Wednesday, May 05, 2010

பெண்களும் பூக்களும்..
ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..

இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது.

இப்படி யோசித்ததின் அடிப்படையில் நான் வெகு நாட்களாய் படிக்கும் சில வலைப்பூக்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன.

cakerwakers.blogspot.com எழுதும் கிரிஸ்டி யை நான் தனிபட்ட முறையில் அறிந்ததில்லை. Serendipity யாக தான் இந்த வலைப்பூ கண்ணில் பட்டது. இலக்கியம் இல்லை. எதை பற்றியும் பெரிய கருத்துக்கள் இல்லை. ஆங்கில புலமையின் வெளிபாடு இல்லை. பின்னூட்ட கவலைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இதை நான் எழுதுவதால் எனக்கு அவமானமோ பாராட்டோ வந்துவிடுமோ என்ற குழப்பம் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். அவ்வளவே இந்த வலைப்பூ. ஏதோ ஒரு நெருக்கத்தை இந்த வலைப்பூ தருகிறது. கஷ்டங்களை எழுதும்போதும் ரௌத்திரம் வெளிப்படுத்தும்போதும்கூட மெல்லிய நகைச்சுவையுடனே எழுதுகிறாள். (உ.ம் - I Childproofed the house but they still got in!!) அலுவலகம், இலக்கியம், ஆளுமைகள், நிழல்வெளி நீர்வெளி எல்லாவற்றையும் இளக்கிவிட்டு படித்தால் பிடிக்கலாம்.

tinklingsmiles.blogspot.com வலைப்பூவை படிக்கும்போதெல்லாம் ஒரு மென்மையை உணர்கிறேன். தான் மனதில் நினைத்ததை தெளிவாக கம்பீரமாக கோர்வையாக ஸ்மைலியால் சொல்ல முடிகிறது. சமூகத்தை பற்றிய தன் பார்வையை முன்வைப்பதிலும் தயக்கங்கள் இல்லை. இவள் தான் பெண் என்பதில் பெருமைக் கொள்ளும் அதே வேளையில் வலைப்பூவின் எந்த இதழும் பெண்ணியம் பேசவில்லை. சில வேளைகளில் வேதாந்தி போலவும் சில நேரம் வம்பளக்கும் எதிர் வீட்டு பெண் போலவுமான எழுத்து ஆர்வமேற்படுத்துகிறது. என் நீண்ட நாள் தோழி என்பதாலும் எத்தனையோ விஷயங்களை பேசி விவாதித்து பரிமாறிக்கொண்டதாலும் என்னால் இவளின் வலைப்பூவில் இருக்கும் மனம் திறந்த பாசாங்கற்ற எழுத்தை உணரவும் ரசிக்கவும் முடிகிறது.

yalisai.blogspot.com சமீபத்தில் லேகாவின் வலைப்பூவை காண நேர்ந்தது. முதலில் என்னை ஈர்த்தது அந்த வலைப்பூவின் ஒழுக்கம். மிக நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டு தெளிவான வெளிபாடு. எழுத்துக்களில் எங்கும் அலட்டல் இல்லை. பதட்டம் இல்லை. நான் படித்தேன், நான் பார்த்தேன் என் கருத்து இது என்பதான பகிர்தல் மட்டுமே இருந்தது. முழுதாய் ஆற அமர படிக்க இலக்கியமாய் ஒரு வலைப்பூ.. லேகாவிற்கு இந்த முதல் விருது கிடைத்திருப்பதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள் லேகா!

எந்த தேடல்களும் இன்றி எழுதியிருப்பதை அப்படியே உள்வாங்கி ரசிக்கவும் ஒரு மனநிலைத்தேவைப்படுகிறது. இந்த வலைப்பூக்களை படிக்கையில் lightness வந்துவிடுகிறது. மனம் திறந்து கர்வங்கள் களைந்து ரசிக்கலாம்.

-அனிதா

Monday, April 12, 2010

நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..

போன வருடம் நண்பன் ஒருவன் தொலைபேசினான்.

அனிதா நான் விமல் பேசறேன்..
யேய் என்னடா சென்னை வந்திருக்கியா..
ஆமாம் போன வாரம்..
இப்போ தானே போனே ஆறு மாசம் கூட ஆகலையே என்ன ஆச்சு?
ப்ரியாவுக்கு கல்யாணமாம்..

