Monday, May 07, 2007

மரணம் பழகும் மனிதர்கள்

மரணம் பற்றி யோசிப்பதும் எழுதுவதும் மிகுந்த மன சோர்வையும் துயரத்தையும் தருவதாய் இருக்கிறது. இறப்பின் கடைசித் தருணங்களை யாரும் அசை போட விரும்புவதில்லை. ஒருவரின் இறப்பு ஒரு சிலருக்கு வாழ்வை எதிர்நோக்கும் பயத்தையும் மற்றவருக்கு நாமில்லை என்ற ஆசுவாசத்தையும் தருகிறது. இருப்பினும் மரணம் நம்முடனே பயணிக்கிறது. இறப்பிற்கு பின்னான தேற்றல்களும் மனமுதிர்சிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன.

சமீபத்தில் மிக நெருக்கத்தில் இப்படியான மற்றுமொரு மரணம் பார்க்க நேர்ந்தது.
உடல் அகற்றப்பட்டு புகைப்படம் வந்துவிட்டத் தருணத்தில் நான் சென்றதால் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கவில்லை. வாம்மா எப்போ வந்தே என்றார்கள். கை பிடித்து ஆறுதல் சொன்னேன். எப்படி இறந்தார் என முன்னமே தெரிந்திருந்ததனால் அதிகம் பேசவும் துன்புறுத்தவும் விரும்பவில்லை. நடப்புக்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்து, படைத்துவிட்டு, மற்றவர்கள் வேலை, நலம் விசாரித்து நேரம் கழிந்தது.

பின் கணீரென்ற குரலில் ஜெபிக்கத்துவங்கினார் ஒருவர்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;

சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.


எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

எல்லோரும் க‌ண்க‌ல‌ங்கினோம், அவ‌ர‌வ‌ர் வீட்டு ம‌ர‌ண‌ங்க‌ளை நினைத்து. என் கான்வ‌கேஷ‌னுக்கு கூட‌ அப்பா வ‌ர‌லை... இன்னும் கொஞ்ச‌ம் நாள் இருந்திருக்க‌லாம் இல்ல‌? என்றான் போன‌ வ‌ருட‌ம் இற‌ந்த‌வ‌ரின் ம‌க‌ன். ஒரு அக்காவையும், அடுத்து அம்மாவையும், போன‌ வ‌ருட‌ம் அண்ண‌னையும், இப்பொழுது த‌ம‌க்கையின் க‌ண‌வ‌னையும் இழ‌ந்து ஜெபித்துக்கொண்டிருந்த சின்ன மாமாவை பார்க்க‌ பாவ‌மாய் இருந்த‌து.

போன சாவுக்கு பார்த்த பல உறவுகளை இந்த சாவிலும் பார்க்க நேர்ந்தது. தொலைபேசி எண்களும் ஈ மெயில் முகவரிகளும் பரிமாறிக்கொண்டோம். மீபோ ஓர்குட் பற்றி பேசினோம். யாருக்கு முதலில் திருமணம் என கேலிகள் பேசினோம். ம‌ர‌ண‌ங்க‌ள் நிக‌ழ‌க் கூடாதென‌ வேண்டிக்கொண்டோம். விடைபெற்றோம்.

6 comments:

ammani said...

Wow!!!!!!

கதிரவன் said...

இதுதான் வாழ்க்கை !? இறப்பிற்கு பின்னான தேற்றல்களும் மனமுதிர்சிகளும் வாழும்போதே வந்தால் நாம் மனிதர்கள் இல்லையோ?

-ganeshkj said...

இழப்புகளின் போது ஏற்படும் மனச்சுமையிலிருந்து மீண்டுவர யார் சொல்லும் ஆறுதலிலும் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. At the end of the day, a loss is still a loss, no matter what. சோகங்களையெல்லாம் அழுது தீர்த்து விட வேண்டும், எவ்வளவு காலம் தேவைப்பட்டாலும் சரி. உணர்வுகளின் பெருக்கெடுப்பில் இருந்து வழியும் கண்ணீர் தீர்ந்த பின் அறிவு விழித்துக் கொள்கிறது. இது தான் வாழ்க்கை, இவ்வளவு தான் வாழ்க்கை என்று புரிகிறது. விரக்திக்கும், முதிர்ச்சிக்கும் நடுவில் ஏற்படும் தெளிவு போன்ற ஒன்றை நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள வேண்டும். இழப்பைக் கடந்து வர வேண்டும். Life has to go on and it finds its own way in a matter of time.

"மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே." - அழுத்தமான உண்மை.

கார்த்திக் பிரபு said...

hi anitha read your poem in vikatan this week ..congrats ..great work

i liked that roja poem very much

i want to ask some detaila abt this can u pls send me a test mail to g_prabhu@infosys.com

do u remember me too a tamil bloger ..me commented u ..

கருப்பு said...

மரணம் பற்றி அழகாக எழுதி இருக்கீங்க அனி.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மரணத்தின்போது கொடிய பகைவர்களும்கூட நண்பர்களாக மாறி விடுகின்றனர். பகை அகலுகிறது.

மாமன் மச்சான் சண்டை, பங்காளி சண்டை இதெல்லாம் கூட மரணத்தால் வெறித்து ஓடுகின்றன.

மற்றபடி மரணங்களை அதன் வரவேற்பு வாசல்வரை சென்று கண்டு வந்தவன் நான். உற்ற சொந்தங்களை அருகிருந்து பறி கொடுத்தவன்!

விஜயன் said...

முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது

yaar eluthunathu ..supera erukku..chancea ella..gr8