Friday, October 05, 2012
அம்மாவும் நானும் - கொடுத்துச்சென்றதும் பறித்துக்கொண்டதும்..
சில ஆண்டுகளுக்கு முன் இதே நாள் தான் அம்மா என்னை பிரிந்துச்சென்றாள்.
வாழ்வை எப்படி ஜெயிப்பது என்பதை விடவும் வாழ்வை ரசித்து ரசித்து எப்படி வாழ்வதென்று கற்றுக்கொடுத்தாள்.
அழகி. பெரிய கண்கள், அதற்கு மேல் பெரிய கண்ணாடி, நிமிர்ந்த நடை என பாலசந்தர் கதாநாயகி போல இருப்பாள்.
பாடத்தை கஷ்டப்பட்டு படிக்காதே.. உச்சி வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்தபின் ஒரு மண் பானையின் குளிர் நீரை எத்தனை ஆசையோடு மிடறு மிடறாய் அருந்துவாயோ.. அத்தனை ஆசையாய் படி என்பாள்.
”ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிற” தாம்டி.. எத்தனை அழகான வரிகள் பாரேன் என்பாள்.. வார்த்தைகளை தேடித்தேடி ரசித்தாள். ரசிக்க கற்றுக் கொடுத்தாள்.
சினிமா போக மாட்டாள். டீவி பார்க்க மாட்டாள். பாடல்கள் மட்டும் கேட்பாள். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள்.. என் கணக்கு புத்தகத்தை வைத்துக்கொண்டு இது என்னடி ஈகுவேஷன்.. புரியல என்பாள்..
திண்டிவனம் பக்கத்தில் கோவிந்தாபுரத்தில் பிறந்து, பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிப்பெற்று ஸ்டெல்லா மேரீஸிலும் குயீன் மேரீஸிலும் பட்டம் படித்து Railway Protection Force ல் Superintendentஆக பணியாற்றினாள்.
கல்யாணம் ஆனப்புறம் புருஷன்கிட்ட ரொம்ப அன்பா இருக்கணும். சண்டையெல்லாம் போடக்கூடாது. நிதானமா இருக்கணும் என்பாள்.. அப்படி நிதானிக்க எத்தனை மனமுதிர்ச்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது என்று இப்போது தெரிகிறது..
உன் கணவன் உன்னை கைக்குள் வைத்துத் தாங்கினாலும், நீ பெரிய கோடீஸ்வரியாக ஆகிவிட்டாலும் வேலைய விட்டுடாதே என்பாள். அப்போது எனக்கு இருபத்துமூன்று வயது. அம்மா இறக்கபோகும் தருவாயில் அப்பாவிடம் சிலர் “அவங்க இப்பவே VR வாங்கிட்டாங்கன்னா உங்களுக்கு பத்து லட்சத்துகிட்ட கிடைக்கும். இல்லன்னா ஒண்ணோ ரெண்டோ தான் என்றார்கள்” வேலை அவளோட பெரிய சந்தோஷம். அவ கடைசி வரைக்கும் வேலைல இருக்கணும் என்றுவிட்டார்.
எக்கசக்க தைரியசாலி அம்மா.. ஒரு முறை ரயில் பயணத்தின்போது மேல் பர்த்திலிருந்து சீண்டிய ஒருவனை காலரை கொத்தாக இழுத்து தரையில் போட்டாள். பிறகுதான் அப்பாவுக்கே சொன்னாள். அடுத்த நிறுத்ததில் ரயில்வே போலீஸ் வந்து அவனை இறக்கிச்சென்றபின் சலனமே இல்லாமல் தூங்கப்போனாள்.
தங்கத்தின்மேல் துளி கூட ஆர்வமில்லை அம்மாவுக்கு. அவளோடு இருந்த இருபத்துமூன்று வருடங்களில் மூன்றோ நான்கோ முறை தான் நகை வாங்கி பார்த்தேன். செடி வளர்த்து முதல் துளிர் விடுகையில் அந்த வெளிர் பச்சையை அழைத்துக் காட்டுவாள்.. ரோஜா செடி வளர்த்து அந்த பூவை பறித்து வைத்துக்கொண்டு அலுவலகம் ஓடுவாள்..
நிறைய கவிதைகள் எழுதினாள். நிறைய பரிசுகள் வாங்கினாள். அவளை பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருப்பார்களா தெரியவில்லை.
அம்மா இறந்த தினம் ஹால் கொள்ளவில்லை. அறைகள் கொள்ளவில்லை. தெருவே கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் மேல் மக்கள்.. கடைசி வரை கலையவில்லை. என் வயசுக்கு இத்தனை ஜனம் பாக்கலடி நான் என்றாள் ஈபீ மாமி. இந்த நிமிடம் வரை பிரேமா பொண்ணு நீ.. அந்த நினைப்போட அவளை மாதிரியே இருக்கணும் நீ என்று நெஞ்சு கனக்க தொண்டை கமர யார் யாரோ சொல்கிறார்கள். இத்தனை ஸ்நேகம் எப்படி வளர்த்தாள்.. எல்லோருக்கும் பிடித்தமாய் எப்படி இருந்தாள்.. நான் மரித்தால் இத்தனை பேர் வருவார்களா என்றெல்லாம் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்..
