உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள்
பச்சை நிறமாயின
பழுப்படைந்த இரகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்
காடறுக்க வந்தவனை
மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்
இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்...
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்
இருந்தும்
சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்
நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதபோவதில்லை
உனக்கான கவிதைகளை.
-அனிதா
2 comments:
எழுதபோவதில்லை
என்று சொல்லி எழுதப்படும் கவிதை..
நன்று..
//நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்//
இக்கவிதையில் நிறைய இடங்கள் பிடித்திருக்கின்றன. இந்த முரண் அழகாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள். கவிதை குறித்து இன்று பேசப்படவில்லை என்றாலும் இருபது வருடங்கள் கழித்துப் பேசப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது கவிதையின் தனித்தன்மை.
Post a Comment