அடிமைகளை உருவாக்குவது எப்படி | ||||
| ||||
அடிமைகளை உருவாக்குவது எப்படி மிக எளிது. இன்று இந்த அறையில் இன்று இந்த அறையில் சில்லு சில்லாய் அப்பாவை முந்திக்கொண்ட தம்பி பெற்ற பரிசுகளும் பட்டங்களும் என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும் மீதமிருக்கும் சில நன்றி : உயிரோசை |
Tuesday, October 07, 2008
இரு கவிதைகள் - உயிரோசை
Saturday, October 04, 2008
பனிக்குடம் - சில கவிதைகள்
1. தீங்கு
குரங்கொன்று ஒரு நாள்
கூரைமேல் குதித்தது
அங்கிருந்து வேப்பமரமேறி
தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி
வீட்டிற்குள்ளும் வந்தாயிற்று
என் பங்கு சோறு உண்டு
காது வரை போர்வையிழுத்து
கதகதப்பாய் உறங்கும்
இப்பொழுது இருதயம் கிழித்து
கறி தின்கிறது
வலிக்கும் என்றறியாததாய் நடித்தபடி
2. சேறு
களைத்துப் போய் வீடு நோக்கி
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கான சேற்றில்
இதன் அருவருப்பும் அழுக்கும்
இப்பொழுது பழகிவிட்டது
முதல் முதலில் வலது கால் வைத்த
சிலிர்ப்பும்
மிருதுவாய் தனக்குள் இழுத்த சுகமும்
இப்பொழுது இல்லை.
சில நேரம் குழைவாய்
சில நேரம் காய்ந்தும் இறுகியும்
பல நேரம் உடலெங்கும் வழிந்து
களையவும் பொறுக்காது
ஆடைகளை அழுக்காக்கும்.
பல நூறு ஆண்டுகளாய்
என்னை போல சேறு பழகியவர்கள்
என்னைத் தேற்றுகிறார்கள்
காரில் செல்லும் தோழி
ஏளனமாய் பார்த்துக் கடக்கிறாள்
அவள் இறங்க காத்திருக்கிறது
அவளுக்கான சேறு.
3.முத்தங்களாலான கூட்டில்
முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்
திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது
என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை
தொடர்ந்துபோக சிரமமாகிவிடுகிறது
ஒவ்வொரு முறையும்
உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவுகூறுகின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும்.
4.தங்கத்தோடு
பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறநகர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.
தங்கத் தோடு தொலைந்துவிட
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.
5.மரணம் பழகியவள்
கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு
ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது
விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்
நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வழிய கண் கசிந்த
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த
சின்ன மகள்
எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.
6.சுயம்
தேவையற்ற கணங்களில்
என் தாய்மை விழித்துக்கொள்கிறது.
தலை கோதி முகம் தடவி
தொடை சாய்த்து சேர்த்தணைத்து
வேர்களுக்கெல்லாம் நீரூற்றினாலும்
பூ பறிக்கையில் சிறிது சதையும்
வழித்துக்கொண்டு வருகிறது
தெரிந்தே தொடரும்
பகிர்தலுக்கான ஆயத்தங்கள்
முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை
எனக்குத் தெரியும்
இப்பொழுதொன்றும் அவசரமேயில்லை
உலகில் மிஞ்சிய கடைசி ஆணும்
வற்றும் கடலின் கடைசி திவலை நீரும்
தனக்காய் பறிக்கையில்
தாயுள்ளமாவது மண்ணாவது.
நன்றி : பனிக்குடம் காலாண்டிதழ்
Subscribe to:
Posts (Atom)