
அவன் நடந்துக்கொண்டிருந்தான்
ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அழகியென நினைத்தபடியே
நடை தொடர்ந்தான்
அவன் கூரை வெறித்தபடி அமர்ந்திருந்தான்
ஒருத்தி உறைமோர் கேட்க வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவன் வேலைக்குச் சென்றான்
ஒருத்தியும் வேலைக்கு வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவன் கவிதை எழுதினான்
ஒருத்தியும் எழுதினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவன் துக்கத்தின் பெருவெளியிலிருந்தான்
ஒருத்தி கைப்பற்றித் தேற்றினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவனும் ம்ம் என்றான்
போகிற போக்கில் பொழுது கழிந்தது
ஒருத்தி வேறொருத்தி மற்றொருத்தி மற்றுமொருத்தி
உருவாகிக்கொண்டேயிருந்தார்கள்
வெளிச்சமும் இருளும் இடம் மாறிக்கொண்டேயிருந்தன
ஒரு கோப்பை தேநீருக்குப்பின்னும்
மூளை தெளியாத மாலையொன்றில்
வழக்கம்போலவே ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அவன் சூழலின் கவனங்களேதுமற்று
நடந்துக்கொண்டேயிருந்தான்
-அனிதா
3 comments:
மனம் தனக்குத்தானே பின்னிக்கொள்ளும் உணர்வுகள் பலவாகி அவன் வழி அடைக்கின்றன.பின் போகின்றன.அவனை நன்றாகவே கவனித்திருக்கின்றன உங்கள் வரிகள் அனிதா.
கவிதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு..மிகவும் இரசித்தேன்.. அவனையும் அவளையும் கவிதையில் மாற்றிப் போட்டாலும் - it has a valid argument - என்று தோன்றியது.. ஆண்மனம் தானே :)
மீண்டும் எழுத வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து எழுதுங்க.. :)
Post a Comment