Monday, April 12, 2010

நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..





போன வருடம் நண்பன் ஒருவன் தொலைபேசினான்.

அனிதா நான் விமல் பேசறேன்..
யேய் என்னடா சென்னை வந்திருக்கியா..
ஆமாம் போன வாரம்..
இப்போ தானே போனே ஆறு மாசம் கூட ஆகலையே என்ன ஆச்சு?
ப்ரியாவுக்கு கல்யாணமாம்..

ஓ ப்ரியா.. காதல். நான்கு வருடங்கள் இருக்கலாம் இருவரும் காதலிக்கத்துவங்கி.
இவன் எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பனாதலால் எங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றபோது, ப்ரியாவுக்கும் நேரா வந்து குடுங்களேன், சந்தோஷப்படுவா என்றான்.
அது தான் அவளை நான் பார்த்த ஒரே தடவை. அழகு தான். கண்கள் பெரியதாய் இருந்தன. கொஞ்சம் முறைப்பது போல் கூட நினைத்தேன். மலர்ந்து பேசினாள். அவன் அருகாமையை விரும்புகிறவளாயிருந்தாள். ஏதாவது சொல்லிவிட்டு என்ன சொல்றே விமல்.. என்று அடிக்கடி கேட்டாள்..

அவள் ஒரு ஆல்பம் வைத்திருந்தாள். அவளுடைய நண்பர்களின் புகைப்படங்களெல்லாம் சேகரிக்கும் பொழுதுப்போக்கு இருந்தது அவளுக்கு. நிறைய முகங்கள். பாஸ்போர்ட் போட்டோக்கள் நிறைய இருந்தன. எனக்கு பரிச்சயமான முகம் ஏதாவது தெரிகிறதா என்று புரட்டினேன்.. எதுவுமில்லை. உங்க கல்யாணமானதும் உங்க ரெண்டு பேரு போட்டோவும் தாங்க என்றாள். கண்டிப்பா என்றுவிட்டு கிளம்பினோம்.

அவளுக்கு தான் திருமணம். இனி சரிவராது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினாளாம். இவன் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் தொலைபேசிகளுக்கும் பதில் இல்லையாம். ஒரு வாரம் முன்பு தான் நண்பன் ஒருவன் சொன்னானாம்.. அவளுக்குத் திருமணம் என்று. அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.

என்னவாம் அவளுக்கு என்றேன் அசுவாரஸ்யமாய்.. திருமணம் வரை வந்துவிட்டப் பிறகு நண்பனின் காதலி என்ற பிடிப்பெல்லாம் போய்விட்டது போலிருந்தது.தெரியலை.. மண்டையே வெடிக்குது. அவளை பார்க்க முடியலை.. அம்மா நான் போய்ட்டு பேசறேண்டா ன்னு சொல்றாங்க.. அவளுக்கு என்னை உண்மையா பிடிச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டால்ல என்றான்.

மிக சரி. முப்பத்தைந்து வயது வரை காதலனுக்காக காத்திருந்து எதிர்ப்புகளெல்லாம் சமாளித்து வேறு வழி இல்லாமல் பெற்றோர் சம்மதித்து திருமணம் நடத்திவைத்த பெண்ணை எனக்குத்தெரியும். தாலி கட்டிக்கப்போறது நான் தானே.. என்று அவள் மெல்லிசாய் சொன்னது பெரிய அதிர்வாய் எனக்குள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

மிக கடினமான கட்டம் இது. ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது.

அவ போனா போறா விடுடா. நீ இப்போ அமெரிக்கால வேலை பாக்கறே.. கொஞ்சம் வெளியே போ, வேலைல கவனம் வை. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். வேற சூழல், மனிதர்கள்.. எல்லாம் சரி ஆகிடும் என்றேன்.

என் கணவர் வந்ததும் அவர் பங்கிற்கு காதல் தோல்வி கதைகளெல்லாம் சொல்லி அவனை திசைத்திருப்பிக்கொண்டிருந்தார். இதெல்லாம் வாழ்க்கையில் கட்டங்கள், அனுபவங்கள் என்று ஏதேதோ சொன்னார்.நீ சென்னை ல உக்காந்துகிட்டு என்ன பண்ண போறே? கிளம்பி யூ. எஸ் போ. இல்லேன்னா பெங்களூரு வந்து எங்களோட ரெண்டு நாள் இரு. தனியா உக்காந்துகிட்டு குழம்பாதே என்றார்.

அவள் திருமணத்தை பார்த்துவிட்டு பெங்களூரு வருவதாக சொன்னான்.