ஓ ப்ரியா.. காதல். நான்கு வருடங்கள் இருக்கலாம் இருவரும் காதலிக்கத்துவங்கி.
இவன் எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பனாதலால் எங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றபோது, ப்ரியாவுக்கும் நேரா வந்து குடுங்களேன், சந்தோஷப்படுவா என்றான்.
அது தான் அவளை நான் பார்த்த ஒரே தடவை. அழகு தான். கண்கள் பெரியதாய் இருந்தன. கொஞ்சம் முறைப்பது போல் கூட நினைத்தேன். மலர்ந்து பேசினாள். அவன் அருகாமையை விரும்புகிறவளாயிருந்தாள். ஏதாவது சொல்லிவிட்டு என்ன சொல்றே விமல்.. என்று அடிக்கடி கேட்டாள்..

அவள் ஒரு ஆல்பம் வைத்திருந்தாள். அவளுடைய நண்பர்களின் புகைப்படங்களெல்லாம் சேகரிக்கும் பொழுதுப்போக்கு இருந்தது அவளுக்கு. நிறைய முகங்கள். பாஸ்போர்ட் போட்டோக்கள் நிறைய இருந்தன. எனக்கு பரிச்சயமான முகம் ஏதாவது தெரிகிறதா என்று புரட்டினேன்.. எதுவுமில்லை. உங்க கல்யாணமானதும் உங்க ரெண்டு பேரு போட்டோவும் தாங்க என்றாள். கண்டிப்பா என்றுவிட்டு கிளம்பினோம்.

அவளுக்கு தான் திருமணம். இனி சரிவராது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினாளாம். இவன் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் தொலைபேசிகளுக்கும் பதில் இல்லையாம். ஒரு வாரம் முன்பு தான் நண்பன் ஒருவன் சொன்னானாம்.. அவளுக்குத் திருமணம் என்று. அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.

என்னவாம் அவளுக்கு என்றேன் அசுவாரஸ்யமாய்.. திருமணம் வரை வந்துவிட்டப் பிறகு நண்பனின் காதலி என்ற பிடிப்பெல்லாம் போய்விட்டது போலிருந்தது.தெரியலை.. மண்டையே வெடிக்குது. அவளை பார்க்க முடியலை.. அம்மா நான் போய்ட்டு பேசறேண்டா ன்னு சொல்றாங்க.. அவளுக்கு என்னை உண்மையா பிடிச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டால்ல என்றான்.

மிக சரி. முப்பத்தைந்து வயது வரை காதலனுக்காக காத்திருந்து எதிர்ப்புகளெல்லாம் சமாளித்து வேறு வழி இல்லாமல் பெற்றோர் சம்மதித்து திருமணம் நடத்திவைத்த பெண்ணை எனக்குத்தெரியும். தாலி கட்டிக்கப்போறது நான் தானே.. என்று அவள் மெல்லிசாய் சொன்னது பெரிய அதிர்வாய் எனக்குள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

மிக கடினமான கட்டம் இது. ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது.

அவ போனா போறா விடுடா. நீ இப்போ அமெரிக்கால வேலை பாக்கறே.. கொஞ்சம் வெளியே போ, வேலைல கவனம் வை. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். வேற சூழல், மனிதர்கள்.. எல்லாம் சரி ஆகிடும் என்றேன்.

என் கணவர் வந்ததும் அவர் பங்கிற்கு காதல் தோல்வி கதைகளெல்லாம் சொல்லி அவனை திசைத்திருப்பிக்கொண்டிருந்தார். இதெல்லாம் வாழ்க்கையில் கட்டங்கள், அனுபவங்கள் என்று ஏதேதோ சொன்னார்.நீ சென்னை ல உக்காந்துகிட்டு என்ன பண்ண போறே? கிளம்பி யூ. எஸ் போ. இல்லேன்னா பெங்களூரு வந்து எங்களோட ரெண்டு நாள் இரு. தனியா உக்காந்துகிட்டு குழம்பாதே என்றார்.

