Thursday, March 19, 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி!!

நண்பர்களுக்கு வணக்கம்

மார்ச் முதல் நாள் அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அதே நேரத்தில் என் முதல் கவிதைத்தொகுப்பு கனவு கலையாத கடற்கன்னி என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.





அதன் முன்னுரை இங்கே :



முன்னுரை

அனுமானங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கும் மெல்லிய இடைவெளியில் கசிந்து மறையும் நிதர்சனத்தை என் கவிதைகளில் பதிவு செய்ய முயல்கிறேன். உண்மைகளை உணரத் துவங்கும்போது மிகுந்த துயரத்திற்கோ, பெருகும் மகிழ்சிக்கோ அல்லது என்னுள் பரவும் இனம்புரியா உணர்வுக்கோ ஆளாகிறேன். ஒரு கவிதை படித்து வெகுநேரம் அமிழ்ந்திருப்பதும், சில நாட்கள் தேங்கி கிடப்பதும் யாருடனும் பகிர்ந்து புரியவைக்க முடியாத அனுபவமாகிவிடுகிறது. அதுவே, நான் கவிதைகள் எழுத உந்துதலாகவும் அமைந்திருக்கிறது.

கவிதையாய்ப் பேசிப் பழகி , கவிதையாய் வாழ்ந்து என் எழுத்துக்களில் இன்னும் உயிர்த்திருக்கும் என் அம்மாவை முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும் இந்த நேரம் நெகிழ்வாய் நினைத்துக்கொள்கிறேன்.

எல்லா பெண்களையும் போல என்னைச்சுற்றியும் பாதுகாப்பு வளையமிருக்கிறது. அறுத்தெறிய இயலாத வளையம். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் அளவினை ஒப்பிடவோ, அளக்கவோ முயன்றதில்லை. பத்திரமாய் பயணிக்கவும், வேளைக்கு உணவு உண்ணவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு பழகவும், எது கேட்டாலும் வாங்கி கொடுத்தும் ,என்னைக் கைக்குள் வைத்து தாங்கும் என் குடும்பத்தாருக்கு என் பிரியங்கள்.

ஆர்வமாய் என் கவிதைகளைப் படித்து விமர்சித்தும், நம்பிக்கையூட்டியும் எழுதச் செய்த பத்திரிக்கை மற்றும் இணைய உலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் நன்றி.

என் கற்பனை உலகத்து அழகுகளையும் அபத்தங்களையும் நானே பிரித்துப் பார்த்து என்னைச் செதுக்கிக் கொள்ளவும், நிதர்சனங்களின் வெப்பத்தை பதறாமல் கையாளவும் கற்றுத்தந்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும் இந்தத் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் என் நன்றி.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளைப் பிரசுரித்த உயிர்மை, தீரா நதி, புதியபார்வை, உயிர் எழுத்து, பனிக்குடம், புதிய காற்று, வார்த்தை, உயிரோசை, நெய்தல், மணல் வீடு, ஆனந்தவிகடன், திண்ணை, வார்ப்பு ஆகிய இதழ்களுக்கு நன்றி.

இவ்வளவு மகிழ்வோடும், நிறைவோடும் வாழ்வதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு என் பிரியங்களையும் , வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியங்களுடன்
அனிதா
பெங்களூரு

மின்னஞ்சல் : anithu21@gmail.com



புத்தகம் வாங்க‌

Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448

- அனிதா


********************************************************************************

Monday, January 19, 2009

விகடனில் சில கவிதைகள்..


நினைக்காத வேறொன்று


எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவற‌விட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுப‌வ‌ரும், காபி ஆற்றுப‌வ‌ரும்,
பார்ச‌ல் க‌ட்டுப‌வ‌ரும் கூடி பேசிய‌ப‌டியிருந்தார்க‌ள்

கிடைக்க‌வேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்த‌ப‌டி வந்துவிட்டேன்.
ச‌ம்பாஷ‌ணைக‌ளில் கலந்துக்கொள்ளாம‌ல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்த‌வ‌ன்
அன்றிர‌வு க‌ன‌வில் வந்தான்.

ரகசியம்

யாரிடமும் சொல்லாதே என்று
அவளைப் பற்றி சொன்னான் இவன்.

ரகசியமாம்.

எனக்குத் தெரிந்தவள்தான்.
உண்மையா என்றேன் அவளிடம்
இல்லையே எனத் துவங்கியவள்
யார் சொன்னது என சேர்த்துக்கொண்டாள்.

