Friday, March 19, 2010

பயணிக்க மறந்த சாலைகள்..



அனன்யாவின் முதல் பிறந்தநாளை எங்கே எப்படி கொண்டாடுவது என்று நீண்ட நாட்களாய் யோசித்துக்கொண்டிருந்தோம்.. எல்லோரும் பொதுவாக செய்வதுபோல் நண்பர்கள் ,சொந்தங்கள் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி பிறகு நார்த் இண்டியன் உணவு வகையோ ,நம்ம ஊர் வாழை இலை பரிமாறலோ வைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.. கிட்டதட்ட ஒரு வருடமாக எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் மாறி மாறி வந்துக்கொண்டிருந்ததால், முதல் பிறந்தநாளுக்கென்று எதுவும் வித்தியாசமாகவே இல்லாதது போல் தோன்றியது. அதுவுமில்லாமல் தம்பி திருமணத்திற்கு வந்த என்னை தூக்கி வளர்த்த எதிர் வீட்டு அக்காக்கள் நீயெல்லாம் குழந்தைல எவ்ளோ குண்டா இருப்பே.. உன் பொண்ணு என்ன ஒல்லியா இருக்கா என்று நான் என் பிள்ளைக்கு சாப்பாடே போடுவதில்லை என்ற ரேஞ்சுக்கு கேட்டுவிட்டு போக, வேறு சிலரோ கருப்பு பொட்டு வெக்கலியா கருப்பு வளையல் போடலியா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

எனக்கு கண், திருஷ்டி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் (God is watching, Good fetches Good, Bad fetches Bad) என்று மட்டும் எதனாலோ அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டதால் கடவுள் என்ற நம்பிக்கையை தவிர வேறு எந்த உலகளாவிய மாயைகளையும் ஆதாரமில்லாமல் பின்பற்ற முனையவில்லை. இப்படியிருக்க, குழந்தைக்கு இதை செஞ்சியா, அதை செஞ்சியா என்ற கேள்விகளுக்கு கேட்பவர் மனம் நோகாமல் பதிலளிப்பதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது..

இதுவாவது பரவாயில்லை.. என் தம்பி திருமணத்தில் மிக அழகான பரிசு வந்திருந்தது.. கண்ணாடி பழக்கூடை.. மிக அழகான வேலைபாடுகளோடு தனித்தன்மையான பரிசு.. பார்த்தவுடன் அப்பா சொன்னார்.. சூப்பரா இருக்கு!! இதே மாதிரி ஒண்ணு நான் ஒருதங்க கிரஹ பிரவேசத்துக்கு போன வருஷம் வாங்கி தந்தேன்!! அந்த ஒருதங்க தான் அந்த பரிசை தந்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. அடப்பாவிகளா.. அட்டைய கூட மாத்தலையே.. என்று அப்பா நொந்துக்கொண்டிருந்தார்.. ஒரு வருடம் பத்திரபடுத்தி கொண்டுவரவும் ஒரு திறமை வேண்டும் என்றேன் நான்.. பொதுவாகவே இம்மாதிரி அழகான பரிசுபொருட்கள் உபயோகிக்க மனது வருவதில்லையாதலால் ஒரு லிஸ்ட் போட்டு யாரார் எது எது கொடுத்தார்கள் என்று குறித்துவைத்தால் பின்னாளில் அவர்கள் விசெஷத்திற்கு வந்த பரிசிலேயே ஏதாவதொன்றை கொடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.. ஆனால் அதையே கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். அந்த பழக்கூடையை எங்கள் வீட்டில் பார்க்கும்போதெல்லாம் ஒரு புன்னகை தவிர்க்கமுடியாததாகிறது..

இதையெல்லாம் யோசித்துவிட்டுதான் எங்காவது வெளியூர் போகலாமே என்று தோன்றியது. நான்கைந்து இடங்கள் யோசித்ததில் குழந்தை நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிராத, வெயில் அதிகமில்லாத நமக்கும் சற்றே பழகிய இடமாக ஓகே ஆனது கொடைக்கானல். என்னுடைய கல்லூரிகள் மற்றும் குடும்ப சுற்றுலாக்கள் என ஐந்து முறை அங்கே சென்றிருந்தபடியால் நம்ம ஊரு என்ற உணர்வு வந்துவிட்டிருந்தது. மிதமான குளிரில் அழகாய் இருந்தது ஊர். சுற்றிப்பார்க்க வேண்டும் என்றதுமே பெரிய அட்டவணை ஒன்றை கையில் கொடுத்தார்கள்.. நாலு பேரு, காலையில ஒன்பது மணிக்கு கிளம்பி பில்லர் ராக்ல ஆரம்பிச்சு சாயங்காலம் அஞ்சு மணிக்கு லேக்ல போட்டிங் ல முடிப்போம். இன்னோவா வரும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்..

சமீபத்தில் ஒரு நண்பருடன் பயணத்திற்கும் சுற்றுலாவிற்குமான (travel vs tour) வித்தியாசம் பற்றி பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..சரி குழந்தை ஒன்று இருக்கையில் ட்ரெக்கிங் போன்ற சாகச வேலைகளெல்லாம் சரிவராது என்று தெரியும். கோக்கர்ஸ் வாக்கில் கேரட் தின்றபடியே நடந்துவிட்டு அடுத்து சென்றது லேக் வியூ பாயின்ட். அங்கே நின்று பார்த்தால் கோடை ஏறி தெரிகிறது.. நான் சலித்துக்கொள்வதை பார்த்த பைனாகுலர் இயக்குபவர்.. கொடைகானல் ல எங்க போனாலும் வியூ பாயின்டுகளும் பள்ளத்தாக்குகளும் தான் இருக்கும் என்றார்.. தெரிந்தது தான். நிறைய முறை பார்த்துவிட்டதாலா அல்லது வெயில் படுத்திக்கொண்டிருந்ததாலா தெரியவில்லை.. சலிப்பாயிருந்தது.. மதியத்திற்கு மேல் நாங்கள் எங்கும் இறங்காமல் நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.. வெறுப்பான ட்ரைவர் பூம்பாறைக்கு வரீங்களா என்றார்..

