Wednesday, December 30, 2009

ஒரு நடிகர் இறந்துவிட்டார்




ஊரே புரண்டுகிடக்கிறது
ஆங்காங்கே வாகனங்கள் எரிகின்றன‌
தொலைகாட்சியில்
அவர் திரைப்படங்கள் மட்டுமே
ஒளிபரப்புகிறார்கள்
கடைகளின் மேல் கல்லெறிகிறார்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாயிற்று

துக்கம் அனுஷ்டித்தபடி
அலுவலகம் செல்ல வேண்டி
வாகனத்தின் கைப்பிடியில் கட்ட
ஒரு கறுப்பு காலுறையை
தேடிக்கொண்டிருக்கிறேன்

கிடைத்தப்பாடில்லை.

Monday, December 21, 2009

தடையங்கள்



எப்படி தேடினாலும் கிடைப்பதில்லை சில தடயங்கள்.

காய்ந்த சருகுக்குவியலின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்ததற்கோ

பூட்டிய பூங்காவின் ஊஞ்சல்களில்
குழந்தைகள் ஆடிவிட்டு போனதற்கோ

குறுஞ்செய்திகளில் தகித்து கழிந்த
மிரட்சியான இரவுகளுக்கோ

பின் அட்டை தெரிய கிடக்கும்
இப்புத்தகத்தை வாசித்து முடித்ததற்கோ

அடைக்கபட்டிருக்கும் கதவுகளேல்லாம்
முன்னெப்போதோ
விலாசமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடையங்களும் இருப்பதில்லை.

இருந்தும் அழிக்கவியலாமல் தேங்கிவிடுகின்றன

சில நினைவுகள்
சில தேதிகள்
சில குற்றவுணர்வுகள்

Wednesday, November 11, 2009

நான் மட்டும்

திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்

திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.

Monday, October 12, 2009

ஒரு மாறுதலுக்காய்..

குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்

நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்

அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.

மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.

சற்றுமுன் நடந்த விபத்து..

நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன

அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது

அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்.

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.

Monday, September 14, 2009

பின்னோக்கி இழுக்கும் ரயில்

ரயிலில் ஏறியதுமே குதூகலிக்கிறாள் குழந்தை

தொண்டைக்குள் நீர் தேக்கி
கர்ர்ர் என்று சப்தமிடுகிறாள்
நொடி நேரமும் கையில் அடங்காமல்
இங்கும் அங்கும் தாவ முயல்கிறாள்
இல்லாத யாரையோ கண்ணாடி ஜன்னல் வழியே
சலிக்காமல் அழைக்கிறாள்
கடந்து செல்பவர்கள் புன்னகைத்துப் போகிறார்கள்
சிலர் எட்டி கன்னம் கிள்ளுகிறார்கள்
சிரித்துவிட்டு பதில் சிரிப்புக்காய் காத்திருக்கிறார்கள்

அடக்கவியலா பெருமிதத்தோடு
ரயிலின் தாளம் பழகியவளாய்
குழந்தைக்கு ஆடை மாற்றி பால் புகட்டி
அவளுக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்

இவ்வளவு சலனங்களுக்கும் சற்றும் நிமிறாமல்
புத்தகம் படிக்கிறாள்
எதிர் இருக்கையில் இருப்பவள்

என் கவன ஈர்ப்பு செய்கைகளெல்லாம்
குழந்தையை தாண்டி அவளுக்காய்
மாறத்துவங்கிய நிமிடத்திலிருந்து
புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
குழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்

இந்த நிமிடம் வரை.

Monday, May 25, 2009

சூப்பர் டான்ஸர்

எனக்கு பிடித்த போட்டியாளன் இன்று
வெளியேற்றப் படுகிறான்.
அசைவுகள் சரியாக அமையவில்லையாம்

பார்வையாளர்கள் வரிசையில் அவன் மனைவி
விசும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுவர்கள் செய்வதற்கேதுமின்றி தலை குனிகிறார்கள்
இன்று கருப்பு தினம் என்கிறாள்
தொகுப்பாளினி

வாத்தியங்கள் சோகமிழைக்க
ஸ்லோ மோஷனில் மேடையிலிருந்து இறங்குபவனை
மெல்ல அணைத்து முத்தமிட்டு அனுப்புகிறேன்
என் பங்கிற்கு.

ஒரு பிரசவத்திற்கு பிறகு..

முக்கு முக்கு முக்கு முக்கு என்ற‌
ஆறேழு குரல்கள்
கரைந்துவிட்டிருக்கின்றன‌

ம‌ங்க‌லாய் நினைவிலிருக்கிற‌து
தொப்புள் கொடி வெட்டிய‌வ‌ள் முக‌ம்

அத்த‌னை பேர் பார்க்க
அக‌ல‌ விரிந்த‌ கால்க‌ள்
குறுகி கிட‌க்கின்ற‌ன‌

வ‌யிறு அழுத்தி பிழிந்து
வெளியேற்றிய‌து போக‌
மீதி ர‌த்த‌ம்
தொடைக‌ளின் ந‌டுவே வ‌ழிகிற‌து

விடிய‌ற்காலையின் இய‌ல்பான‌ உற‌க்க‌ க‌ல‌க்க‌த்தில்
ஓய்வெடுக்க‌ த‌னியே விட‌ப‌ட்டிருப்ப‌து தெரிந்தும்
வெறும் காற்றில் மெல்ல‌ கேட்கிறேன்
இன்னிக்கு என்ன‌ தேதி
என்று.

