Monday, August 20, 2007

காந்தி மை பாதர் - விமர்சனம்

சமீபத்தில் நான் பார்த்த இரண்டு திரைப்படங்கள் - சிவாஜி, காந்தி மை பாதர் (Gandhi my Father). சிவாஜி பற்றி ஏற்கனவே பலரும் தேவையான அளவு அலசி ஆராய்ந்து பிழிந்துலர்த்திவிட்டதால், "காந்தி மை பாதர்" பற்றி சில...

கதை தெரிந்தால் படம் பார்க்க நன்றாக இருக்காது என்பது பொருந்தாத, நானும் பார்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டிய Period films வரிசையில் மற்றொன்று.

முதல் தயாரிப்பாய் இருப்பினும், Blockbuster, Superduper hit என்றெல்லாம் பேசப்படாது என்று தெரிந்தும், மசாலாக்களில் இறங்காமல் நம் பிரகாஷ்ராஜ் போல நல்ல படம் குடுக்க நினைத்த அனில் கபூரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காந்திக்கும் அவர் மகன் ஹரிலாலுக்குமான உறவே படம். தான் படித்த பேரிஸ்டர் படிப்பு, தன் மகனுக்கு தேவை இல்லை என்றும், அடிப்படை கல்வியைவிட உரிமைகளுக்காய் போராடி சிறை செல்வது வாழ்வை கற்றுத் தரும் என்றும் நினைக்கும் காந்தியின் எண்ணங்களும், அதன்படியே மகனை "சுதந்திரமாய்" தன் போராட்டப் பாதையில் நடக்கச் செய்ய முயற்சிப்பதும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகி விடுகிறது. படிப்படியாய் சீர்குலையும் ஒருவரின் வாழ்க்கை கண்முன்னே விரியும்போது வேதனையே மிஞ்சுகிறது.

காந்தி மீது மிகுந்த மரியாதையும், பயமும் கொண்ட ஹரிலால், இந்தியா திரும்புவதற்குமுன் தன் தந்தையிடம் மிகத் தெளிவாய் நியாயம் கேட்பதும், அவர் பேச்சற்று நிற்பதுமான உரையாடலில் இனி ஹரி விரும்பிய பேரிஸ்டர் படிக்கவோ, அவன் விரும்பிய நியாயமான வாழ்வை கூட வாழ முடியாது என்றும் புரியும் இடம் முக்கியத் திருப்புமுனை.

காந்தியின் வேகம், உற்சாகம், தன்னம்பிக்கை எல்லாம் அப்படியே கொண்ட மகன், சிறிது சிறிதாய் தோய்ந்து போகிறான். படிப்பும் இல்லை, தொழில் தொடங்க வசதி இல்லை, அப்பாவின் பணத்தில் வாழ்கிறோமென்ற கழிவிரக்கம், நான்கு குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள முடியாத இயலாமை எனத் துயரத்தில் இருக்கும் ஒருவன். இவன் வாழ்வைத் திருத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தும், காந்தி அவற்றைத் தவறவிடுவதும், புறக்கணிப்பதும், அவனாக சுயமாய் வேலை செய்யும்போது இவர் சென்று தன்னுடன் வந்துவிடும்படி வேண்டி மீண்டும் அவன் காயப்பட்டு குறுகிப் போவதும் நடந்தபடி இருக்கிறது. கடைசி வரை தனக்கென்று எவருமே இல்லாமல், சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே செய்ய முடியாமல் தெருவில் கிடந்து இறந்து போவானென்றும் (கதையே தெரியாமல் படம் பார்க்க சென்றாலும்) சுலபமாய் ஊகிக்க முடிகிறது.

ஆப்பிரிக்கா, குஜராத், கல்கத்தா என காட்சிகள் தெளிவாய் உணர்த்துவதால் இட குழப்பங்கள் இல்லை. காந்தியின் வெவ்வேறு போராட்டங்களும், படிப்படியாய் புரட்சிகள் செய்வதும், அச்சமயங்களில் ஹரிலாலின் நிலையும் ஒப்பீடாய் காட்டப்படுகிறது.

மெல்லிய இசையும், கண் உறுத்தாத காட்சியமைப்பும், கருப்பு வெள்ளை காட்சிகளை படமாக்கிய விதமும் அழகு.
வசன உச்சரிப்பு, காந்தியின் அச்சாய் தோற்றம்(காது உட்பட) வயோதிக ஒப்பனை எல்லாம் தர்ஷன் ஜரிவாலா (Darshan Jariwala) வுக்கு பொருந்தி வந்திருக்கிறது. ஹரிலாலாய் வரும் அக்ஷை கண்ணா (Akshay Khanna) உற்சாகமும் கனவுகளும் கண்ணில் தேக்கி அலையும்போதும் சரி, சிதைந்தபின் அன்பிற்கு ஏங்கி அம்மாவைத் தேடி வரும்போதும் சரி, காட்சிக்கு காட்சி மிளிர்கிறார்.
காந்தியின் மனைவி கஸ்தூர் (ஷெபாலி ஷெட்டி) க்கு வயோதிக ஒப்பனை அடை அடையாய் கண்ணை உறுத்துகிறது. மகன் தவறான பாதையில் செல்வதை வெறுமே பார்த்து வேதனைப்படுவதும், காந்தி செல்லும் இடமெல்லாம் கூட செல்வதும் மட்டுமே அவர் வேலை என்பதுபோல் காட்டி இருக்கிறார்கள். ஹரிலாலின் மனைவியாய் வரும் பூமிகா, நல்ல மனைவி, நல்ல மருமகள், நல்ல தாய் பட்டங்கள் வாங்கிக்கொண்டு இறந்து போகிறார்.

காந்தி செய்த பிழையால்தான் மகன் கஷ்டப்படுகிறான் என்பது தெளிவாய் தெரிகிறது. காந்தி மேல் ஏற்படும் கோபத்தை படிப்படியாய் திசை திருப்ப முயற்சித்திருக்கிறார்கள். சரி படிக்க வைக்கவில்லை, அதற்குபிறகு எல்லா உதவியும் செய்தாரே.. அப்பொழுதும் ஏன் அவன் திருந்தவில்லை என்பதுபோல் காந்தி இமேஜ் பாதிக்காமல் இருக்க கவனமாய் இருப்பதால் சின்ன செயற்கைத்தனம் வந்துவிடுகிறது.

வரலாற்றில் கவனிக்கபடாமல் அமிழ்ந்துபோன சிறிய பகுதியை தெரிந்துக்கொள்ளும் எண்ணத்தோடோ, சுதந்திரம் வந்த கணத்தை உணர்ந்து ரசிக்கவோ, என்னதான் நடந்துது அந்த ஆளுக்கு என்ற வெறும் ஆர்வத்துக்காகவோ, எப்படியானாலும் முன் முடிவுகளின்றி ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம்.

-அனிதா

3 comments:

Unknown said...

இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய வரிசையில் வைத்திருக்கும் படம். அனில் கபூரின் முதல் தயாரிப்பே நல்ல படமாக எடுத்திருக்கிறார்.

ச.மனோகர் said...

தங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் படத்தை பார்க்கத் தோன்றுகிறது.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Narayanaswamy G said...

அருமையான எழுத்து நடை....
மதுரையில காது குளிர குளிர தமிழ் கேட்டுவிட்டு இந்த பெங்களூரு தமிழை கேட்டவுடன் காதில் ரத்தம்தான் வந்தது. உங்கள் ஆர்குட் முகவரியில் இருந்துதான் உங்கள் வலைமனைக்கு வந்தேன்.

நீங்கள் ஏமாற்றவில்லை......