இருளின் பயமின்றி
தனியே நிற்பவளை கடந்து
என் பேருந்திற்காய் காத்திருக்கிறேன்
துணிகள் திணித்த பெரும் பை சுமந்தபடி
மினுக்கும் உடைகளைத் தவிர்த்து பார்வை தாழ்த்தி
உதட்டுசாயம் துடைத்து நிற்கையில்
சற்றே ஆசுவாசமாகிறேன்
அவளிடமிருந்து வேறுபட்டிருப்பதாய்.
கண்களில் காமம் தளும்புவதாயும்
உதடு சுழித்து அழைப்பதாயும்
அரையிருட்டில் அனுமானிப்பது
அருவருப்பாயிருக்கிறது
முகம் சுருக்கி பேருந்தில் அமர்கிறேன்.
பெரும் தேவைகள் ஏதுமற்ற கசகசப்பில்
உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்.
-அனிதா
4 comments:
"உதட்டோரம் உவர்த்து வழிகிறது உயிர்."
உங்கள் கவிதைகள் எப்போதும் வித்தியாசமான உருவகங்களோடு இருக்கின்றன..
:)
கலா ப்ரியா, மாலதி மைத்ரி,சல்மா வரிசையில் அப்புறம் நீங்க..
யதார்தமா ஆழமா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.
கவிதை படிப்பது என்பதீ சுகமான அனுபவம் பெரும்பாலும். உங்கள் கவிதைகளை முதன் முறையாய்ப் வாசிக்கிறேன். முதல் உணர்வு. மென்மையாகவும், ஆனால் ஒரு அழுத்தமான ஊடு பொருலோடு ஒரு சுகமான அனுபவமாய் இருக்கிறது.
கிட்டத்தட்ட முகுந்தின் கவிதைகள் போல்.ஒப்புமையாய்க் கருத வேண்டாம்.
மேலும் படித்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
சூர்யா.
தொடரட்டும் முயற்சி. புனைவு அருமை. நவீன தாக்கமும் மனநிலையும் பிரதிபலிக்கிறது.
கே.பாலமுருகன்
மலேசியா
Post a Comment