லிஸ்டில் இல்லாத இடம் என்பதாலேயே உடனே சரி என்றேன்.அது ஒரு சின்ன கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ ஒரு மலர் மலர்ந்திருப்பது போல அத்தனை அழகான மிகச்சிறிய ஊர். போகர் சித்தர் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்ததாகவும், ஒன்று பழநியிலும், ஒன்று இங்கும் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சிலை இருக்கும் கோவில் மிகப்பழமையாக இருப்பினும் சுத்தமாக இருக்கிறது.. இந்த கோவில் உருவாகி அதை மையமாய் வைத்து வீடுகள் இருக்கின்றன.. பழநியில் இருக்கும் சிலை அபிஷேகங்களால் கரைந்துக்கொண்டிருப்பதாகவும் இங்கிருக்கும் சிலை வைத்தது போன்றே முழுதாய் இருப்பதாகவும் இங்கு இருப்பவர்கள் சற்று பெருமையுடனே சொல்கிறார்கள்..



நாங்கள் சென்ற நாள் பௌர்ணமி என்றும், வேறு ஏதோ நல்ல நாள் என்றும் சக்கரைப்பொங்கலும் பஞ்சாமிர்தமும் பெரிய பானைகளில் சமைத்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் இதையெல்லாம் கேட்டுவிட்டு, அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமா.. ஐயோ பௌர்ணமி அன்னிக்கு போனீங்களா.. நான் பாடல் பெற்ற ஸ்தலம் எல்லாம் தேடி தேடி போறேன் எனக்கு இதெல்லாம் அமைய மாட்டேங்குது என்று கோபித்துக்கொண்டார்..

எனக்கு இத்தனை மகத்துவம் புரியவில்லை.. ஆனால் ஏதோ வித்தியாசமான இடத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வு இருந்தது. எல்லா வீடுகளும் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன.. பக்கத்தில் பூண்டு செடிகள் கண்ணுக்கெட்டியவரை பரவிக்கிடக்கின்றன.. இவர்கள் முக்கிய விவசாயம் பூண்டு தான். பச்சை பூண்டை செடியோடு அன்று தான் முதல் முறை பார்த்தேன். வீட்டிற்குள் மூங்கில் கட்டைகள் கட்டி அதில் இந்த பூண்டி செடிகளை தொங்கவிட்டு புகைபோட்டு காயவைக்கிறார்கள். வேறு எப்படி காயவைத்தாலும் கெட்டுவிடுமாம் பூண்டு. இப்படி புகை போடுவற்காகவே மின்சார இணைப்பை உபயோகிக்காமல் இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. பூண்டு உரிக்க கூட சிரமபட்டுக்கொண்டு நம் மக்கள் ஜிஞ்ஜர் கார்லிக் பேஸ்ட் உபயோகிப்பதை நினைத்துக்கொண்டேன்..
மலைவாழ் மக்களின் பேச்சும் வாழ்கையும் மிக எளிமையாக இருக்கிறது.. பொழுது சாயும் வரை அந்த கிராமத்தையே சுற்றி வந்துக்கொண்டிருந்தோம்.. அந்த இடம் தனக்குள் நிறைய ரகசியங்களை வைத்திருப்பது போலவும் அந்த அரை நாளில் அனைத்தையும் தெரிந்துக்கொண்டுவிட வேண்டும் எனவும் தோன்றிக்கொண்டே இருந்தது.. விடைபெறுகையில் நிறைய அன்பும் பழங்களும் பூண்டும் தந்தார்கள்.

அடுத்த நாள் குழந்தையின் பிறந்தநாள்.. டிராவல் டெஸ்க் மானேஜர் மூலமாக ரிஸார்டின் வேலை செய்பவர்களெல்லோருக்கும் தெரிந்துவிட்டது போலும். நாங்கள் ஆர்டர் செய்திருந்த கேக்கை ட்ரைவரே மூன்று கி.மீ தள்ளி இருந்த கடையிலிருந்து வாங்கி வந்து விட்டார். குறைந்தது 300 ரூ ஆகும் போகவும் வரவும். குழந்தை பிறந்தநாள் இல்ல.. அதான் என்றார் சிரித்துக்கொண்டே.. கேக் வெட்டுகையில் இருபது இருபத்தைந்து பேர் சேர்ந்திருந்தார்கள். பெரும் மகிழ்ச்சியாக இருந்தது..

இனி மறுபடி எப்பொழுது பார்ப்போம் என்றே தெரியாத மக்கள் நடந்துக்கொண்ட விதமும், கனிவும், அக்கறையும் நெகிழச் செய்தது.

“ Direct your gaze outwards to the great world of nature and see man in a living relationship to this great world” என்றார் சமூக சிந்தனையாளர் ருடோல்ப் ஸ்டீனர்..

இயற்கையும், இயற்கை சார்ந்த மனிதர்களும், அழகும் ,குளுமையுமாய் கழிந்த என் மகளின் முதல் பிறந்தநாள் ஞாபக அடுக்குகளில் அழுத்தமாய் அமர்ந்துக்கொண்டது..

-அனிதா