அவள் திருமணத்தை பார்த்துவிட்டு பெங்களூரு வருவதாக சொன்னான்.

இரண்டு நாட்கள் கழித்து இரவு பதினோரு மணிக்கு என் கணவர் எழுந்து நாஸ்ட்ராடமஸ் போல, விமலுக்கு போன் பண்ணுடி என்றார். இந்த ராவேளைக்கு ஏங்க நீங்க வேற என்று திரும்பி படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் மதியம் தொலைபேசி வந்தது நீங்க விமலோட தோழியா? விமல் இறந்துட்டாரு என்றார்கள். ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று அலறினேன். நான் அப்போவே நினைச்சேனே என்று அரற்றினார் என் கணவர்.. எத்தனை அழைத்தும் நான் வரமாட்டேன் அவனை பார்க்க என்று சொல்லிவிட்டேன். அவர் மட்டும் சென்றார். நீ வராததே நல்லது, காண சகிக்கலை என்றார். அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை.

இரவுகளெல்லாம் கண்ணாடி அருகே சென்றால் அவன் விஷ பாட்டிலுடன் என் பின்னே நிற்பது போலவும், ஜன்னல் கம்பிகளின் வெளியிருந்து விஷ பாட்டிலை தூக்கி பிடித்தபடி என்னை எட்டி பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டேயிருந்தது.

பிறகு பதற்றம் குறைந்து, பயம் குறைந்து, பரிதாபம் குறைந்து, பெரும் கோபமாய் உருவெடுத்தது. அவள் திருமணம் முடியும் வரை காத்திருந்து இனி அவள் தனக்கு இல்லை என்று தெளிவாய் புரிந்தபின் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் தனக்கான முடிவை தேடிக்கொண்டவனை நினைத்து வெறுப்பாய் இருந்தது.

நான் இப்படியான அதீத காதலெல்லாம் பார்த்ததே இல்லை. காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும். இன்னும் சற்றே அதிகப்படியாய் நான்கைந்து பெண்களுடனோ ஆண்களுடனோ ஒரே நேரத்தில் காதல் பேசுபவர்களை கூட ஏதோ சில ரசாயன காரணங்கள் என அப்படியா என எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரோ சொல்ல கேட்டேன் சராசரி மனிதனின் வாழ்வில் குறைந்தது பதிமூன்று காதல்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்துபோகுமென..

போன வாரம் அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாய் சேதி கிடைத்தது. மரணங்களும் தோல்விகளும் நிகழ நிகழ காதல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

சென்ற வாரம் விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு காதல் சொட்ட சொட்ட வெளியே வந்தேன். பின்னாலேயே வந்த என் கணவர் பார்க்கிங் லாட் டோக்கன் உங்கிட்டயா இருக்கு என்றார்.. ஐயோ இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படலையா நீங்க என்றேன்..

படம் நல்லாதான் இருந்துது ஆனா ஆட்டோகிராப் மாதிரி இல்லை.. அதுதான் என் டைப். அதுலயும் தானே காதல் இருக்கு என்றார் அப்பாவியாக..

ஏஸி வேண்டாம் என்றுவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டேன். காற்றில் குளுமை ஏறியிருந்தது.

- அனிதா

Friday, March 19, 2010

பயணிக்க மறந்த சாலைகள்..அனன்யாவின் முதல் பிறந்தநாளை எங்கே எப்படி கொண்டாடுவது என்று நீண்ட நாட்களாய் யோசித்துக்கொண்டிருந்தோம்.. எல்லோரும் பொதுவாக செய்வதுபோல் நண்பர்கள் ,சொந்தங்கள் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி பிறகு நார்த் இண்டியன் உணவு வகையோ ,நம்ம ஊர் வாழை இலை பரிமாறலோ வைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.. கிட்டதட்ட ஒரு வருடமாக எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் மாறி மாறி வந்துக்கொண்டிருந்ததால், முதல் பிறந்தநாளுக்கென்று எதுவும் வித்தியாசமாகவே இல்லாதது போல் தோன்றியது. அதுவுமில்லாமல் தம்பி திருமணத்திற்கு வந்த என்னை தூக்கி வளர்த்த எதிர் வீட்டு அக்காக்கள் நீயெல்லாம் குழந்தைல எவ்ளோ குண்டா இருப்பே.. உன் பொண்ணு என்ன ஒல்லியா இருக்கா என்று நான் என் பிள்ளைக்கு சாப்பாடே போடுவதில்லை என்ற ரேஞ்சுக்கு கேட்டுவிட்டு போக, வேறு சிலரோ கருப்பு பொட்டு வெக்கலியா கருப்பு வளையல் போடலியா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

