Saturday, June 07, 2008

உருமாற்றம்

பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்

மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்

உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்

பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன‌.

போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.

- அனிதா

நன்றி : வார்த்தை

5 comments:

மனுஷம் said...

nice ....

thanimayay ithai vida azagai solla mudiyuma endru theriya villai...

Nanru thouzi

thoudarattum un thamiz pani

Venkat

Ken said...

வாழ்த்துகள் ,

இருந்தாலும் நீங்கள் போய்ப்பார்த்திருக்கலாம். கிசுகிசுவெல்லாம் நம்பாதீங்க பொய்யாகக்கூட இருக்கலாம் :)))))))))

MSK / Saravana said...

நல்லா இருக்கு.. ஆனால் சற்று புரியவில்லை.. விளக்கம் தரமுடியுமா?

anujanya said...

அபாரமான கவிதை. ஒவ்வொரு வாசிப்பிலும் அனுபவம் வேறுபட்டது.

அனுஜன்யா

காலம் said...

படிமங்களில் நீந்தும் மீன்கள்

நார்சிஸ்னுடையதா


வாழ்த்து