Friday, October 05, 2012

அம்மாவும் நானும் - கொடுத்துச்சென்றதும் பறித்துக்கொண்டதும்..

சில ஆண்டுகளுக்கு முன் இதே நாள் தான் அம்மா என்னை பிரிந்துச்சென்றாள். வாழ்வை எப்படி ஜெயிப்பது என்பதை விடவும் வாழ்வை ரசித்து ரசித்து எப்படி வாழ்வதென்று கற்றுக்கொடுத்தாள். அழகி. பெரிய கண்கள், அதற்கு மேல் பெரிய கண்ணாடி, நிமிர்ந்த நடை என பாலசந்தர் கதாநாயகி போல இருப்பாள். பாடத்தை கஷ்டப்பட்டு படிக்காதே.. உச்சி வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்தபின் ஒரு மண் பானையின் குளிர் நீரை எத்தனை ஆசையோடு மிடறு மிடறாய் அருந்துவாயோ.. அத்தனை ஆசையாய் படி என்பாள். ”ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிற” தாம்டி.. எத்தனை அழகான வரிகள் பாரேன் என்பாள்.. வார்த்தைகளை தேடித்தேடி ரசித்தாள். ரசிக்க கற்றுக் கொடுத்தாள். சினிமா போக மாட்டாள். டீவி பார்க்க மாட்டாள். பாடல்கள் மட்டும் கேட்பாள். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள்.. என் கணக்கு புத்தகத்தை வைத்துக்கொண்டு இது என்னடி ஈகுவேஷன்.. புரியல என்பாள்.. திண்டிவனம் பக்கத்தில் கோவிந்தாபுரத்தில் பிறந்து, பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிப்பெற்று ஸ்டெல்லா மேரீஸிலும் குயீன் மேரீஸிலும் பட்டம் படித்து Railway Protection Force ல் Superintendentஆக பணியாற்றினாள். கல்யாணம் ஆனப்புறம் புருஷன்கிட்ட ரொம்ப அன்பா இருக்கணும். சண்டையெல்லாம் போடக்கூடாது. நிதானமா இருக்கணும் என்பாள்.. அப்படி நிதானிக்க எத்தனை மனமுதிர்ச்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது என்று இப்போது தெரிகிறது.. உன் கணவன் உன்னை கைக்குள் வைத்துத் தாங்கினாலும், நீ பெரிய கோடீஸ்வரியாக ஆகிவிட்டாலும் வேலைய விட்டுடாதே என்பாள். அப்போது எனக்கு இருபத்துமூன்று வயது. அம்மா இறக்கபோகும் தருவாயில் அப்பாவிடம் சிலர் “அவங்க இப்பவே VR வாங்கிட்டாங்கன்னா உங்களுக்கு பத்து லட்சத்துகிட்ட கிடைக்கும். இல்லன்னா ஒண்ணோ ரெண்டோ தான் என்றார்கள்” வேலை அவளோட பெரிய சந்தோஷம். அவ கடைசி வரைக்கும் வேலைல இருக்கணும் என்றுவிட்டார். எக்கசக்க தைரியசாலி அம்மா.. ஒரு முறை ரயில் பயணத்தின்போது மேல் பர்த்திலிருந்து சீண்டிய ஒருவனை காலரை கொத்தாக இழுத்து தரையில் போட்டாள். பிறகுதான் அப்பாவுக்கே சொன்னாள். அடுத்த நிறுத்ததில் ரயில்வே போலீஸ் வந்து அவனை இறக்கிச்சென்றபின் சலனமே இல்லாமல் தூங்கப்போனாள். தங்கத்தின்மேல் துளி கூட ஆர்வமில்லை அம்மாவுக்கு. அவளோடு இருந்த இருபத்துமூன்று வருடங்களில் மூன்றோ நான்கோ முறை தான் நகை வாங்கி பார்த்தேன். செடி வளர்த்து முதல் துளிர் விடுகையில் அந்த வெளிர் பச்சையை அழைத்துக் காட்டுவாள்.. ரோஜா செடி வளர்த்து அந்த பூவை பறித்து வைத்துக்கொண்டு அலுவலகம் ஓடுவாள்.. நிறைய கவிதைகள் எழுதினாள். நிறைய பரிசுகள் வாங்கினாள். அவளை பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருப்பார்களா தெரியவில்லை. அம்மா இறந்த தினம் ஹால் கொள்ளவில்லை. அறைகள் கொள்ளவில்லை. தெருவே கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் மேல் மக்கள்.. கடைசி வரை கலையவில்லை. என் வயசுக்கு இத்தனை ஜனம் பாக்கலடி நான் என்றாள் ஈபீ மாமி. இந்த நிமிடம் வரை பிரேமா பொண்ணு நீ.. அந்த நினைப்போட அவளை மாதிரியே இருக்கணும் நீ என்று நெஞ்சு கனக்க தொண்டை கமர யார் யாரோ சொல்கிறார்கள். இத்தனை ஸ்நேகம் எப்படி வளர்த்தாள்.. எல்லோருக்கும் பிடித்தமாய் எப்படி இருந்தாள்.. நான் மரித்தால் இத்தனை பேர் வருவார்களா என்றெல்லாம் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்.. அவளைப்போலவே அவள் மரணம் நிறைய கற்றுக்கொடுத்தது.. நிறைய துக்கம். பின் நிறைய தெளிவு.. அம்மா கூடவேதான் இருக்கிறாள். என்ன.. அவள் விதவிதமாய் காட்டன் புடவை கட்டும்போது காலடி புடவை நுனியில் மடிப்பு படியவைத்து அழுத்தி சரிசெய்யும் பாக்கியத்தை தான் பறித்துக்கொண்டுவிட்டாள்..