இரண்டு நாட்கள் கழித்து இரவு பதினோரு மணிக்கு என் கணவர் எழுந்து நாஸ்ட்ராடமஸ் போல, விமலுக்கு போன் பண்ணுடி என்றார். இந்த ராவேளைக்கு ஏங்க நீங்க வேற என்று திரும்பி படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் மதியம் தொலைபேசி வந்தது நீங்க விமலோட தோழியா? விமல் இறந்துட்டாரு என்றார்கள். ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று அலறினேன். நான் அப்போவே நினைச்சேனே என்று அரற்றினார் என் கணவர்.. எத்தனை அழைத்தும் நான் வரமாட்டேன் அவனை பார்க்க என்று சொல்லிவிட்டேன். அவர் மட்டும் சென்றார். நீ வராததே நல்லது, காண சகிக்கலை என்றார். அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை.

இரவுகளெல்லாம் கண்ணாடி அருகே சென்றால் அவன் விஷ பாட்டிலுடன் என் பின்னே நிற்பது போலவும், ஜன்னல் கம்பிகளின் வெளியிருந்து விஷ பாட்டிலை தூக்கி பிடித்தபடி என்னை எட்டி பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டேயிருந்தது.

பிறகு பதற்றம் குறைந்து, பயம் குறைந்து, பரிதாபம் குறைந்து, பெரும் கோபமாய் உருவெடுத்தது. அவள் திருமணம் முடியும் வரை காத்திருந்து இனி அவள் தனக்கு இல்லை என்று தெளிவாய் புரிந்தபின் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் தனக்கான முடிவை தேடிக்கொண்டவனை நினைத்து வெறுப்பாய் இருந்தது.

நான் இப்படியான அதீத காதலெல்லாம் பார்த்ததே இல்லை. காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும். இன்னும் சற்றே அதிகப்படியாய் நான்கைந்து பெண்களுடனோ ஆண்களுடனோ ஒரே நேரத்தில் காதல் பேசுபவர்களை கூட ஏதோ சில ரசாயன காரணங்கள் என அப்படியா என எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரோ சொல்ல கேட்டேன் சராசரி மனிதனின் வாழ்வில் குறைந்தது பதிமூன்று காதல்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்துபோகுமென..

போன வாரம் அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாய் சேதி கிடைத்தது. மரணங்களும் தோல்விகளும் நிகழ நிகழ காதல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

சென்ற வாரம் விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு காதல் சொட்ட சொட்ட வெளியே வந்தேன். பின்னாலேயே வந்த என் கணவர் பார்க்கிங் லாட் டோக்கன் உங்கிட்டயா இருக்கு என்றார்.. ஐயோ இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படலையா நீங்க என்றேன்..

படம் நல்லாதான் இருந்துது ஆனா ஆட்டோகிராப் மாதிரி இல்லை.. அதுதான் என் டைப். அதுலயும் தானே காதல் இருக்கு என்றார் அப்பாவியாக..

ஏஸி வேண்டாம் என்றுவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டேன். காற்றில் குளுமை ஏறியிருந்தது.

- அனிதா

9 comments:

Venkata Ramanan S said...

Ever touchin..

The last few lines cant get better...Pity your friend.. She doesnt deserve him. Gonna miss HIM for the rest of her life. Mark my words .. Well written.. Kudos

Naresh Kumar said...

//ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது//

மிக சிக்கலான தருணந்தான்... உண்மையோ, புனைவோ அல்லது புனைவு கலந்த உண்மையோ எப்படியிருந்தாலும் உங்கள் பதிவு அருமை...உளவியல் ரீதியாக அவளை இழந்த சோகம் மட்டுமல்ல, நிராகரிக்கப் பட்டதின் அதும் முழுக்க நம்பிய, விரும்பிய, எதிர்பார்த்த ஒருவர் நிராகரிக்கும் போது கிடைக்கும் வலியும் பெரும்பங்காற்றியிருக்கும்...


இதுக்கு இந்த தலைப்பு வைக்க என்ன காரணம்???

butterfly Surya said...

தற்கொலையும் ஒரு வித நம்பிக்கையேன்னு ஓஷோவின் வாக்கியம் நினைவுக்கு வருகிறது..

MSK / Saravana said...

:(
speechless..

மோட்டார்சுந்தரம்பிள்ளை said...

காதலுக்கான வரையறையை பொதுமைப்படுத்திட முடியாது என்பதாய் நான் புரிந்துக்கொண்டேன்.
தனி நபர் மனம் சார்ந்ததாக

உங்களின் கடைசி வரிகள் நிதர்சனம்

வாழ்த்துகள் நல்ல கதைக்கு

Madumitha said...

அந்த நண்பர்
வாழ்ந்து காட்டி
பழி தீர்த்திருக்கலாம்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

manudapriyan said...

/காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும்./ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்

விஜய் மகேந்திரன் said...

காதல் காதல் போயின் சாதல் ,என்ன இது ?வாழ்க்கை.