நிழல்

எதிரி விஷம் கலந்து கொடுத்த
காபியை அருந்திய கதாநாயகி
சுருண்டு விழுகையில் தொடரும் போட்டார்கள்

சோற்றுக் கவளம் வாயிலே இருக்க,
செத்துட்டாளா என்றேன்
சாகமாட்டா நாளைக்கு காப்பாத்திடுவாங்க
என்றாள் அம்மா சாகவாசமாக

பின் மழைக்காற்றையொத்த
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி
காப்பாற்றபடாத கதாநாயகிகள் குறித்து
யோசிக்கத் துவங்கினேன்

Thursday, March 19, 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி!!

நண்பர்களுக்கு வணக்கம்

மார்ச் முதல் நாள் அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அதே நேரத்தில் என் முதல் கவிதைத்தொகுப்பு கனவு கலையாத கடற்கன்னி என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.





அதன் முன்னுரை இங்கே :



முன்னுரை

அனுமானங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கும் மெல்லிய இடைவெளியில் கசிந்து மறையும் நிதர்சனத்தை என் கவிதைகளில் பதிவு செய்ய முயல்கிறேன். உண்மைகளை உணரத் துவங்கும்போது மிகுந்த துயரத்திற்கோ, பெருகும் மகிழ்சிக்கோ அல்லது என்னுள் பரவும் இனம்புரியா உணர்வுக்கோ ஆளாகிறேன். ஒரு கவிதை படித்து வெகுநேரம் அமிழ்ந்திருப்பதும், சில நாட்கள் தேங்கி கிடப்பதும் யாருடனும் பகிர்ந்து புரியவைக்க முடியாத அனுபவமாகிவிடுகிறது. அதுவே, நான் கவிதைகள் எழுத உந்துதலாகவும் அமைந்திருக்கிறது.

கவிதையாய்ப் பேசிப் பழகி , கவிதையாய் வாழ்ந்து என் எழுத்துக்களில் இன்னும் உயிர்த்திருக்கும் என் அம்மாவை முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும் இந்த நேரம் நெகிழ்வாய் நினைத்துக்கொள்கிறேன்.

எல்லா பெண்களையும் போல என்னைச்சுற்றியும் பாதுகாப்பு வளையமிருக்கிறது. அறுத்தெறிய இயலாத வளையம். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் அளவினை ஒப்பிடவோ, அளக்கவோ முயன்றதில்லை. பத்திரமாய் பயணிக்கவும், வேளைக்கு உணவு உண்ணவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு பழகவும், எது கேட்டாலும் வாங்கி கொடுத்தும் ,என்னைக் கைக்குள் வைத்து தாங்கும் என் குடும்பத்தாருக்கு என் பிரியங்கள்.

ஆர்வமாய் என் கவிதைகளைப் படித்து விமர்சித்தும், நம்பிக்கையூட்டியும் எழுதச் செய்த பத்திரிக்கை மற்றும் இணைய உலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் நன்றி.

என் கற்பனை உலகத்து அழகுகளையும் அபத்தங்களையும் நானே பிரித்துப் பார்த்து என்னைச் செதுக்கிக் கொள்ளவும், நிதர்சனங்களின் வெப்பத்தை பதறாமல் கையாளவும் கற்றுத்தந்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும் இந்தத் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் என் நன்றி.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளைப் பிரசுரித்த உயிர்மை, தீரா நதி, புதியபார்வை, உயிர் எழுத்து, பனிக்குடம், புதிய காற்று, வார்த்தை, உயிரோசை, நெய்தல், மணல் வீடு, ஆனந்தவிகடன், திண்ணை, வார்ப்பு ஆகிய இதழ்களுக்கு நன்றி.

இவ்வளவு மகிழ்வோடும், நிறைவோடும் வாழ்வதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு என் பிரியங்களையும் , வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியங்களுடன்
அனிதா
பெங்களூரு

மின்னஞ்சல் : anithu21@gmail.com



புத்தகம் வாங்க‌

Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448

- அனிதா


********************************************************************************

Monday, January 19, 2009

விகடனில் சில கவிதைகள்..


நினைக்காத வேறொன்று


எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவற‌விட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுப‌வ‌ரும், காபி ஆற்றுப‌வ‌ரும்,
பார்ச‌ல் க‌ட்டுப‌வ‌ரும் கூடி பேசிய‌ப‌டியிருந்தார்க‌ள்

கிடைக்க‌வேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்த‌ப‌டி வந்துவிட்டேன்.
ச‌ம்பாஷ‌ணைக‌ளில் கலந்துக்கொள்ளாம‌ல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்த‌வ‌ன்
அன்றிர‌வு க‌ன‌வில் வந்தான்.

ரகசியம்

யாரிடமும் சொல்லாதே என்று
அவளைப் பற்றி சொன்னான் இவன்.

ரகசியமாம்.

எனக்குத் தெரிந்தவள்தான்.
உண்மையா என்றேன் அவளிடம்
இல்லையே எனத் துவங்கியவள்
யார் சொன்னது என சேர்த்துக்கொண்டாள்.

இவன் சொன்னதாய் அவளிடம் சொல்லவில்லை
அவளிடம் கேட்டது இவனுக்குத்தெரியாது

பெரிய ரகசியத்தின் வயிறு கிழித்து வெளியேறிய
இந்த குட்டி ரகசியங்களை என்ன செய்வது?

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

- அனிதா

நன்றி - ஆனந்த விகடன்