அவளைப்போலவே அவள் மரணம் நிறைய கற்றுக்கொடுத்தது.. நிறைய துக்கம். பின் நிறைய தெளிவு..
அம்மா கூடவேதான் இருக்கிறாள். என்ன.. அவள் விதவிதமாய் காட்டன் புடவை கட்டும்போது காலடி புடவை நுனியில் மடிப்பு படியவைத்து அழுத்தி சரிசெய்யும் பாக்கியத்தை தான் பறித்துக்கொண்டுவிட்டாள்..
Saturday, July 28, 2012
இன்று பெங்களூருவில் மழை..
லேசான தூறலாகத்தான் துவங்கியது.. எட்டி பிடிக்கிற தூரம் தானே என்று கிளம்பிவிட்டேன். தூறலில் வண்டி ஓட்டுவது எத்தனை பெரிய விடுபடல்.. நம்மிலிருந்தே.. நானிலிருந்தே.. இந்த பாழாய் போன வெள்ளை சட்டை போலிஸுக்காக ஹெல்மெட் போடவேண்டியாயிற்று.. இருந்தாலும் பெங்களூருவில் தூறலில் வண்டி ஓட்டுவது அடிக்கடி நிகழ்வது.. தவிர்க்க நினைப்பவர்கள் கூட முடியாது.. ஏதாவது இளையராஜா பாடலோ பழைய ஹிந்தி கம்போஸிங்கோ நாக்கின் நுனியில் தன்னனனாவாகவோ ம்ம்ம்வாகவோ வந்து அமர்ந்துகொண்டுவிட்டால் அந்த தூறல் பொழுது இன்னும் கோலாகலமாகிவிடுகிறது.. இன்று மதியமே இத்தனை மந்தமான மேகங்கள் கவிந்திருந்தன.. ஒரு பரபரப்பான நகரத்தின் எந்த நேரத்திலும் பெரும் மழையில் வசமிழந்து நனைவது முடிவதே இல்லை. ஏதோவொரு அச்சம் இருக்கவே செய்கிறது.. என்ன நினைப்பார்களோ என்று.. நினைப்பவர்கள் யார்? எதுவரை கூடவருவார்கள் என்று இன்னும் கொஞ்சம் யோசித்தால் சிரிப்பு வந்துவிடுகிறது. இருந்தும் தயக்கம் முழுக்க அகலுவதில்லை. ஒரு பெருமழைநாளின் இருண்ட பொழுதில் அம்மாவோடு தண்ணீர் சொட்டச் சொட்ட அரை கி.மீ நடந்ததும், கெண்டைக்கால் மூழ்கிவிட்ட நீரில் இன்னும் இன்னும் நடந்துக்கொண்டேயிருக்க நினைத்ததும் என் பதினைந்து வயதில். எத்தனை துடைத்துக்கொண்டாலும் அந்த ஈரம் காயவில்லை. பிறகொரு நாள் க்ரிஸ்டின் காலேஜிலிருந்து தொப்பலாய் நனைந்தபடி மழை சுவடே இல்லாத வீட்டு வாசலில் வந்து நின்றபோது அதெப்படி அங்க பெய்யும் இங்க பெய்யலை என்ற கேள்விக்கு புன்னகைக்க மட்டும்தான் முடிந்தது.. தெருமுனை வரை வந்து பத்திரமாய் விட்டுச்சென்ற கல்லூரி காதலன் மழை.
