Tuesday, February 13, 2007

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடைய‌தாக‌வும் இருக்க‌லாம்.

ம‌ற‌ந்த‌தா ம‌றுத்த‌தா எனத் தெரியாத‌ ப‌ட்ச‌த்தில்
ம‌ட‌ல்வில‌க்கி தூசு அக‌ற்றி சுவ‌ரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்த‌வ‌ரும் பெற்ற‌வ‌ரும்
இன்னும் பிரியாம‌ல் இருக்க‌வும் கூடும்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்
என் ஒழுங்கின்மையின் நுணுக்கங்களை
சோதித்துக் கொண்டிருந்தப் புத்தகத்தை
மூடிய வேகத்தில் சிதறித்தெறித்தன‌
சில முளைக்கட்டிய விதைகள்.
தலையணைக்குள் முகம் புதைத்து
காயத்துவங்கியிருந்த விதைகளை
நெருடிக்கொண்டிருந்தேன்.
ஜ‌ன்ன‌லின் வெளியே
அன‌ல்காற்றின் சுழ‌ற்சியில்
இடைவ‌ளைத்து சுழ‌ன்றுக்கொண்டிருந்த‌து
சூல்தாங்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌
ச‌ற்று முன் இருந்திராத‌
அந்த‌ ம‌ர‌ம்.

Wednesday, February 07, 2007

காமம் குழைத்துப் பூசிய‌
என் மூளைச்சுருக்கங்களிலிருந்து
ஒவ்வொன்றாய் உதிரத்துவங்குகின்றன‌
மலரின் ஸ்பரிசமும்
தனிமையின் நிச்சலனமும்
மரணத்தின் இயல்பும்.
சில கூரிய வாஞ்சைகளின்
முடுச்சுக்கள் இளகியதும்
பக்கு பக்காய் உதிர்ந்துவிட்டிருந்தது
என் காமமும்.

Tuesday, January 30, 2007

நா.முத்துகுமாரும் கோலிவுட் கோர்ட்டும்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சியில் நா.முத்துகுமாருடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. என்னை பாதித்த கவிதைகளில் ஒன்றாய் அவருடைய 'தூர்' கவிதை இன்னமும் இருப்பதாலும், வெயில் படத்தின் வெயிலை உருவகப்படுத்திய பாடலும், உருகுதே மருகுதே பாடலும் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களில் திகட்டாமல் கேட்க முடிவதாலும், ஒரு வளரும் கவிதாயினியின் ஆர்வத்தோடு அந்நிகழ்ச்சியை பார்க்கத்துவங்கினேன். அத்தனை ஆர்வமும் பத்தே நிமிடங்களில் போய்விட்டது.

ஒரு கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் தரக்கூடிய அதிகபட்ச தண்டனை அவனை கேள்வி கேட்பதும் அதற்கு ஒரு வரியில் பதில் எதிர்பார்ப்பதும் தானோ என்று நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைத்தது. நீங்கள் எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் (600) என்று ஆரம்பித்து பிடித்த இசையமைப்பாளர் யார் (எல்லோரையும் பிடிக்கும்), ஏன் தத்துவ பாடல்கள் எழுதுவதில்லை (கதைகள் வருவதில்லை), கவிதைகளுக்கும் திரைப் பாடல்களுக்குமான வித்தியாசங்கள் என்ன (எழுத்து சுதந்திரம்), இசையில் வார்த்தைகள் புதைந்துவிடுவது பற்றிய அபிப்பிராயம் (???) என்று பல ஆண்டுகளாய் கேட்கப்பட்டுவரும் அதே புளித்த கேள்விகள் தான். இதற்கெல்லாம் பதிலளிக்க முத்துக்குமார் தேவையா என்று தெரியவில்லை.

நீங்கள் ஜென் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருப்பதனால் அவைகளை உங்கள் பாடல்களில் உபயோகிக்கின்றீர்களா என்றார் பேட்டி எடுப்பவர். எந்த தத்துவமாயினும் நிகழ்வுகளாயினும் ஒரு மனிதன் உள்வாங்கி பின் வெளிப்படுத்தும்போது அவனுடைய தனிபட்ட கருத்துக்களும் அதில் சேர்ந்துக்கொள்ளும் என்பதுத் தெரிந்ததே. ஆக, பாடல்களில் வரும் தத்துவங்கள் தத்துவங்களாய் இல்லாமல் அவைகளின் பாதிப்புகளாய் இருக்கின்றன என்று சொல்ல முயற்சித்தார் கவிஞ‌ர். எல்லோரும் புரிந்துக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

நிகழ்ச்சியின் இறுதி வரை பதினெட்டிலிருந்து இருபது வயது வரையான நாற்பது இளைஞ‌ர்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். கேள்வி கேளுங்கள் என்றதும் கேட்டார்கள். என்ன பதில் சொன்னாலும் ஏற்று கொண்டு மைக்கை அடுத்தவர்க்கு கொடுத்தார்கள். யாருமே இயல்பாய் இல்லாத இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒரு இலக்கியவாதியோ பாடலாசிரியனோ எவ்வளவு தூரம் தங்கள் எண்ணங்களையும், பார்த்த‍, கேட்ட,படித்த விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ள முடியும்?

மற்றபடி நா.முத்துகுமாரின் புத்தகங்கள் பற்றிய‌ கேள்வியும், இடைவெளியில் சேனல் மாற்றியதில் பார்த்த அவரது பாடல்களும் நன்றாக இருந்தன. ஆழ்ந்த கருத்துக்களும் சுவையான சிந்தனைகளையும் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து மனம்திறந்த பதில்கள் வரவழைக்கும் இன்னும் செறிவான கேள்விகளுக்கு சற்றே மெனக்கெடலாம் என்று தோன்றுகிறது.

Wednesday, January 10, 2007

கரிசனம்

அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற‌ சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்