வெப்பம் தாளாமல்
பிரிந்து நடக்கையில் தான்
பொழியத்துவங்குகிறது பெருமழை
அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி
ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது
ஆசுவாசமாயிருக்கிறது
ஏனெனில்
நீர் சொக்கும் ஆடைகளில்
இருக்கவே செய்கின்றன
அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான
சாத்தியகூறுகள்
இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்
இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்
எதிர்பாராமல் இளகுகின்றன
கலங்கி இருப்பினும்
குளிர்ந்து வழிந்தோடுகிறது
ரோட்டோரத்து செம்மண் நீர்
போதிலும்
நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்
நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
அலைகழிதலில்
ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது
நிகழ்
- அனிதா
Monday, January 24, 2011
கப்பற் தொழிற்சாலை
கப்பல் செய்து தரச் சொல்லி
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை
முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது
எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது
வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்
காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது
-அனிதா
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை
முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது
எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது
வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்
காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது
-அனிதா

இந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.
படித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.
அலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.
தினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.
அந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.
கவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..
விளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.
இப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.
இன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.
என்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
- அனிதா
Wednesday, May 05, 2010
பெண்களும் பூக்களும்..

ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..
இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது.
இப்படி யோசித்ததின் அடிப்படையில் நான் வெகு நாட்களாய் படிக்கும் சில வலைப்பூக்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன.
cakerwakers.blogspot.com எழுதும் கிரிஸ்டி யை நான் தனிபட்ட முறையில் அறிந்ததில்லை. Serendipity யாக தான் இந்த வலைப்பூ கண்ணில் பட்டது. இலக்கியம் இல்லை. எதை பற்றியும் பெரிய கருத்துக்கள் இல்லை. ஆங்கில புலமையின் வெளிபாடு இல்லை. பின்னூட்ட கவலைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இதை நான் எழுதுவதால் எனக்கு அவமானமோ பாராட்டோ வந்துவிடுமோ என்ற குழப்பம் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். அவ்வளவே இந்த வலைப்பூ. ஏதோ ஒரு நெருக்கத்தை இந்த வலைப்பூ தருகிறது. கஷ்டங்களை எழுதும்போதும் ரௌத்திரம் வெளிப்படுத்தும்போதும்கூட மெல்லிய நகைச்சுவையுடனே எழுதுகிறாள். (உ.ம் - I Childproofed the house but they still got in!!) அலுவலகம், இலக்கியம், ஆளுமைகள், நிழல்வெளி நீர்வெளி எல்லாவற்றையும் இளக்கிவிட்டு படித்தால் பிடிக்கலாம்.
tinklingsmiles.blogspot.com வலைப்பூவை படிக்கும்போதெல்லாம் ஒரு மென்மையை உணர்கிறேன். தான் மனதில் நினைத்ததை தெளிவாக கம்பீரமாக கோர்வையாக ஸ்மைலியால் சொல்ல முடிகிறது. சமூகத்தை பற்றிய தன் பார்வையை முன்வைப்பதிலும் தயக்கங்கள் இல்லை. இவள் தான் பெண் என்பதில் பெருமைக் கொள்ளும் அதே வேளையில் வலைப்பூவின் எந்த இதழும் பெண்ணியம் பேசவில்லை. சில வேளைகளில் வேதாந்தி போலவும் சில நேரம் வம்பளக்கும் எதிர் வீட்டு பெண் போலவுமான எழுத்து ஆர்வமேற்படுத்துகிறது. என் நீண்ட நாள் தோழி என்பதாலும் எத்தனையோ விஷயங்களை பேசி விவாதித்து பரிமாறிக்கொண்டதாலும் என்னால் இவளின் வலைப்பூவில் இருக்கும் மனம் திறந்த பாசாங்கற்ற எழுத்தை உணரவும் ரசிக்கவும் முடிகிறது.
yalisai.blogspot.com சமீபத்தில் லேகாவின் வலைப்பூவை காண நேர்ந்தது. முதலில் என்னை ஈர்த்தது அந்த வலைப்பூவின் ஒழுக்கம். மிக நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டு தெளிவான வெளிபாடு. எழுத்துக்களில் எங்கும் அலட்டல் இல்லை. பதட்டம் இல்லை. நான் படித்தேன், நான் பார்த்தேன் என் கருத்து இது என்பதான பகிர்தல் மட்டுமே இருந்தது. முழுதாய் ஆற அமர படிக்க இலக்கியமாய் ஒரு வலைப்பூ.. லேகாவிற்கு இந்த முதல் விருது கிடைத்திருப்பதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள் லேகா!
