Thursday, January 17, 2008

சில கவிதைகள்


புதிய பார்வை பொங்கல் சிறப்பிதழில்.. (ஜனவரி 16-31 , 2008 )


1. குளத்துப் பறவை
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள்
க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்து ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.

2. இந்த இரவில்
ஒரு நினைவு மக்கத் துவங்கியிருக்கிறது
மின்விசிறி வேகத்தில் கலைகிறது
இன்று முடிக்கவியலாத வேலையொன்று
கொடியில் குவிந்த ஆடைகளுள் ஒளிந்துகொள்கிறது
காலையில் பிச்சை கேட்டவன் முகம்
குளியலறை நீரோடு ஆவியாகிவிடுகின்றன‌
காழ்ப்புண‌ற்சிகள்

விடிய‌ல் உள்ளிழுத்துக்கொண்ட‌ ம‌ண் ஈர‌ம் ம‌ட்டும்
இன்னும் க‌ன‌வினில் ம‌ண‌க்கிற‌து.

3. யாருமற்ற நிழல்
கடைத்தெருவில் மிதிபடும் நிழல்களை
கசந்து வெறித்தபடி தனியே உறுமிக்கொண்டிருந்தது அது.
மிருகமோ பறவையோ
எதனுடனும் பொருந்திவிடாமல்
உடலற்று இறுகியிருந்தது.

வெறிப்பிடித்ததென்றும் ரத்தம் குடிக்குமென்றும்
மிரட்சியாய் பேசிக்கொண்டார்கள்
தன்னிலிருந்து பிரிந்துவிடாத நிழல் வைத்திருந்தவர்கள்

நிசப்தம் பொழிந்துக்கொண்டிருந்த முட்புதரில்
வேரென படர்ந்திருந்ததின் நெற்றி தேடி முத்தமிட்டு
என்னவாயிற்று என்றேன் சன்னமாய்
இறந்துவிட்டதாய் சொன்னது
என் உதடுவழிந்த குருதியைத் துடைத்தெடுத்தபடி

புரிந்ததென கண்சிமிட்டி நகர்ந்த கணத்தில்
தடையங்க‌ளின்றி கரைந்துவிட்டது.

4.காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின

பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்

காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை.


ந‌ன்றி : புதிய‌ பார்வை

7 comments:

Ken said...

உங்களின் கவிதைகள் எல்லா சிறுபத்திரிக்கைகளிலும் வெளிவந்து மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள் .

-ganeshkj said...

Congrats Anitha.. Keep going.. I saw your name in the list of new publications from Uyirmmai - "கனவு கலையாத கடற்கன்னி", but haven't checked if the book is available yet.

Best wishes,
Ganesh.

பாண்டித்துரை said...

வாழ்த்துக்கள் அனிதா.

anujanya said...

வாவ் ! எப்படி எழுதுகிறீர்கள். 'யாருமற்ற நிழல்' இன்னும் பிடிபடவில்லை. வாசிப்பனுபவம் போதவில்லை. way to go

அனுஜன்யா

Venkata Ramanan S said...

kavithaigal anaiththum miga arumai!!vaazhththukkal :)

Venkata Ramanan S said...

kavithaigal anaiththum miga arumai.. vaazhththukkal :)

நானாக நான் said...

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது... கவிதையின் உள்ளர்த்தம் தான் பிடிபட மாட்டேன் என்கின்றது...