இவன் சொன்னதாய் அவளிடம் சொல்லவில்லை
அவளிடம் கேட்டது இவனுக்குத்தெரியாது

பெரிய ரகசியத்தின் வயிறு கிழித்து வெளியேறிய
இந்த குட்டி ரகசியங்களை என்ன செய்வது?

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

- அனிதா

நன்றி - ஆனந்த விகடன்

Tuesday, October 07, 2008

இரு கவிதைகள் - உயிரோசை


அடிமைகளை உருவாக்குவது எப்படி
அனிதா




அடிமைகளை உருவாக்குவது எப்படி

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

இன்று இந்த அறையில்

இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்


உடைந்ததில் தேறியவ‌ற்றை
எடுத்துப் போக வந்துவிட்டார்கள்
பிரிய‌த்துக்குறிய‌வ‌ர்க‌ள்

அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய அள்ளிப்போனான்

பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப் புத்தகமும்
அப்பாவுக்கு

என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு மறுநாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு

மீத‌மிருக்கும் சில‌
சித‌றுண்ட‌ நான்
சித‌றுண்ட‌ நீ
கொஞ்ச‌ம் ர‌த்த‌ம்

நன்றி : உயிரோசை

Saturday, October 04, 2008

பனிக்குடம் - சில கவிதைகள்







1. தீங்கு

குரங்கொன்று ஒரு நாள்
கூரைமேல் குதித்தது
அங்கிருந்து வேப்பமரமேறி
தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி
வீட்டிற்குள்ளும் வந்தாயிற்று

என் பங்கு சோறு உண்டு
காது வரை போர்வையிழுத்து
கதகதப்பாய் உறங்கும்
இப்பொழுது இருதயம் கிழித்து
கறி தின்கிறது

வலிக்கும் என்றறியாததாய் நடித்தபடி

2. சேறு

களைத்துப் போய் வீடு நோக்கி
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கான சேற்றில்

இதன் அருவருப்பும் அழுக்கும்
இப்பொழுது பழகிவிட்டது
முதல் முதலில் வலது கால் வைத்த
சிலிர்ப்பும்
மிருதுவாய் தனக்குள் இழுத்த சுகமும்
இப்பொழுது இல்லை.

சில நேரம் குழைவாய்
சில நேரம் காய்ந்தும் இறுகியும்
பல நேரம் உடலெங்கும் வழிந்து
களையவும் பொறுக்காது
ஆடைகளை அழுக்காக்கும்.

பல நூறு ஆண்டுகளாய்
என்னை போல சேறு பழகியவர்கள்
என்னைத் தேற்றுகிறார்கள்

காரில் செல்லும் தோழி
ஏளனமாய் பார்த்துக் கடக்கிறாள்
அவள் இறங்க காத்திருக்கிறது
அவளுக்கான சேறு.

3.முத்தங்களாலான கூட்டில்

முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்
திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை
தொடர்ந்துபோக சிரமமாகிவிடுகிறது
ஒவ்வொரு முறையும்

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவுகூறுகின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும்.


4.தங்கத்தோடு

பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறந‌கர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.

தங்கத் தோடு தொலைந்துவிட‌
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.

5.மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

6.சுயம்

தேவையற்ற கணங்களில்
என் தாய்மை விழித்துக்கொள்கிறது.

தலை கோதி முகம் தடவி
தொடை சாய்த்து சேர்த்தணைத்து
வேர்களுக்கெல்லாம் நீரூற்றினாலும்
பூ பறிக்கையில் சிறிது சதையும்
வழித்துக்கொண்டு வருகிறது

தெரிந்தே தொடரும்
பகிர்தலுக்கான ஆயத்தங்கள்

முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை

எனக்குத் தெரியும்
இப்பொழுதொன்றும் அவசரமேயில்லை

உலகில் மிஞ்சிய கடைசி ஆணும்
வற்றும் கடலின் கடைசி திவலை நீரும்
தனக்காய் பறிக்கையில்

தாயுள்ளமாவது மண்ணாவது.



நன்றி : பனிக்குடம் காலாண்டிதழ்

Friday, September 12, 2008

இரு கவிதைகள்



1. அவள்

இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்

துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.

கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது

முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.


2. பழக்கம்

மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.

முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.

குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.

பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.

நன்றி : மணல் வீடு