில் பெரிய திருப்புமுனைகளின் தேவை மங்கி விடுகிறது. பிறப்பும் இறப்பும் எத்தனை இயல்பென புரிந்துக்கொள்ளவும், சாதாரணமான யூகிக்க முடிந்த கதைகளுக்கு பழகி இருப்பவர்களை சற்று அதிர்ச்சிகளுடனே அவற்றை ஏற்றுக்கொள்ள பழக்குகிறது இப்படி தானே நடக்கும் என்பதான கதையோட்டம்.
சற்றே பெரிய பத்தி என்று அடுத்த பக்கதிற்கு தாவுபவர்கள் கதையின் மிக முக்கிய சம்பவத்தை நழுவ விட்டிருப்பார்கள். எப்பொழுதோ வாழ்ந்த மிகச்சாதரண மக்களை யாரவது கோடிட்டு காட்டினாலும் நமக்கும் அவர்கள் நினைவுக்கு வந்து விடுவது ஆச்சர்யமாகவும், மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. நாகு, ரத்னாவதியுடன் சென்னம்மா, நீலா, மல்லிகா, வகீதா கூடவே கந்தர்வ சிலையும் அருகிருப்பது எழுத்தின் வலிமையை காட்டுகிறது.
ஒரு வெயில் காலத்தில் மனம் கசங்கி கிடப்பதும், மழை பொழிதலோடு துளிர்த்துக்கொள்வதுமாய் இயற்கையிலிருந்து பிரிந்திடாத கிராமங்களையும் கிராமவாசிகளையும் புறக்கணிக்கமுடியாத அவரவர் நியாயங்களையும் முரண்களின்றி கொடுத்திருக்கும் ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் பக்கங்களைத்தீர்க்கவும், வெளிவரவும் மனதற்றுப்போகிறது.
இன்னும் தாமதித்துக்கொண்டிருப்பவர்கள் பெட்டி படுக்கையுடன் வேம்பலைக்கு போய் வாருங்கள்.வேம்பர்களையும் சாயக்காரர்களையும் நான் விசாரித்ததை சொல்லுங்கள். பயணம் இனிதாகட்டும்.
நாவல் : நெடுங்குருதி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 275.00
பக்கங்கள் : 472
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.
எழுத்தாளரின் மற்றும் சில நூல்கள் :
விழித்திருப்பவனின் இரவு
உறுபசி
அரவான்
பதேர் பாஞ்சாலி
நடந்து செல்லும் நீரூற்று
கால் முளைத்த கதைகள்
-அனிதா
Thursday, July 05, 2007
மல்லிப்பூக்களும் நிலக்கடலைகளும்.
அவளும்.
அடித்துபிடித்து ஜன்னலோரம் உட்கார்ந்துக்கொண்டேன்.
கசங்கலின்றி அருகில் அமர்ந்தவள்
எனக்கு பிடிக்காத நாவல் படித்தபடி
நிலக்கடலை கொறிக்கிறாள்
பூனைமுடிகளற்ற சிவந்த கன்னங்கள் வலிக்காதபடி.
அசைவதும் ஆடை திருத்துவதும்
இயல்பாய் இல்லாவிடினும்
அழகாய்த்தானிருந்தாள்
நெரிசல் பார்வைகளிலிருந்து ரயிலிறங்கி மறையும்வரை.
என் மல்லிப்பூக்களையும் மருதாணிக் கைகளையும்
விழிவிரிய பார்த்தபடி நிற்கிறது
இதே கூட்டம்
இப்போது.
அவரவர்க்கும் பொழுது கழிந்தபடிதானிருக்கிறது
- 2007 சங்கமம் கவியரங்கத்தில் வாசித்தது.