Monday, January 19, 2009
விகடனில் சில கவிதைகள்..
நினைக்காத வேறொன்று
எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.
ஹோட்டலில் தான் தவறவிட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுபவரும், காபி ஆற்றுபவரும்,
பார்சல் கட்டுபவரும் கூடி பேசியபடியிருந்தார்கள்
கிடைக்கவேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்தபடி வந்துவிட்டேன்.
சம்பாஷணைகளில் கலந்துக்கொள்ளாமல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்தவன்
அன்றிரவு கனவில் வந்தான்.
ரகசியம்
யாரிடமும் சொல்லாதே என்று
அவளைப் பற்றி சொன்னான் இவன்.
ரகசியமாம்.
எனக்குத் தெரிந்தவள்தான்.
உண்மையா என்றேன் அவளிடம்
இல்லையே எனத் துவங்கியவள்
யார் சொன்னது என சேர்த்துக்கொண்டாள்.
இவன் சொன்னதாய் அவளிடம் சொல்லவில்லை
அவளிடம் கேட்டது இவனுக்குத்தெரியாது
பெரிய ரகசியத்தின் வயிறு கிழித்து வெளியேறிய
இந்த குட்டி ரகசியங்களை என்ன செய்வது?
அன்பின் விலைகள்
எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.
- அனிதா
நன்றி - ஆனந்த விகடன்
Subscribe to:
Posts (Atom)