Wednesday, March 26, 2008

வித்யா ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..

திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும், விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும் தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.

போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து, சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம்.

வித்யாவின் வலைப்பூவை(http://www.livingsmile.blogspot.com/ )எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட "இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள். திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள். வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும் வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை. ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.

திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும், கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும் ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள். வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக கடினமான வேலையாகிறது.

வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது "இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் - இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும் நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும் ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.

இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ் என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள். சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும் விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் உணர்ந்திருப்பார்கள்.

நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும், பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின் வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை பூரித்துபோவார்களென தெரியவில்லை.

ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான, மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும் இல்லை சரியாகிடும் என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல், பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும் தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம். விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு செய்தும் காப்பாற்றுவதில்லையா?

திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல் முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.