Thursday, July 12, 2007

நெடுங்குருதி - ஒரு பார்வை

தினந்தோறும் வேலையிலிருந்து வேம்பலைக்கு திரும்புவதுபோல் இருந்தது இத்தனை நாளின் நெடுங்குருதி வாசிப்பு. இவ்வளவு அருகிலிருந்து ஒரு கிராமத்தை இதுவரை பார்த்ததில்லை.

ராமகிருஷ்ணன் அவர்களின் ஆரவாரமில்லாத கனமான நடை பழகியதுதான் என்றாலும் நானூறு பக்கங்களும் தோய்வில்லாத நடை வியக்க வைக்கிறது. ஒரு குடும்பத்திலிருந்து கதைத் துவங்கினாலும் குறிப்பாய் யார் பார்வையிலும் கதை சொல்லப்படவில்லை. சில நேரம் வெவ்வேறு மனிதர்களிடம் நெருங்குவதும் சில நேரம் விலகுவதுமாய் நகர்கின்றன நிகழ்வுகள்.

சம்பவங்களை கோர்த்துச் செல்லும் அழகில் பெரிய திருப்புமுனைகளின் தேவை மங்கி விடுகிறது. பிறப்பும் இறப்பும் எத்தனை இயல்பென புரிந்துக்கொள்ளவும், சாதாரணமான யூகிக்க முடிந்த கதைகளுக்கு பழகி இருப்பவர்களை சற்று அதிர்ச்சிகளுடனே அவற்றை ஏற்றுக்கொள்ள பழக்குகிறது இப்படி தானே நடக்கும் என்பதான கதையோட்டம்.

சற்றே பெரிய பத்தி என்று அடுத்த பக்கதிற்கு தாவுபவர்கள் கதையின் மிக முக்கிய சம்பவத்தை நழுவ விட்டிருப்பார்கள். எப்பொழுதோ வாழ்ந்த மிகச்சாதரண மக்களை யாரவது கோடிட்டு காட்டினாலும் நமக்கும் அவர்கள் நினைவுக்கு வந்து விடுவது ஆச்சர்யமாகவும், மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. நாகு, ரத்னாவதியுடன் சென்னம்மா, நீலா, மல்லிகா, வகீதா கூடவே கந்தர்வ சிலையும் அருகிருப்பது எழுத்தின் வலிமையை காட்டுகிறது.

ஒரு வெயில் காலத்தில் மனம் கசங்கி கிடப்பதும், மழை பொழிதலோடு துளிர்த்துக்கொள்வதுமாய் இயற்கையிலிருந்து பிரிந்திடாத கிராமங்களையும் கிராமவாசிகளையும் புறக்கணிக்கமுடியாத அவரவர் நியாயங்களையும் முரண்களின்றி கொடுத்திருக்கும் ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் பக்கங்களைத்தீர்க்கவும், வெளிவரவும் மனதற்றுப்போகிறது.

இன்னும் தாமதித்துக்கொண்டிருப்பவர்கள் பெட்டி படுக்கையுடன் வேம்பலைக்கு போய் வாருங்கள்.வேம்பர்களையும் சாயக்காரர்களையும் நான் விசாரித்ததை சொல்லுங்கள். பயணம் இனிதாகட்டும்.

நாவல் : நெடுங்குருதி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 275.00
பக்கங்கள் : 472
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.

எழுத்தாளரின் மற்றும் சில நூல்கள் :

விழித்திருப்பவனின் இரவு
உறுபசி
அரவான்
பதேர் பாஞ்சாலி
நடந்து செல்லும் நீரூற்று
கால் முளைத்த கதைகள்

-அனிதா

No comments: