Monday, December 26, 2011

வெந்நீர் ஊற்றுகள்



சந்திக்க விருப்பமற்ற ஒருவர்
தான் சந்திக்க தேவையற்ற ஒருவரை
பழைய மரப்பாலமொன்றின் நடுவே
தவிர்க்கவியலாமல் பார்க்கும்படியாயிற்று

நலமா நலம்
நலமா நலம்
தேவையற்ற விசாரிப்புகள்
தெரிந்த பதில்கள்

தத்தம்
புகழை
வெற்றிகளை
கம்பீரத்தை
காதல்களை
அவசரமாய் பிரஸ்தாபிக்கிறார்கள்

வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி
யாருக்கும் எட்டும்முன்னே
பாலத்தின்மேல் தெறித்து உடைகின்றன

வெந்நீர் ஊற்றொன்று
தடையமற்றுத் தூர்ந்ததுபோன்ற வெறுமை சூழ
வந்த வழியே சோர்ந்துத் திரும்பிச்செல்கிறார்கள்

வீட்டின் சுவர்களுக்குள்ளும்
தடித்த போர்வைக்குள்ளும்
வியர்த்தபடி கழிகிறது நீண்ட இரவு

அருவருப்பு தாங்காத மரப்பாலம்
உடைந்து
தண்ணீரில் உருண்டோடுகிறது.

-அனிதா

8 comments:

shalom said...

GOOD ONE ANI !

sundar said...

அதன் மனம் உடையும் போதே மரப்பாலம் உடைந்திருந்தால் அவர்களை தண்டித்த மாதிரியும் இருக்கும். தாமதமானதால் செய்யாத தவறுக்கு சிலுவை சுமந்த மாதிரி ஆகி விட்டது

நன்றாக வந்திருக்கிறது கவிதை

ராஜா சந்திரசேகர் said...

அனிதா நுட்பமான கவிதை ஆழமான பயணம் மரப்பாலம் நல்ல குறியீடு இது போன்ற மனநிலைகளை எழுத்தில் கொண்டுவருவது நல்ல கவனிப்பு.

மோட்டார் சுந்தரம் பிள்ளை said...

பழைய மரப்பாலம் - வியர்த்த உறக்கமில்லாத இரவு

நல்லாயிருங்குங்க

butterfly Surya said...

அருமை.

muthukrishnan said...

arumaiyana varikal

கதிர்பாரதி said...

நுட்பமான அவதானிப்பு. கச்சிதமான சொற்கட்டு

-ganeshkj said...

"வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி
யாருக்கும் எட்டும்முன்னே
பாலத்தின்மேல் தெறித்து உடைகின்றன"

:) மிகவும் நிஜமான வரிகள்.