
காத்திருக்கவோ கிளம்பிப் போகவோ சொல்வதற்கு
யாருமில்லாத சுவடுகளற்ற மணலில்
மாராப்பின் பிரக்ஞைகளற்று
கடல் வெறித்துக்கொண்டிருக்கிறேன்
ஒழுக்கங்களின் பட்டியல் குறுகிக்கொண்டிருப்பினும்
நிலவு படிந்திருக்கும் நீரின் வெம்மையை மீறிய
அடி ஆழத்தின் குளுமை புரியும் எனக்கு.
உன் நல விசாரிப்பைப் போலவே செயற்கையாய்
பெயரில்லாத இந்தக் கடலின் மறுகரைக்கு
ஏதேனும் பெயர் வைத்திருக்ககூடும்
வாழ்தலை சீராக்குவதில் முனைந்திருப்பவர்கள்.
பிரிதொரு நாளின் வெப்பம் தணியத் துவங்கி
நக இடுக்கின் மணல் பிரித்தெடுக்கையில்
பிரியங்களை நினைத்துக்கொண்டவளாய்
கடல் அள்ளி அகண்ட பரப்பில்
மடித்தெடுத்துக்கொண்டு புறப்பட்டேன்
இடம்பெயர்தலின் கேள்விகள் ஏதுமின்றி
புரண்டு படுக்கிறாள்
இன்னும் கனவு கலையாத கடற்கன்னி.
- அனிதா
நன்றி : புதிய பார்வை
2 comments:
வழக்கம்போல வாழ்த்துகள் அனேகமாக எல்லா சிற்றிதழ்களிலும் உங்கள் படைப்புகள் வெளிவந்தாயிற்று.
இன்னும் நிறைய எழுதுங்கள்
என்ன சொல்ல! மிக அழகாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
அனுஜன்யா
Post a Comment