எனக்கு கண், திருஷ்டி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் (God is watching, Good fetches Good, Bad fetches Bad) என்று மட்டும் எதனாலோ அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டதால் கடவுள் என்ற நம்பிக்கையை தவிர வேறு எந்த உலகளாவிய மாயைகளையும் ஆதாரமில்லாமல் பின்பற்ற முனையவில்லை. இப்படியிருக்க, குழந்தைக்கு இதை செஞ்சியா, அதை செஞ்சியா என்ற கேள்விகளுக்கு கேட்பவர் மனம் நோகாமல் பதிலளிப்பதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது..

இதுவாவது பரவாயில்லை.. என் தம்பி திருமணத்தில் மிக அழகான பரிசு வந்திருந்தது.. கண்ணாடி பழக்கூடை.. மிக அழகான வேலைபாடுகளோடு தனித்தன்மையான பரிசு.. பார்த்தவுடன் அப்பா சொன்னார்.. சூப்பரா இருக்கு!! இதே மாதிரி ஒண்ணு நான் ஒருதங்க கிரஹ பிரவேசத்துக்கு போன வருஷம் வாங்கி தந்தேன்!! அந்த ஒருதங்க தான் அந்த பரிசை தந்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. அடப்பாவிகளா.. அட்டைய கூட மாத்தலையே.. என்று அப்பா நொந்துக்கொண்டிருந்தார்.. ஒரு வருடம் பத்திரபடுத்தி கொண்டுவரவும் ஒரு திறமை வேண்டும் என்றேன் நான்.. பொதுவாகவே இம்மாதிரி அழகான பரிசுபொருட்கள் உபயோகிக்க மனது வருவதில்லையாதலால் ஒரு லிஸ்ட் போட்டு யாரார் எது எது கொடுத்தார்கள் என்று குறித்துவைத்தால் பின்னாளில் அவர்கள் விசெஷத்திற்கு வந்த பரிசிலேயே ஏதாவதொன்றை கொடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.. ஆனால் அதையே கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். அந்த பழக்கூடையை எங்கள் வீட்டில் பார்க்கும்போதெல்லாம் ஒரு புன்னகை தவிர்க்கமுடியாததாகிறது..

இதையெல்லாம் யோசித்துவிட்டுதான் எங்காவது வெளியூர் போகலாமே என்று தோன்றியது. நான்கைந்து இடங்கள் யோசித்ததில் குழந்தை நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிராத, வெயில் அதிகமில்லாத நமக்கும் சற்றே பழகிய இடமாக ஓகே ஆனது கொடைக்கானல். என்னுடைய கல்லூரிகள் மற்றும் குடும்ப சுற்றுலாக்கள் என ஐந்து முறை அங்கே சென்றிருந்தபடியால் நம்ம ஊரு என்ற உணர்வு வந்துவிட்டிருந்தது. மிதமான குளிரில் அழகாய் இருந்தது ஊர். சுற்றிப்பார்க்க வேண்டும் என்றதுமே பெரிய அட்டவணை ஒன்றை கையில் கொடுத்தார்கள்.. நாலு பேரு, காலையில ஒன்பது மணிக்கு கிளம்பி பில்லர் ராக்ல ஆரம்பிச்சு சாயங்காலம் அஞ்சு மணிக்கு லேக்ல போட்டிங் ல முடிப்போம். இன்னோவா வரும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்..