இன்று அப்படி ஒரு நாள். தூறல் செல்லச் செல்ல வலுக்கத்துவங்கியது. வண்டியை ஓரம்கட்டுவது சராசரி மனிதன் செய்வது. ஆனால் எல்லா நேரமும் சராசரியாய் இருக்க முடிவதில்லை. சமயத்தில் பித்து பிடித்துக்கொள்கிறது. தலையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒடுபவன் முட்டாளாய் தெரிகிறான். கடைகளின் வாசல்களில் நிற்பவர்களெல்லாம் ப்ளாஸ்டிக் மனிதர்கள். நம்மை லூஸு போல பார்ப்பவர்களெல்லாம் வாழத்தெரியாதவர்கள். மழை மயக்கம். தூறலின்போதிருந்த பாடல்களும் உதட்டிலிருந்து வழிந்தோடிவிட மழை வலுக்க வலுக்க அங்கே பாடல் இல்லை, வண்டி இல்லை, நானுமே இல்லை. மழை முழுவதுமாய் ஆள்கிறது. ஒரு பெரிய வேகத்தடையை மிக அருகில் வந்ததுமே பார்த்து ப்ரேக் பிடிக்க பின்னாடி டயர் இங்குமங்குமாய் அல்லாடி நிலைக்கு வருகிறது. பிறகு மீண்டும் வேறு லோகம். வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வருகிறவர்கள் அங்கெல்லாம் எப்படி இருக்கு இங்கெல்லாம் எப்படியிருக்கு என்று ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள்
. மழை நகரத்தில் பெய்யவில்லை.மூளைக்குள். ராஜாங்கம் செய்கிறது. வெளியே இருப்பவனுக்கெல்லாம் என்ன தெரிகிறது.. அது வேறு மழை உலகம்.அந்த சிக்னலில் வந்து நின்ற நேரம் 40 செகண்ட் காட்டியது. மனம் பூமிக்கு வந்துவிட்டது. ஆடைகளை ஈரம் பிரித்து சரி செய்துக்கொண்டேன். அருகில் என்னை போலவே ஹெல்மெட் போட்ட பெண் ஸ்கூட்டியில் இருந்தாள். என் முன்னே பைக் ஆண்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் மழையில் நனைய தயங்கியவன்போல கர்சீப் எடுத்து தலையில் போட நினைத்தான். இந்த மழைய கர்சீப் தடுக்குமா.. அவன் நனைய விரும்பினான். விரும்புவதை மறைத்துக்கொள்ள பிரயத்தினப்பட்டான். சட்டென லேசாகி மீண்டும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டான். குதூகலித்தான். அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். அங்கே நனைந்துக்கொண்டிருந்தவர்களெல்லோரும் சிரித்தோம். பிடித்தமானது பிடித்த மக்கள் எல்லோரும் நண்பர்கள். பித்துப்பிடித்தவர்கள். நாற்பது நொடிகளில் நினைவிலிருந்து மறையாத ஸ்நேகம்.
யுத்தக்களம் போல ஓவென்று இறைஞ்சியபடி சீறிக்கொண்டு பறந்த வாகனங்களில் எல்லாம் மழை. அந்த நீண்ட தார் ரோடு மீளவே முடியாத உணர்வுகளை தன் மேல் போர்த்திக்கொண்டே என்னோடு வந்தது. மழைக்காதலர்கள் பாக்கியவான்கள். இன்று பெங்களூருவில் மழை..
Saturday, January 14, 2012
அவன் டைரியிலில்லாத குறிப்புகள்
அவன் நடந்துக்கொண்டிருந்தான்
ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அழகியென நினைத்தபடியே
நடை தொடர்ந்தான்
அவன் கூரை வெறித்தபடி அமர்ந்திருந்தான்
ஒருத்தி உறைமோர் கேட்க வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவன் வேலைக்குச் சென்றான்
ஒருத்தியும் வேலைக்கு வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவன் கவிதை எழுதினான்
ஒருத்தியும் எழுதினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவன் துக்கத்தின் பெருவெளியிலிருந்தான்
ஒருத்தி கைப்பற்றித் தேற்றினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவனும் ம்ம் என்றான்
போகிற போக்கில் பொழுது கழிந்தது
ஒருத்தி வேறொருத்தி மற்றொருத்தி மற்றுமொருத்தி
உருவாகிக்கொண்டேயிருந்தார்கள்
வெளிச்சமும் இருளும் இடம் மாறிக்கொண்டேயிருந்தன
ஒரு கோப்பை தேநீருக்குப்பின்னும்
மூளை தெளியாத மாலையொன்றில்
வழக்கம்போலவே ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அவன் சூழலின் கவனங்களேதுமற்று
நடந்துக்கொண்டேயிருந்தான்
-அனிதா
Wednesday, January 11, 2012
என்றைக்குமில்லாமல்.
Monday, January 09, 2012
வேறாயினும்.
ஆகாத வேளை தான் இது
நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.
நாம் மனிதர்கள் கூட இல்லை.
கேரட் தோட்டத்தில் விளையாடும் முயல்கள்
அல்லது பெருங்கடலோரத்து சிறு ஆமைகள்
நீந்தி ஊர்ந்து மணல் தின்று
மரணித்துவிடுவதன் பயங்களற்று
இலக்குகளின்றி அலைகிறோம்
தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி
சுருங்கும்வரை காத்திருக்கிறோம்
கால் இடறும் எல்லைகளை
வசதிக்கேற்றபடி தள்ளிவைக்கிறோம்
எல்லா நேரங்களிலும்
நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.
இருந்தும் நிகழ்பொழுதில்
சொல்லிவைத்தாற்போல அப்பிக்கொள்கிறது
கண்கள் பழகிக்கொள்ளவே முடியாத பேரிருட்டு.
-அனிதா
Tuesday, January 03, 2012
பெயர்
அனன்யா அம்மா
என்றழைத்த பெண்ணிடம் திரும்பி
ஏதோ சொல்ல வாயெடுத்து
நிறுத்திக்கொண்டேன்.
இதைவிட அழகாய் வேறெப்படி
அழைத்துவிட முடியும்.
என்றழைத்த பெண்ணிடம் திரும்பி
ஏதோ சொல்ல வாயெடுத்து
நிறுத்திக்கொண்டேன்.
இதைவிட அழகாய் வேறெப்படி
அழைத்துவிட முடியும்.
Subscribe to:
Posts (Atom)