Tuesday, October 07, 2008

இரு கவிதைகள் - உயிரோசை


அடிமைகளை உருவாக்குவது எப்படி
அனிதா




அடிமைகளை உருவாக்குவது எப்படி

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

இன்று இந்த அறையில்

இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்


உடைந்ததில் தேறியவ‌ற்றை
எடுத்துப் போக வந்துவிட்டார்கள்
பிரிய‌த்துக்குறிய‌வ‌ர்க‌ள்

அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய அள்ளிப்போனான்

பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப் புத்தகமும்
அப்பாவுக்கு

என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு மறுநாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு

மீத‌மிருக்கும் சில‌
சித‌றுண்ட‌ நான்
சித‌றுண்ட‌ நீ
கொஞ்ச‌ம் ர‌த்த‌ம்

நன்றி : உயிரோசை

19 comments:

நந்தா said...

உயிரோசையில் வந்ததை நான் பார்க்க வில்லை. நல்ல கவிதைகள்.

http://blog.nandhaonline.com

MSK / Saravana said...

முதலில் வாழ்த்துக்கள் அனிதா..

MSK / Saravana said...

"அடிமைகளை உருவாக்குவது எப்படி"

அருமையான கவிதை.. பலபேர் இந்த மாதிரி அடிமைகளை உருவாக்கி கொள்கிறார்கள் அன்பு, காதல் என்கிற பெயரில். இரையாகும் அடிமைகள் தான் பாவம்.. அதை நினைத்தீர்களா.. அடிமைகளின் வேதனையும் வலியும்..

MSK / Saravana said...

"இன்று இந்த அறையில்"
ரொம்ப நல்லா இருக்கு அனிதா இந்த கவிதை..
ஒவ்வொரு வரியும் நிதர்சனம்..

//மீத‌மிருக்கும் சில‌
சித‌றுண்ட‌ நான்
சித‌றுண்ட‌ நீ
கொஞ்ச‌ம் ர‌த்த‌ம் நன்றி//

ஆனால் "சித‌றுண்ட‌ நீ" இந்த வரி என்ன சொல்கிறது.??? யாரந்த "நீ"???

ஸ்ரீராம் பொன்ஸ் said...

இரண்டு கவிதைகளுமே அருமை..

//ஆனால் "சித‌றுண்ட‌ நீ" இந்த வரி என்ன சொல்கிறது.??? யாரந்த "நீ"???//

நண்பன் சரவணின் இந்த கேள்விக்கான பதில் சங்கடமானது என்று புரிகிறது..

Anonymous said...

nalla iruckku....

Anonymous said...

நல்லா இருக்குங்க அனிதா.

கென் எழுதிய கட்டுரை ஒன்றில் உங்கள் மரணம் பழகும் மனிதர்கள் கவிதையை மேற்கோளிட்டிருக்கிறார்.

அதன் மூலம்தான் இங்கு வந்தேன்.

மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

Venkata Ramanan S said...

அத்துனையும் வலி!!!! அற்புதம் !!!!

-ganeshkj said...

அடிமைகளை உருவாக்குவது எப்படி கவிதை வெகுவாக இரசித்தேன். I just thought "how true".

ஒரு வரி புரியவில்லை -
"வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்" ??
புரிந்த வரையில் சரியென்றால் மனைவியை அடிமையாக நடத்துபவர்களுக்கு பிள்ளைகள் பதிலடி கொடுக்கவே செய்கிறார்கள்.

Bee'morgan said...

வாழ்த்துகள் அனிதா.. இரண்டுமே அருமை.. முதல் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு ஆழத்துடன் செதுக்கியிருக்கிறீர்கள்.. மனதைத் தொட்டது..

su.sivaa said...