சமீபத்தில் ஒரு நண்பருடன் பயணத்திற்கும் சுற்றுலாவிற்குமான (travel vs tour) வித்தியாசம் பற்றி பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..சரி குழந்தை ஒன்று இருக்கையில் ட்ரெக்கிங் போன்ற சாகச வேலைகளெல்லாம் சரிவராது என்று தெரியும். கோக்கர்ஸ் வாக்கில் கேரட் தின்றபடியே நடந்துவிட்டு அடுத்து சென்றது லேக் வியூ பாயின்ட். அங்கே நின்று பார்த்தால் கோடை ஏறி தெரிகிறது.. நான் சலித்துக்கொள்வதை பார்த்த பைனாகுலர் இயக்குபவர்.. கொடைகானல் ல எங்க போனாலும் வியூ பாயின்டுகளும் பள்ளத்தாக்குகளும் தான் இருக்கும் என்றார்.. தெரிந்தது தான். நிறைய முறை பார்த்துவிட்டதாலா அல்லது வெயில் படுத்திக்கொண்டிருந்ததாலா தெரியவில்லை.. சலிப்பாயிருந்தது.. மதியத்திற்கு மேல் நாங்கள் எங்கும் இறங்காமல் நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.. வெறுப்பான ட்ரைவர் பூம்பாறைக்கு வரீங்களா என்றார்..

லிஸ்டில் இல்லாத இடம் என்பதாலேயே உடனே சரி என்றேன்.அது ஒரு சின்ன கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ ஒரு மலர் மலர்ந்திருப்பது போல அத்தனை அழகான மிகச்சிறிய ஊர். போகர் சித்தர் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்ததாகவும், ஒன்று பழநியிலும், ஒன்று இங்கும் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சிலை இருக்கும் கோவில் மிகப்பழமையாக இருப்பினும் சுத்தமாக இருக்கிறது.. இந்த கோவில் உருவாகி அதை மையமாய் வைத்து வீடுகள் இருக்கின்றன.. பழநியில் இருக்கும் சிலை அபிஷேகங்களால் கரைந்துக்கொண்டிருப்பதாகவும் இங்கிருக்கும் சிலை வைத்தது போன்றே முழுதாய் இருப்பதாகவும் இங்கு இருப்பவர்கள் சற்று பெருமையுடனே சொல்கிறார்கள்..நாங்கள் சென்ற நாள் பௌர்ணமி என்றும், வேறு ஏதோ நல்ல நாள் என்றும் சக்கரைப்பொங்கலும் பஞ்சாமிர்தமும் பெரிய பானைகளில் சமைத்துக்கொண்டிருந்தார்கள். சென்னையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் இதையெல்லாம் கேட்டுவிட்டு, அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமா.. ஐயோ பௌர்ணமி அன்னிக்கு போனீங்களா.. நான் பாடல் பெற்ற ஸ்தலம் எல்லாம் தேடி தேடி போறேன் எனக்கு இதெல்லாம் அமைய மாட்டேங்குது என்று கோபித்துக்கொண்டார்..

எனக்கு இத்தனை மகத்துவம் புரியவில்லை.. ஆனால் ஏதோ வித்தியாசமான இடத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வு இருந்தது. எல்லா வீடுகளும் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன.. பக்கத்தில் பூண்டு செடிகள் கண்ணுக்கெட்டியவரை பரவிக்கிடக்கின்றன.. இவர்கள் முக்கிய விவசாயம் பூண்டு தான். பச்சை பூண்டை செடியோடு அன்று தான் முதல் முறை பார்த்தேன். வீட்டிற்குள் மூங்கில் கட்டைகள் கட்டி அதில் இந்த பூண்டி செடிகளை தொங்கவிட்டு புகைபோட்டு காயவைக்கிறார்கள். வேறு எப்படி காயவைத்தாலும் கெட்டுவிடுமாம் பூண்டு. இப்படி புகை போடுவற்காகவே மின்சார இணைப்பை உபயோகிக்காமல் இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. பூண்டு உரிக்க கூட சிரமபட்டுக்கொண்டு நம் மக்கள் ஜிஞ்ஜர் கார்லிக் பேஸ்ட் உபயோகிப்பதை நினைத்துக்கொண்டேன்..
மலைவாழ் மக்களின் பேச்சும் வாழ்கையும் மிக எளிமையாக இருக்கிறது.. பொழுது சாயும் வரை அந்த கிராமத்தையே சுற்றி வந்துக்கொண்டிருந்தோம்.. அந்த இடம் தனக்குள் நிறைய ரகசியங்களை வைத்திருப்பது போலவும் அந்த அரை நாளில் அனைத்தையும் தெரிந்துக்கொண்டுவிட வேண்டும் எனவும் தோன்றிக்கொண்டே இருந்தது.. விடைபெறுகையில் நிறைய அன்பும் பழங்களும் பூண்டும் தந்தார்கள்.