எந்த தேடல்களும் இன்றி எழுதியிருப்பதை அப்படியே உள்வாங்கி ரசிக்கவும் ஒரு மனநிலைத்தேவைப்படுகிறது. இந்த வலைப்பூக்களை படிக்கையில் lightness வந்துவிடுகிறது. மனம் திறந்து கர்வங்கள் களைந்து ரசிக்கலாம்.
-அனிதா
Monday, April 12, 2010
நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா..

போன வருடம் நண்பன் ஒருவன் தொலைபேசினான்.
அனிதா நான் விமல் பேசறேன்..
யேய் என்னடா சென்னை வந்திருக்கியா..
ஆமாம் போன வாரம்..
இப்போ தானே போனே ஆறு மாசம் கூட ஆகலையே என்ன ஆச்சு?
ப்ரியாவுக்கு கல்யாணமாம்..
ஓ ப்ரியா.. காதல். நான்கு வருடங்கள் இருக்கலாம் இருவரும் காதலிக்கத்துவங்கி.
இவன் எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பனாதலால் எங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றபோது, ப்ரியாவுக்கும் நேரா வந்து குடுங்களேன், சந்தோஷப்படுவா என்றான்.
அது தான் அவளை நான் பார்த்த ஒரே தடவை. அழகு தான். கண்கள் பெரியதாய் இருந்தன. கொஞ்சம் முறைப்பது போல் கூட நினைத்தேன். மலர்ந்து பேசினாள். அவன் அருகாமையை விரும்புகிறவளாயிருந்தாள். ஏதாவது சொல்லிவிட்டு என்ன சொல்றே விமல்.. என்று அடிக்கடி கேட்டாள்..
அவள் ஒரு ஆல்பம் வைத்திருந்தாள். அவளுடைய நண்பர்களின் புகைப்படங்களெல்லாம் சேகரிக்கும் பொழுதுப்போக்கு இருந்தது அவளுக்கு. நிறைய முகங்கள். பாஸ்போர்ட் போட்டோக்கள் நிறைய இருந்தன. எனக்கு பரிச்சயமான முகம் ஏதாவது தெரிகிறதா என்று புரட்டினேன்.. எதுவுமில்லை. உங்க கல்யாணமானதும் உங்க ரெண்டு பேரு போட்டோவும் தாங்க என்றாள். கண்டிப்பா என்றுவிட்டு கிளம்பினோம்.
அவளுக்கு தான் திருமணம். இனி சரிவராது என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினாளாம். இவன் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் தொலைபேசிகளுக்கும் பதில் இல்லையாம். ஒரு வாரம் முன்பு தான் நண்பன் ஒருவன் சொன்னானாம்.. அவளுக்குத் திருமணம் என்று. அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.
என்னவாம் அவளுக்கு என்றேன் அசுவாரஸ்யமாய்.. திருமணம் வரை வந்துவிட்டப் பிறகு நண்பனின் காதலி என்ற பிடிப்பெல்லாம் போய்விட்டது போலிருந்தது.தெரியலை.. மண்டையே வெடிக்குது. அவளை பார்க்க முடியலை.. அம்மா நான் போய்ட்டு பேசறேண்டா ன்னு சொல்றாங்க.. அவளுக்கு என்னை உண்மையா பிடிச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டால்ல என்றான்.
மிக சரி. முப்பத்தைந்து வயது வரை காதலனுக்காக காத்திருந்து எதிர்ப்புகளெல்லாம் சமாளித்து வேறு வழி இல்லாமல் பெற்றோர் சம்மதித்து திருமணம் நடத்திவைத்த பெண்ணை எனக்குத்தெரியும். தாலி கட்டிக்கப்போறது நான் தானே.. என்று அவள் மெல்லிசாய் சொன்னது பெரிய அதிர்வாய் எனக்குள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
மிக கடினமான கட்டம் இது. ஒரு ஆணுக்கு, இனி எல்லாம் இவள் என்று ஒருத்தியை உருவகப்படுத்தி, கனவு கண்டு, ஊருக்கெல்லாம் சொல்லி, அவளுக்காய் பணம் ஈட்ட ஓடுகிறபோது,இதெல்லாம் இல்லை சும்மா என்பது எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத குழப்பத்திற்கு தள்ளிவிடுகிறது.
