Tuesday, December 12, 2006

சுயம்

தேவையற்ற கணங்களில்
என் தாய்மை விழித்துக்கொள்கிறது
தலை கோதி முகம் தடவி
தொடை சாய்த்து சேர்த்தணைத்து
வேர்களுக்கெல்லாம் நீரூற்றினாலும்
பூ பறிக்கையில் சிறிது சதையும்
வழித்துக்கொண்டு வருகிறது
தெரிந்தே தொடரும்
பகிர்தலுக்கான ஆயத்தங்கள்
முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை
எனக்கு தெரியும்
இப்பொழுதொன்றும் அவசரமேயில்லை
உலகில் மிஞ்சிய கடைசி ஆணும்
வற்றும் கடலின் கடைசி தவலை நீரும்
தனக்காய் பறிக்கையில்
தாயுள்ளமாவது மண்ணாவது.

5 comments:

Anonymous said...

kalakiteenga ;-)

Ken said...

"முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை"

வெகு நெருடலான வாழ்வின் வலியை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

கருப்பு said...

சல்மா, சுகிர்தராணியின் வரிகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது அனி.

Ayyanar Viswanath said...

எத்தனை சுயங்கள்!!
கொஞ்சம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது
கவிதை என்ற பெயரில் எல்லாரும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது எழுதிக் கொண்டிருக்கிறோம்.!!
சாயல்களில் கூசும் மனத்திற்க்கு பழகவே இல்லை இதுவரை யாரும் எழுதிடாத நடை..

ஒரு கவிதை நன்றாக இருந்தது என்பதற்க்கு மேல் வேறெதுவும் சொல்ல வாய்ப்பதே இல்லை இந்த சாமான்யனுக்கு..:)

நளன் said...

உங்கள் கவிதையனைத்தும் படித்தேன்!!
எதையும் குறைசொல்ல முடியவில்லை!
மிக அழகாக, ஆழமாக உள்ளன!!

வாழ்த்துக்கள்...