அடுத்த நாள் குழந்தையின் பிறந்தநாள்.. டிராவல் டெஸ்க் மானேஜர் மூலமாக ரிஸார்டின் வேலை செய்பவர்களெல்லோருக்கும் தெரிந்துவிட்டது போலும். நாங்கள் ஆர்டர் செய்திருந்த கேக்கை ட்ரைவரே மூன்று கி.மீ தள்ளி இருந்த கடையிலிருந்து வாங்கி வந்து விட்டார். குறைந்தது 300 ரூ ஆகும் போகவும் வரவும். குழந்தை பிறந்தநாள் இல்ல.. அதான் என்றார் சிரித்துக்கொண்டே.. கேக் வெட்டுகையில் இருபது இருபத்தைந்து பேர் சேர்ந்திருந்தார்கள். பெரும் மகிழ்ச்சியாக இருந்தது..

இனி மறுபடி எப்பொழுது பார்ப்போம் என்றே தெரியாத மக்கள் நடந்துக்கொண்ட விதமும், கனிவும், அக்கறையும் நெகிழச் செய்தது.

“ Direct your gaze outwards to the great world of nature and see man in a living relationship to this great world” என்றார் சமூக சிந்தனையாளர் ருடோல்ப் ஸ்டீனர்..

இயற்கையும், இயற்கை சார்ந்த மனிதர்களும், அழகும் ,குளுமையுமாய் கழிந்த என் மகளின் முதல் பிறந்தநாள் ஞாபக அடுக்குகளில் அழுத்தமாய் அமர்ந்துக்கொண்டது..

-அனிதா

Friday, January 08, 2010

பசித்த நகரத்தில் இருப்பவர்கள்
ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்

ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்

ஆண் தன் தோரணை
கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு
ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்

ஆண் தொலைகாட்சியில்
கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்

உன்னுடனான காமம் சலித்துவிட்டது
என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது
என்றாள் பெண்

மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்

பாழடையத்துவங்கிய வீட்டின்
அலமாரியில் இருக்கின்றன

ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணின் பொம்மையும்

முத்தமிட்டபடி.

-அனிதா

சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Friday, January 01, 2010

2010 - மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைய..

2009 ஆண்டு வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இத்தனை வேகமாக, மகிழ்வாக ஒரு ஆண்டு இதற்கு முன் கழிந்ததாக நினைவில்லை. எட்டு மாத சூல் தாங்கி 2009 க்குள் நுழைகையில் நிறைய சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் மட்டுமே இருந்தன.. குழந்தை பிறக்கும்போது முதல் கவிதை தொகுப்பு கையில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருந்தேன்.. எங்கள் முதல் திருமண நாள் (24.2) அன்று குழந்தை பிறக்கவேண்டுமே என்றும் சின்ன (பெரிய்ய்ய) ஆசை.. முதலாவது நடந்தது. இரெண்டாவது சற்றே ஓவரான ஆசை என்பதால் கொஞ்சம் தள்ளி மார்ச் முதல் நாள் அனன்யா பிறந்தாள்.