அடிமைகளை உருவாக்குவது எப்படி' அழகான படைப்பு. கசங்கிய புன்னகையாய் ஒவ்வொரு வரியும் மனதைச் சுடுகிறது. வலிமையான கவிதை.
திறனில் வளர்ந்த பெண் படைப்பாளர்கள் தொடக்கம், வளரும் பெண் படைப்பாளர்கள் வரை குடும்பம், உறவு, அன்பு, கணவன், காதல் போன்ற அமைப்புகளின் நிலைதொடர்கான எதிர்மறையான படைப்புக்கள் மிகுதியாய் பதிவாகிவருவதுபோல் ஒரு தோற்றம் உருவாகி வருகிறது. உறவுகளின் அமைப்புமுறை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்துவரும் காலச்சூழலில். வலிமையும், உறுதியும் மிக்க இதுபோன்ற கவிதைகளின் தொடர்த் தாக்கம் ...... விழிப்புணர்வா?

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

ஜீவா said...

அனிதா ,

// அடிமைகளை உருவாக்குவது எப்படி ////

வன்மையாக மறுக்கிறேன் . வெறும் கவிதை எழுத வேண்டும் என்னும் எண்ணத்தில் உங்கள் கவிதை. காதலுக்கு இத்தனை மோசமாய் ( வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்த மனம் வரவில்லை) சொல்ல முடியாது. உங்கள் தவறான பார்வைக்கு காரணங்கள் இரண்டு
1. நல்ல காதலை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை அல்லது
2.உங்கள் கவிதைகளை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்னும் போதை ...

ஜீவா said...

அனிதா ,

/// இன்று இந்த அறையில் ///

தயவு செய்து வாழ்கையும் ,கவிதையும் தனித்தனியா பார்காதிர்கள் .முடிவில் வெறும் கவிதையும், ஏதுமற்ற பாராட்டுகளும் தான் மிஞ்சும் . வித்தியாசமாய் எழுத வேண்டும் என்பதற்க்காக பார்வைகளை சிக்கலாக்க வேண்டாமே. ஜீவன் gg-mathi.blogspot.com

Unknown said...

adimaikal ....... very nice anitha

Anonymous said...

அனைவருக்கும் நன்றி!

ஜீவன் :

அடிமைகள் கவிதை புனிதமான காதல் பற்றியதே இல்லை. சொல்லப்போனால் காதல் பற்றியதே கூட இல்லை.
அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் அடிமைகளாய் மாறிக்கொண்டிருப்பதையும் பலரும் உணர்வதில்லை அல்லது ஒப்புக்கொள்வதில்லை.
உணர்ச்சிப்பூர்வமான உண்மையான காதல், ஏமாறாத, ஏமாற்றாத குற்றயுணரர்வற்ற மனம் இதெல்லாமும் தாண்டிய பல பெயரிடப்படாத உறவுகள் இருக்கின்றன.
அவற்றின் குரூரத்தையே இங்கு பதித்திருக்கிறேன்.
எல்லாமே நல்லது அல்லது எல்லாமே கெட்டது என்றில்லாமல் இவைகளை மீறி நீங்கள் சொல்லும் நல்ல காதலை பிரித்துப்பார்த்து நிறையும் பக்குவம் எனக்கிருக்கிறது.

மற்றபடி, கவிதை எழுதினாலும், மொக்கை பதிவு எழுதினாலும், எல்லோரும் படிக்கவேண்டும் என்கிற போதை எல்லோருக்குமே இருக்குகிறது. நான் மட்டும் விதி விலக்கா என்ன்?

நன்றி
அனிதா

Anonymous said...

/தயவு செய்து வாழ்கையும் ,கவிதையும் தனித்தனியா பார்காதிர்கள்/

வாழ்கையையும் ,கவிதையையும் தனித்தனியாக‌ பார்காததால் தான் இந்த கவிதையே உருவாகி இருக்கிறது.
சிக்கல்களே இல்லாமல், போலி பூச்சுக்கள் இல்லாமல் வாழ்க்கை அத்தனை எளியதாக நகர்கிறது என்றால், வாழ்த்துகள்.

நன்றி
அனிதா

Muthusamy Palaniappan said...

Is it "பிரிய‌த்துக்குறிய‌வ‌ர்க‌ள்" or "பிரிய‌த்துக்குரியவர்கள்"...?

Kavithai Nanru.!

மதன் said...

இரு கவிதைகளும் நன்று..!