Tuesday, December 04, 2007

சில கவிதைகள்...

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது

பின் மற்றொன்று
மற்றுமொன்று.

பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.

சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.


யாருமற்ற விடியல்

மார்பும் வயிறும் தொடைகளும்
அதனதன் கனத்தில் அழுந்தியிருக்க
குப்புற கிடந்தது என் உடல்.

உள்தாழிட்ட அறைக்குள் அரைக்கண் மூடிய முகம்
உணர்வுகளற்று வெளிறியிருப்பது
இதுவரை யாருக்கும் தெரியாது.
அதையே உற்றுப் பார்த்து சலித்துப்போனவளாய்
நீரூறி பெருத்த கழிவறை கதவிடுக்கில் நுழைந்து
வென்டிலேட்டர் வழியாய்
பறந்து வெளியேறினேன்.

கூரை வேய்ந்து மழை ஒழுகும் திரையரங்கிலும்
சாவகாசமாய் தெருவோரத் திருநங்கையிடம் பேசிக்கொண்டும்
மரமேறி பெயர் தெரியாத மிருகத்தின்
கடைசி கலவி ரசித்தபடியும் சுற்றி வந்தேன்.

சில மணி நேரங்களில்
பசியில் குழைந்தழைத்த உடலுக்குள் புகுந்து கொண்டு
சமைக்கத் துவங்கினேன்.


சுழற்சி

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.

அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்

வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்

எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்

பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.

- அனிதா

நன்றி : உயிரெழுத்து

Wednesday, November 14, 2007

எண்ணங்கள்

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசெள‌க‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

- அனிதா

நன்றி : புதிய பார்வை

Friday, November 02, 2007

உறுபசி - நாவல்

"சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு" என அதிரடியாய் துவங்குகிறது உறுபசி நாவல்.
நாவலை வாசிக்கும் நேரம் கல்லூரி நாட்களின் மறக்கப்பட்டிருந்த நண்பர்கள் கண்முன்னே நடமாடிக்கொண்டிருந்தார்கள். நாவல் முடிந்ததும் மீண்டும் தனித்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.

கதை நெடுகிலும் சம்பத்தும் அவன் நண்பர்களும் வியாபித்திருக்கிறார்கள். இறந்தது சம்பத்தாய் இருப்பினும் மிக வசதியாய் கதைக்குள் நம்மை பொருத்திக்கொள்ள முடிவதால் யாருமே அந்நியமாய் தெரியவில்லை.

நாவல் முழுவதும் மரணம் பனிக்குள் உறைந்த கடலென விரிந்திருக்கிறது.மரணத்திற்கு பின் துவங்கி மரணத்துக்கு பின்னே முடியும் கதையின் முடிவில் வாழ்விற்கான வெளிச்சத்துடன் நிறைத்திருப்பது ஆறுதலாயும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

யாழினியும் ஜெயந்தியும் அழகாய் செதுக்கபட்டிருக்கும் கதாபாத்திரங்கள். யாராவது ஒருவருடன் நிச்சயம் நம்மை பொருத்தி பார்க்க தோன்றும். சம்பத்துடனான இருவரின் உறவை, வெவ்வேறு காலங்களுக்கும் சம்பத்தின் மாறாத அதே மனநிலை வெவ்வேறு விதமாக இருவரையும் எப்படி பாதிக்கிறது என சுலபமாய் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. யாழினி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவளாகவும் ஜெயந்தி சுழலில் சிக்கிய படகெனவும் பிம்பங்கள் உருவாகி வலுப்பெறத்துவங்கும் தருணத்தில் மெல்ல அவை கரைந்தும் போவது சுவாரஸ்யம்.

ஒருவன் மிகுந்த வலிகள் சுமந்து மின்விசிறி பார்த்தபடி நினைவுகளை அசைபோடுவது போல இருக்கிறது நாவல். எஸ். ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையும், கதை சொல்லும் விதமும் சாவகாசமாய் யோசித்து உணர்ந்து உண்மைகாளை உள்வாங்கும் பக்குவத்தை உருவாக்கி விடுகிறது.

கதைக்காக படிப்பதானால் உறுபசியில் ஒன்றுமில்லை. கூடவே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளையும் சுபாவங்களையும் ருசித்து படிக்க விருப்பமிருப்பின், உறுபசி நல்ல அனுபவம்.

நாவல் : உறுபசி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 75.00
பக்கங்கள் : 135
பதிப்பகம் :
உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.

- அனிதா

Monday, October 22, 2007

பத்மப்ரியாவும் சாமியும்.

ஜூனியர் விகடனில் இதைப் பற்றி வாசிக்கும் வரை ஏதோ டைரக்டர் நடிகையை அறைந்த விவகாரம் என்று நினைதிருந்தேன்.
பிறகு தான் வேறு சில விஷயங்களும் தெரிய வந்தன..

டைரக்டர் சாமி மீதான பத்மப்ரியாவின் பாலியல் புகாருக்கு சாமி இப்படி பதிலளித்திருக்கிறார்: "பத்மப்ரியாவை கேமரா க்ளோஸப் பில் பார்த்தபோது அவருக்கு மேலுதட்டிலும் தாடையிலும் ரோமங்கள் இருந்தன. நான் ஷேவ் செய்துகொண்டு வரும்படி சொன்னேன். இப்படி ஆம்பளை போல இருக்கும் பெண்ணை பார்த்தால் எனக்கு செக்ஸ் உணர்ச்சி எதுவும் வரவில்லை" என்கிறார்.

இயக்குனர் சாமிக்கும் இன்னும் இது பற்றி தெரியாத மற்ற ஆசாமிகளுக்கும் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் பூனை முடிகள் இருப்பது வெகு இயல்பாகி விட்டது. இதை பரிணாம வளர்ச்சி என்றோ, மரபு, ஹார்மோன், வாழ்க்கை முறை, இன்னும் என்ன வேண்டுமானாலும் ஆராயட்டும், முகத்தில் முடி இல்லாத பெண்கள் பார்ப்பது மிக அரிது.

பெண்களுக்கு சில காலம் முன்பு வரை இது பெரும் கூச்சமாகவும் ஏன் குற்ற உணர்ச்சியாகவும் (!) கூட இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. தோழிகளுடன் பேசி, அச்சம், குழப்பங்கள் நீங்கி தெளிவாகி வருகிறார்கள். அழகு நிலையங்களில் நிறைய பிஸினஸ் ஆவது த்ரெட்டிங் (threading) என்னும் முகத்தில் ரோமங்கள் அகற்றும் முறையால் தான். புருவம் திருத்துவதும் இந்த முறையில் தான். ஆபத்தில்லாத, பக்க விளைவுகள் இல்லாத, சீக்கிரம் அகற்ற முடிந்த வழி. இரெண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ, மாதமொருமுறையோ செய்து கொள்கிறார்கள். இது தவிர வேக்ஸிங் (waxing), எலெக்ட்ராலஸிஸ் (electrolysis), லேஸர் (laser) என்று மற்ற வழிகளும் உள்ளன. அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்றைய நவீன யுகத்தில் இதற்கெல்லாம் வெட்கப்பட தேவையோ, நேரமோ இல்லை.

மகிழ்வான விