Monday, June 04, 2007

தெறித்துச் சிதறும் வார்த்தைகள்

இடைவிடாது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

இறைந்து கிடக்கும் சொற்கள் சேர்த்து
நேர்க்கோட்டில் அடுக்குகிறேன்
உன்னை சுவாரஸ்யபடுத்த புதிது புதிதாய் செதுக்கியெடுக்குறேன்
நயமிகு வார்த்தைகளை

கண்ணீரோ சிரிப்போ சலிப்போ பூசி மேலும் அலங்கரிக்கிறேன்.
ஊறவைத்து அலம்பி மிதமாய் சூடெற்றி
மிக கவனமாய் உன் விழி பார்த்தபடி
மெல்ல உதிர்க்கிறேன் ஒவ்வொரு வரியாய்

கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்
துவக்கமும் முடிவுமற்ற ஒற்றை வரியில்.

சிறு உரசலுக்கு உடைந்துவிடுகிற பெரும் மௌனம்
என்னுள் வளரத்துவங்குகிறது
அதிவேகமாய்.

11 comments:

Ayyanar Viswanath said...

/கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்?/

ன்கிறேன் :)

thiagu1973 said...

மெளனங்களை வளர்க்கும் அந்த பேச்சுதான்
எவ்வளவு சுவராசியமாய் இருந்திருக்கும்
பேசினவனுக்கு கேட்பவளுக்கும்

கதிரவன் said...

அய்யனார் said...
/கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்?/

ன்கிறேன் :)


அதே :-)

ஒற்றுப்பிழைகள் சில இருப்பதாகப்படுகின்றது

இறைந்துக் கிடக்கும் - இறைந்து கிடக்கும் ?
சலிப்போப் பூசி - சலிப்போ பூசி ?
விழிப் பார்த்தபடி - விழி பார்த்தபடி ?

Anonymous said...

மிக்க மகிழ்சி அனிதா, உங்கள் படைப்புகளை ஆனந்த விகடனில் பார்தேன். அதற்கு தகுந்த படைப்புகள் தான் அவை. அவ்வப்போது உங்கள் தளத்தில் ஏதேனும் ஏற்றங்கள் புதிதாக உள்ளதா என்று பார்கும் எனக்கு, நான்கு வருட இடைவெளி விட்டு ஆனந்த விகடனில் குறிப்பாக இலக்கிய பக்கங்களை ஆவலோடு பார்க்கையில் உங்கள் பதிவுகள்.

மகிழ்ந்தேன் வாழ்துக்கள்!!!

-ganeshkj said...

content புதியதில்லை என்றாலும் presentation பிடித்திருந்தது.

செதுக்கியெடுக்"குறேன்" -> "கிறேன்" என்றிருக்கலாமே.

கடைசி வரிதான் மிகவும் கவர்ந்தது. அங்கதான் நீங்க நிக்கறீங்க :)

கருப்பு said...

//இடைவிடாது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்//

வாயால் இல்லாவிடினும் இதயங்களால் பரிமாறிக் கொள்ளும் மர்ம பாஷை. அதுதான் இளம் உள்ளங்களின் காதல் பாஷை.

//இறைந்து கிடக்கும் சொற்கள் சேர்த்து
நேர்க்கோட்டில் அடுக்குகிறேன்//

வாழைநார் கொண்டு மணம் கமழும் மல்லிகைப் பூவில் சரம் தொடுப்பதைப் போல்னு சொல்றீங்க!

//உன்னை சுவாரஸ்யபடுத்த புதிது புதிதாய் செதுக்கியெடுக்குறேன்
நயமிகு வார்த்தைகளை//

அன்பானவரை மகிழ்ச்சிப் படுத்த அப்படித்தான் எழுதி/பேசியாக வேண்டும். அப்போதானே காதல் செழித்து வளரும். சென்னை பாஷையில் பேசினால் வளருங்களா?!

//கண்ணீரோ சிரிப்போ சலிப்போ பூசி மேலும் அலங்கரிக்கிறேன்.//

அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. கண்ணீரைத் துடைத்து பன்னீரை வைத்து வரவேற்க வேண்டும் வசந்த காலத்தை!

//ஊறவைத்து அலம்பி மிதமாய் சூடெற்றி//

என்ன திடீர்னு சமையல் கட்டுக்குள் போயிட்டீங்க???

//மிக கவனமாய் உன் விழி பார்த்தபடி
மெல்ல உதிர்க்கிறேன் ஒவ்வொரு வரியாய்//

இது பயம்ங்க. தொட்டதுக்கும் குற்றம் சொல்வாங்களேன்னு பயப்படுறீங்க. கனியிருப்பக் காய் கவர்ந்தற்றுன்னு அய்யன் வள்ளுவரே சொல்லி இருக்காரு. எனவே கவனமாக கையாள வேண்டும் வார்த்தைகளை!

//கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்
துவக்கமும் முடிவுமற்ற ஒற்றை வரியில்.//

ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளில் கவிதையைப் பற்றிய நடுத்தரமான மிக நல்ல விமர்சனமே ஒரு கவிஞரை ஊக்கு விக்கும்!

//சிறு உரசலுக்கு உடைந்துவிடுகிற பெரும் மௌனம்
என்னுள் வளரத்துவங்குகிறது
அதிவேகமாய்.//

ஓ, பெரு மவுனத்தில் ஊசி விழுந்த ஓசைகூட கேட்கும் என்று சொல்வார்கள். மவுனம் சில வேளைகளில் சம்மதத்தின் வெளிப்பாடாய் வந்திருக்கலாம் தோழி.

பின்குறிப்பு:- உண்மையிலேயே கவிதை நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

Mukundan said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது..,
-தாவனி

ப்ரியன் said...

Gud One

Unknown said...

Simply Superb !

Unknown said...

Simply Superb !

Anonymous said...

Simply Superb