Tuesday, December 04, 2007

சில கவிதைகள்...

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது

பின் மற்றொன்று
மற்றுமொன்று.

பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.

சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.


யாருமற்ற விடியல்

மார்பும் வயிறும் தொடைகளும்
அதனதன் கனத்தில் அழுந்தியிருக்க
குப்புற கிடந்தது என் உடல்.

உள்தாழிட்ட அறைக்குள் அரைக்கண் மூடிய முகம்
உணர்வுகளற்று வெளிறியிருப்பது
இதுவரை யாருக்கும் தெரியாது.
அதையே உற்றுப் பார்த்து சலித்துப்போனவளாய்
நீரூறி பெருத்த கழிவறை கதவிடுக்கில் நுழைந்து
வென்டிலேட்டர் வழியாய்
பறந்து வெளியேறினேன்.

கூரை வேய்ந்து மழை ஒழுகும் திரையரங்கிலும்
சாவகாசமாய் தெருவோரத் திருநங்கையிடம் பேசிக்கொண்டும்
மரமேறி பெயர் தெரியாத மிருகத்தின்
கடைசி கலவி ரசித்தபடியும் சுற்றி வந்தேன்.

சில மணி நேரங்களில்
பசியில் குழைந்தழைத்த உடலுக்குள் புகுந்து கொண்டு
சமைக்கத் துவங்கினேன்.


சுழற்சி

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.

அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்

வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்

எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்

பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.

- அனிதா

நன்றி : உயிரெழுத்து