Wednesday, December 28, 2011

ஒரே கவலை




மர்மமாய் இறந்துவிட்ட
பெண்ணின் உடலையும்
உயிரோடிருந்த
பாஸ்போர்ட் புகைபடத்தையும்
காட்டினார்கள்.
மாரிலடித்துக்கொண்டு அழும்
பெண்ணை காட்டாமலே
வேறு செய்தி மாறியது
குறையாயிருக்கிறது.

-அனிதா

Monday, December 26, 2011

வெந்நீர் ஊற்றுகள்



சந்திக்க விருப்பமற்ற ஒருவர்
தான் சந்திக்க தேவையற்ற ஒருவரை
பழைய மரப்பாலமொன்றின் நடுவே
தவிர்க்கவியலாமல் பார்க்கும்படியாயிற்று

நலமா நலம்
நலமா நலம்
தேவையற்ற விசாரிப்புகள்
தெரிந்த பதில்கள்

தத்தம்
புகழை
வெற்றிகளை
கம்பீரத்தை
காதல்களை
அவசரமாய் பிரஸ்தாபிக்கிறார்கள்

வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி
யாருக்கும் எட்டும்முன்னே
பாலத்தின்மேல் தெறித்து உடைகின்றன

வெந்நீர் ஊற்றொன்று
தடையமற்றுத் தூர்ந்ததுபோன்ற வெறுமை சூழ
வந்த வழியே சோர்ந்துத் திரும்பிச்செல்கிறார்கள்

வீட்டின் சுவர்களுக்குள்ளும்
தடித்த போர்வைக்குள்ளும்
வியர்த்தபடி கழிகிறது நீண்ட இரவு

அருவருப்பு தாங்காத மரப்பாலம்
உடைந்து
தண்ணீரில் உருண்டோடுகிறது.

-அனிதா

Thursday, December 22, 2011

சொல்லப்படாத பெயர்

பார்த்ததுமே பெயர் என்ன
என்கிறார்கள் குழந்தையிடம்
சொல்லிச் சொல்லி சலித்துவிட்ட குழந்தை
பெயர் சொல்வதை நிறுத்திக்கொண்டது
கேட்கும்போதெல்லாம் சொல்லப்படாத பெயர்
அறையெங்கும் பட்டு தெறித்துக்கொண்டேயிருக்கிறது

கற்கள்

ஒவ்வொன்றாய் விழ விழ
கலங்குகிறது
வண்டலும் பாசையும்
கிளர்ந்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து வண்டல்
வேரிடத்தில் படிகிறது

கற்கள் விழ கலங்கும்
கலங்கி பின் தெளியும்

-அனிதா

விடிவு

ரத்தம் கசிந்து கசிந்து
வடிந்துவிட்ட சாயும்காலத்தில்
உள்ளாடைகள் களைந்து
படுத்திருப்பவள்போல
மல்லாக்க கிடக்கின்றன பெரும்மலைகள்

Monday, January 24, 2011

சுடச் சுட மழை

வெப்பம் தாளாமல்
பிரிந்து நடக்கையில் தான்
பொழியத்துவங்குகிறது பெருமழை

அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி
ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது
ஆசுவாசமாயிருக்கிறது
ஏனெனில்
நீர் சொக்கும் ஆடைகளில்
இருக்கவே செய்கின்றன
அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான
சாத்தியகூறுகள்

இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்
இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்
எதிர்பாராமல் இளகுகின்றன

கலங்கி இருப்பினும்
குளிர்ந்து வழிந்தோடுகிறது
ரோட்டோரத்து செம்மண் நீர்

போதிலும்
நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்
நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
அலைகழிதலில்
ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது
நிகழ்

- அனிதா

கப்பற் தொழிற்சாலை

கப்பல் செய்து தரச் சொல்லி
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை

முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது

எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது

வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்

காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது

-அனிதா



இந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.
படித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.
அலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.
தினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.
அந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.
கவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..

விளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.

இப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.

இன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.
என்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

- அனிதா