Tuesday, August 07, 2007

அந்தர் முகம் - நாவல்

என்டமூரி வீரேந்திரநாத் எழுதி தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதிர்ச்சிகளுடன் துவங்கி அதிர்ச்சிகளுடனே நீண்டு, அதிர்ச்சியாய் முடிகிறது நாவல்.

எத்தனை விதமான மாயைகள் சூழ வாழ்கிறோமென புரியும்போது உண்மை முகத்தில் அறைகிறது. கதையின் நாயகனைப் போல பலரும் நம்மைச் சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மீதான நமது அபிப்பிராயங்கள் சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லை. அல்லது அவர்களைப்பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ள நாம் மெனக்கெடுவது கூட இல்லை. வேஷங்களிட முற்படாத மனிதர்களை வேஷமணிந்தவர்கள் புறக்கணிப்பதும் அலட்சியமாய் கையாள்வதும் தினமும் நம்மிடையே நடப்பதுதானென உணர்த்துகிறது.

கதையெங்கும் ஒரு மெல்லிய எள்ளல் இருப்பது பெரும் பலம். எத்தனையோ நிகழ்வுகளை கடந்தபோதும் ,சமூகம் குறித்தான நாயகனின் கண்ணோட்டம் மாறாமலிருப்பதும், மாற்றிக்கொள்ள தேவை இல்லையென நமக்கு படுவதும் அந்த கதாபாத்திரத்தின் மதிப்பை கூட்டி விடுகிறது.

கதை நெடுக மெல்லிய நீரோடை போல பெண்கள் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களை கையெடுத்துக்கும்பிடுங்கள் என போதிக்காமல், பெண்களே சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம் காரணம் என்றும் பழிச்சொல்லிகொண்டிருக்காமல், சற்று கூட குறைய இருந்திருந்தாலும் அர்த்தங்கள் மாறி விடும் அபாயம் இருக்கும் இது போன்ற கதைகளில் மிக கவனமாக கையண்டிருக்கிறார் வீரேந்திரநாத்.

திரைப்படம் பார்ப்பதுபோல் ஆங்காங்கே தோன்றினாலும் மனிதர்களின் பொய் முகங்களை கிழித்தெறியும் இது போன்ற நாவல்களில் அவைகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.

சமூகம் என்ற ஒன்றை உடைத்தெறியும் எண்ணங்கள் இல்லாமல், அதற்குள் இருக்கும் மனிதமன அழுக்குகளை மட்டுமே வெளிக்கொண்டுவர மேற்கொண்ட சிறந்த முயற்சி இது.இந்த நாயகன் நிச்சயம் உங்களருகில் இருக்கும் ஒருவரை நினைவுபடுத்துவான் அல்லது அவன் நீங்களாகவே கூட இருக்கலாம்.இப்படி தான் இருக்கிறோம் எனத்துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ள முடிந்தால் இந்த கதை ஒரு நல்ல அனுபவம்.

-அனிதா

4 comments:

Anonymous said...

வாவ் அனிதா. எனக்கு மிகப் பிடித்த நாவலில் ஒன்று. இந்த புத்தகத்திற்கு ஒரு ரிவ்யூ நானும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்க முந்திக்கிட்டீங்க... :-)

உளவியல் ரீதியாக மனித மனங்களை அணுகி எழுதப்பட்ட நாவல் இது.

த.அகிலன் said...

என்னுடைய பிரிய நாவல் பட்டியலில் இடம்பெறுகிற நாவல். இன்னமும் பிரணவியின் பிம்பமும் பெயரும் நினைவில் நீந்திக்கொண்டேயிருக்கிறது.

Ken said...

யதார்த்தமான ஒரு நாவல் சிறிது அதிகப்படியான திரைப்பட உணர்வில் இருப்பினும் நீங்கள் கூறியிருப்பது மிகச்சரி , எனக்கு மிகப்பிடித்தமான நாவல்களில் இதுவும் ஒன்று.

நல்ல பார்வை கண்டிப்பாய் வாசிக்க தூண்டும்,
வாழ்த்துக்கள்!

மிதக்கும்வெளி said...

அனிதா,

மஞ்சூர்ராசா உங்கள் வலை பற்றி எழுதியிருந்ததால் இங்கு வரமுடிந்தது. முதுகுக்குப் பின் துரத்தும் அவசரம் சமயங்களில் நல்ல எழுத்துக்களைப் பார்வையிடவிடாமலே பறித்து விடுகிறது. நல்ல எழுத்தாளுமை. தொடருங்கள்.