Tuesday, February 12, 2008
இரு கவிதைகள்
ஏனென்றால்
ஊறப்போட்ட அரைமணியில்
துவைத்து உலர்த்திவிட்டேன்
திரண்டு வரும் மேகம் எந்நேரமும்
கொட்டத்துவங்கும்
அல்லது சட்டென கலைந்தும் போகலாம்
சதை துளைக்கும் வெயில் இறங்கி
ஈரம் உறிந்து வெளுக்கடிக்கலாம்
எத்தனை அழைத்தும் கீழிறனங்காமல்
மொட்டைமாடியிலேயே அமர்ந்திருக்கிறேன்
காரணங்கள் கோர்த்தே சகலமும் செய்யும் என்
தோழிகளுக்கு மட்டும் சொல்கிறேன்
வாகனப் புகையில் திணறித் தப்பித்த காற்று
வறுத்த கடலை வாசம் சுமந்து
என் துணிகளை முதலில் உலர்த்த
இப்போது வரும்
என் மக்கள்
விளம்பரப் பலகைகளை
வாய் பிளந்து வெறித்தபடி நகர்கிறது
இந்த மழைப்பயணம்
கூரைத் தொட்டு துருக்கம்பிகளில் வழிந்து
தொடைநனைக்கும்
ஜன்னலோர ஈரம் உதடு சுழிக்கச்செய்கிறது
மிகமெல்லிய இசையாலும் குறைக்க
முடியவில்லை
அகண்ட தோள் சாய்ந்து மழை ரசிக்கும்
முன்னிருப்பவள் மீதான துவேஷத்தை
பயணச்சீட்டை மோதிர இடுக்கில் சொருகி
இருந்தவளின்
பட்டைச்சரிகைக்கு பொருந்தாத
நிறக்கலவைப்பற்றி
சொல்லலாமென்றிருந்தபோது
மணற்சூடு அடங்காத குறுகியத்
தெருமுனையில்
நலுங்காமல் இறக்கிவிட்டு
மற்றங்களின்றி பயணிக்கிறார்கள்
இத்தனை நேரமும் தனிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த
என் மக்கள்
நன்றி : புதிய காற்று
Subscribe to:
Posts (Atom)