அவ போனா போறா விடுடா. நீ இப்போ அமெரிக்கால வேலை பாக்கறே.. கொஞ்சம் வெளியே போ, வேலைல கவனம் வை. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். வேற சூழல், மனிதர்கள்.. எல்லாம் சரி ஆகிடும் என்றேன்.
என் கணவர் வந்ததும் அவர் பங்கிற்கு காதல் தோல்வி கதைகளெல்லாம் சொல்லி அவனை திசைத்திருப்பிக்கொண்டிருந்தார். இதெல்லாம் வாழ்க்கையில் கட்டங்கள், அனுபவங்கள் என்று ஏதேதோ சொன்னார்.நீ சென்னை ல உக்காந்துகிட்டு என்ன பண்ண போறே? கிளம்பி யூ. எஸ் போ. இல்லேன்னா பெங்களூரு வந்து எங்களோட ரெண்டு நாள் இரு. தனியா உக்காந்துகிட்டு குழம்பாதே என்றார்.
அவள் திருமணத்தை பார்த்துவிட்டு பெங்களூரு வருவதாக சொன்னான்.
இரண்டு நாட்கள் கழித்து இரவு பதினோரு மணிக்கு என் கணவர் எழுந்து நாஸ்ட்ராடமஸ் போல, விமலுக்கு போன் பண்ணுடி என்றார். இந்த ராவேளைக்கு ஏங்க நீங்க வேற என்று திரும்பி படுத்துக்கொண்டேன்.
அடுத்த நாள் மதியம் தொலைபேசி வந்தது நீங்க விமலோட தோழியா? விமல் இறந்துட்டாரு என்றார்கள். ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று அலறினேன். நான் அப்போவே நினைச்சேனே என்று அரற்றினார் என் கணவர்.. எத்தனை அழைத்தும் நான் வரமாட்டேன் அவனை பார்க்க என்று சொல்லிவிட்டேன். அவர் மட்டும் சென்றார். நீ வராததே நல்லது, காண சகிக்கலை என்றார். அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை.
இரவுகளெல்லாம் கண்ணாடி அருகே சென்றால் அவன் விஷ பாட்டிலுடன் என் பின்னே நிற்பது போலவும், ஜன்னல் கம்பிகளின் வெளியிருந்து விஷ பாட்டிலை தூக்கி பிடித்தபடி என்னை எட்டி பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டேயிருந்தது.
பிறகு பதற்றம் குறைந்து, பயம் குறைந்து, பரிதாபம் குறைந்து, பெரும் கோபமாய் உருவெடுத்தது. அவள் திருமணம் முடியும் வரை காத்திருந்து இனி அவள் தனக்கு இல்லை என்று தெளிவாய் புரிந்தபின் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் தனக்கான முடிவை தேடிக்கொண்டவனை நினைத்து வெறுப்பாய் இருந்தது.
நான் இப்படியான அதீத காதலெல்லாம் பார்த்ததே இல்லை. காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஓர்க்குட்டில் புகைப்படங்கள் வெளியிடுபவர்களைத்தான் எனக்கு தெரியும். இன்னும் சற்றே அதிகப்படியாய் நான்கைந்து பெண்களுடனோ ஆண்களுடனோ ஒரே நேரத்தில் காதல் பேசுபவர்களை கூட ஏதோ சில ரசாயன காரணங்கள் என அப்படியா என எடுத்துக்கொள்ள முடிகிறது. யாரோ சொல்ல கேட்டேன் சராசரி மனிதனின் வாழ்வில் குறைந்தது பதிமூன்று காதல்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்துபோகுமென..
போன வாரம் அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாய் சேதி கிடைத்தது. மரணங்களும் தோல்விகளும் நிகழ நிகழ காதல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
சென்ற வாரம் விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு காதல் சொட்ட சொட்ட வெளியே வந்தேன். பின்னாலேயே வந்த என் கணவர் பார்க்கிங் லாட் டோக்கன் உங்கிட்டயா இருக்கு என்றார்.. ஐயோ இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படலையா நீங்க என்றேன்..
படம் நல்லாதான் இருந்துது ஆனா ஆட்டோகிராப் மாதிரி இல்லை.. அதுதான் என் டைப். அதுலயும் தானே காதல் இருக்கு என்றார் அப்பாவியாக..
ஏஸி வேண்டாம் என்றுவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டேன். காற்றில் குளுமை ஏறியிருந்தது.
- அனிதா
Subscribe to:
Posts (Atom)