Saturday, July 28, 2012
இன்று பெங்களூருவில் மழை..
லேசான தூறலாகத்தான் துவங்கியது.. எட்டி பிடிக்கிற தூரம் தானே என்று கிளம்பிவிட்டேன். தூறலில் வண்டி ஓட்டுவது எத்தனை பெரிய விடுபடல்.. நம்மிலிருந்தே.. நானிலிருந்தே.. இந்த பாழாய் போன வெள்ளை சட்டை போலிஸுக்காக ஹெல்மெட் போடவேண்டியாயிற்று.. இருந்தாலும் பெங்களூருவில் தூறலில் வண்டி ஓட்டுவது அடிக்கடி நிகழ்வது.. தவிர்க்க நினைப்பவர்கள் கூட முடியாது.. ஏதாவது இளையராஜா பாடலோ பழைய ஹிந்தி கம்போஸிங்கோ நாக்கின் நுனியில் தன்னனனாவாகவோ ம்ம்ம்வாகவோ வந்து அமர்ந்துகொண்டுவிட்டால் அந்த தூறல் பொழுது இன்னும் கோலாகலமாகிவிடுகிறது.. இன்று மதியமே இத்தனை மந்தமான மேகங்கள் கவிந்திருந்தன.. ஒரு பரபரப்பான நகரத்தின் எந்த நேரத்திலும் பெரும் மழையில் வசமிழந்து நனைவது முடிவதே இல்லை. ஏதோவொரு அச்சம் இருக்கவே செய்கிறது.. என்ன நினைப்பார்களோ என்று.. நினைப்பவர்கள் யார்? எதுவரை கூடவருவார்கள் என்று இன்னும் கொஞ்சம் யோசித்தால் சிரிப்பு வந்துவிடுகிறது. இருந்தும் தயக்கம் முழுக்க அகலுவதில்லை. ஒரு பெருமழைநாளின் இருண்ட பொழுதில் அம்மாவோடு தண்ணீர் சொட்டச் சொட்ட அரை கி.மீ நடந்ததும், கெண்டைக்கால் மூழ்கிவிட்ட நீரில் இன்னும் இன்னும் நடந்துக்கொண்டேயிருக்க நினைத்ததும் என் பதினைந்து வயதில். எத்தனை துடைத்துக்கொண்டாலும் அந்த ஈரம் காயவில்லை. பிறகொரு நாள் க்ரிஸ்டின் காலேஜிலிருந்து தொப்பலாய் நனைந்தபடி மழை சுவடே இல்லாத வீட்டு வாசலில் வந்து நின்றபோது அதெப்படி அங்க பெய்யும் இங்க பெய்யலை என்ற கேள்விக்கு புன்னகைக்க மட்டும்தான் முடிந்தது.. தெருமுனை வரை வந்து பத்திரமாய் விட்டுச்சென்ற கல்லூரி காதலன் மழை.
இன்று அப்படி ஒரு நாள். தூறல் செல்லச் செல்ல வலுக்கத்துவங்கியது. வண்டியை ஓரம்கட்டுவது சராசரி மனிதன் செய்வது. ஆனால் எல்லா நேரமும் சராசரியாய் இருக்க முடிவதில்லை. சமயத்தில் பித்து பிடித்துக்கொள்கிறது. தலையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒடுபவன் முட்டாளாய் தெரிகிறான். கடைகளின் வாசல்களில் நிற்பவர்களெல்லாம் ப்ளாஸ்டிக் மனிதர்கள். நம்மை லூஸு போல பார்ப்பவர்களெல்லாம் வாழத்தெரியாதவர்கள். மழை மயக்கம். தூறலின்போதிருந்த பாடல்களும் உதட்டிலிருந்து வழிந்தோடிவிட மழை வலுக்க வலுக்க அங்கே பாடல் இல்லை, வண்டி இல்லை, நானுமே இல்லை. மழை முழுவதுமாய் ஆள்கிறது. ஒரு பெரிய வேகத்தடையை மிக அருகில் வந்ததுமே பார்த்து ப்ரேக் பிடிக்க பின்னாடி டயர் இங்குமங்குமாய் அல்லாடி நிலைக்கு வருகிறது. பிறகு மீண்டும் வேறு லோகம். வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வருகிறவர்கள் அங்கெல்லாம் எப்படி இருக்கு இங்கெல்லாம் எப்படியிருக்கு என்று ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள்
. மழை நகரத்தில் பெய்யவில்லை.மூளைக்குள். ராஜாங்கம் செய்கிறது. வெளியே இருப்பவனுக்கெல்லாம் என்ன தெரிகிறது.. அது வேறு மழை உலகம்.அந்த சிக்னலில் வந்து நின்ற நேரம் 40 செகண்ட் காட்டியது. மனம் பூமிக்கு வந்துவிட்டது. ஆடைகளை ஈரம் பிரித்து சரி செய்துக்கொண்டேன். அருகில் என்னை போலவே ஹெல்மெட் போட்ட பெண் ஸ்கூட்டியில் இருந்தாள். என் முன்னே பைக் ஆண்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் மழையில் நனைய தயங்கியவன்போல கர்சீப் எடுத்து தலையில் போட நினைத்தான். இந்த மழைய கர்சீப் தடுக்குமா.. அவன் நனைய விரும்பினான். விரும்புவதை மறைத்துக்கொள்ள பிரயத்தினப்பட்டான். சட்டென லேசாகி மீண்டும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டான். குதூகலித்தான். அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். அங்கே நனைந்துக்கொண்டிருந்தவர்களெல்லோரும் சிரித்தோம். பிடித்தமானது பிடித்த மக்கள் எல்லோரும் நண்பர்கள். பித்துப்பிடித்தவர்கள். நாற்பது நொடிகளில் நினைவிலிருந்து மறையாத ஸ்நேகம்.
யுத்தக்களம் போல ஓவென்று இறைஞ்சியபடி சீறிக்கொண்டு பறந்த வாகனங்களில் எல்லாம் மழை. அந்த நீண்ட தார் ரோடு மீளவே முடியாத உணர்வுகளை தன் மேல் போர்த்திக்கொண்டே என்னோடு வந்தது. மழைக்காதலர்கள் பாக்கியவான்கள். இன்று பெங்களூருவில் மழை..
Subscribe to:
Posts (Atom)