Wednesday, November 29, 2006

வழியும் வெறுமைகள்

சுடுமணற்பாலையில்
வானம் பார்த்து படுத்திருக்கிறேன்
சீரான புற்பரப்பை விடவும்
பூக்கள் நிறைந்த வனங்களை விடவும்
நிரந்தரமானவை பாலைகள்
விரல் வழி வெம்மை உணர்ந்தபடி
கரிப்பேறிய கோடுகளோடு பயணிக்கிறேன்
தோல் வெடித்து
கசியத்துவங்கிய ரத்தத்தின் நெடி
வெளியெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
திசைகளற்ற மணற்பரப்பில்
திசைத்திருப்ப ஒன்றுமில்லை.
நிகழவே இயலாத ஏதோ ஒன்றுக்காய்
நொடிகளை நிறுத்தி காத்திருக்கிறேன்
மேடுகள் அழிந்து மேடுகள் உருவானபடி இருக்க
நீ வரவேயில்லை
இதயங்களின் கதகதப்பில் அடைகாக்கபடும்
என் கவிதைகளின் முதல் வாசகனுக்கு
என்னை எப்போதும் புரியபோவதில்லை

Friday, November 17, 2006

கோள்களின் நிழல்கள்

நினைவிருக்கிறதா உனக்கு?

பின்னோக்கிய யுகங்களின்
ஒரு பிரபஞ்ச வெளியில்
நம் முதல் சந்திப்பை

கிரகங்களின் இடுக்குகளில் அமர்ந்து
நூற்றாண்டுகளாய் தொடர்ந்த பேச்சுக்களை
இரண்டாவது பால் வீதி முனையின்
விருப்பமில்லா விடைபெறுதல்களை

தேகங்கள் மாறி மாறி நுழைந்தும்
சலிக்காத கண்ணாமூச்சிகளை
பிறந்ததுமே தேடத் துவங்குகிறேன்
உன்னை ஒவ்வொரு முறையும். இம்முறையும்.

ஜனனங்கள் பலவாகி ரேகைகள் மாறினும்
இப்பொழுதும் அடயாளத்திற்க்கு உதவும்
உன்னுள் படிந்த என் மோகங்களும்
என்னுள் பரவிய உன் வெட்கங்களும்

-அனிதா

நன்றி : ஆனந்த விகடன்

Thursday, November 16, 2006

சுழற்சி...

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.
அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்
வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்
எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்
பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்

-அனிதா

Friday, November 10, 2006

காட்டுக்கு சொந்தக்காரன்

உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள்
பச்சை நிறமாயின
பழுப்படைந்த இரகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்
காடறுக்க வந்தவனை
மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்...
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும்
சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதபோவதில்லை
உனக்கான கவிதைகளை.

-அனிதா

Friday, November 03, 2006

வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும்

கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும்.
பழகிவிட்ட இருளில்
சுவர் மூலைகளின்
ஒட்டடை எடுக்கிறேன்
கால்களின் கீழே
அலை இழுக்கும் மணலாய்
உயிர் குறுகுறுக்கும்
தேனீர் அருந்தி நினைவு கலைக்கிறேன்
வெளிச்சமும் நிறங்களும்
மூளைக்குள் வேர் விட்டுப் படரும்
சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்
காத்திருக்கும் காகங்கள்
மோகத்தோடே அலறும்
வியர்வை கசகசப்பும்
பழகமறுக்கும் தனிமையும்
மரபு மீறியும் சாவி தேடும்.
வெளியேற மறுக்க வலிமை சேர்க்கிறேன்
உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்
இன்றொரு பொழுது இனிதே கழிந்தது
இனி நாளையும்...

-அனிதா