கால‌ம் கால‌மாய் வீல் என்று அல‌றிய‌ உட‌னே குழ‌ந்தை பிற‌ப்ப‌தாய் பார்த்து ப‌ழகிவிட்டு இந்த ப‌ன்னிரெண்டு ம‌ணி நேர‌ வ‌லி பெரும் ஆப‌த்து வ‌ந்து விட்ட‌தை போல‌ ப‌த‌ற்ற‌முற‌ச் செய்த‌து. விடிய‌ற்காலை நால‌ரை ம‌ணிக்கு வ‌லி முற்றிலும் நின்றுவிட்ட‌து.. பிற‌கு ஒரு அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்த‌து.. முற்றிலும் இற‌ங்கிவிட்டிருந்த‌ என் வ‌யிறு தானாக‌ முறுக்கி குழ‌ந்தையை வெளியே த‌ள்ள‌த்துவ‌ங்கிய‌து.. யாரோ வயிற்றை பிடித்து கீழ் நோக்கி மெல்ல நீவுவதைப்போன்ற உணர்வு.. என் முழு உட‌லும் குழ‌ந்தையை வெளியே த‌ள்ளுவ‌தில் ஈடுப‌ட‌த்துவ‌ங்கிய‌து பார்த்து விய‌ந்து போனேன். சீரான மெல்லிசை போல‌ ப‌த‌ற்ற‌மே இல்லாம‌ல் அத்த‌னை அழ‌காக வ‌லி இல்லாம‌ல் அந்த க‌டைசி அரை ம‌ணி நேர‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து. அந்த நொடிகளை முழுமையாக உணர்ந்து, ரசித்து, லயித்து,இத்தனை அழகானதா இந்த குழந்தை பேறு என்று இவளை மடியில் கிடத்தியபடி எழுதும் இந்நேரம் கூட சிலிர்த்துக்கொள்கிறேன்.. குழந்தை பிறந்ததுமே திரைக்கு அந்த பக்கம் பரிசோதித்த குழந்தை டாக்டர் " The baby can be with the mother now" என்றதும் அட நான்தான் நான்தான் என்று நினைத்துக்கொண்டேன். அரை மயக்கத்தில் செம சூப்பர் டாக்டர் நீங்க, சான்ஸே இல்ல.. சூப்பரா டெலிவரி பார்த்தீங்க என் குழந்த வந்துடுச்சு என் குழந்தை வந்த நேரம் தான் கலைஞர் உடம்பு சரி ஆகி வீட்டுக்கு போறாரு பாருங்க என்று சென்னை தமிழில் வாயில் வந்த பாராட்டையெல்லாம் பொழிந்துக்கொடிருந்ததும், ரொம்ப பேசறா இவ என்று டாக்டர் பொய் கோபம் காட்டியதும் ரெண்டு நாள் கழித்து சொன்னபோது கூச்சமாக இருந்தது.. நாம நினைச்ச மாதிரியே பொண்ணு பாப்பா பொற‌ந்திருக்காடி என்று குர‌ல் க‌ம்மி தொண்டை அடைக்க‌ என் க‌ண‌வர் என் கைப்பிடித்துக்கொண்ட‌போது அந்த அறை எங்க‌ள் மூவ‌ரையும் அர‌வணைத்துக்கொண்ட‌து.

இதோ இவ‌ள் ந‌ட‌க்க‌த்துவ‌ங்கிவிட்டாள். இந்த‌ ஒரு வ‌ருட‌ம் முழுக்க இலக்கியம் அலுவலகமெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவளுக்காக திறந்திருக்கும் உலகத்திற்காக‌ நிறைய‌ நினைவுக‌ளையும், புகைப்ப‌ட‌ங்க‌ளையும், அனுப‌வ‌ங்க‌ளையும், வீடு நிறைய சிதறிக்கிடக்கும் விளையாட்டு பொருட்க‌ளையும் ச‌ந்தோஷ‌ங்க‌ளையும் சேக‌ரித்த‌ப‌டியிருந்தேன்.

சில உறவுகள் விலகிவிட்டதும், சில உறவுகள் நெருங்கி வந்ததும், பிரியாணிக்கு கத்திரிக்காய் சேர்வை (ஆற்காடு ஸ்பெஷல்) கற்றுக்கொண்டதும் இந்த வருடத்து இன்னும் சில இணைப்புகள்.

நான் யாரென்றே கூட தெரியாவிட்டாலும் என் கவிதைகளுக்கு பின்னூட்டமிட்டும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி என்னை எழுதும்படி உற்சாகமூட்டியும் உரிமையுடன் அறிவுரை வழங்கும் நல்ல நண்பர்களுடன் இந்த 2010க்குள் நுழைந்திருக்கிறேன். மிக மகிழ்வான ஆண்டாய் இவ்வ‌ருடம் அனைவருக்கும் அமைய வாழ்த்துகள்.

-அனிதா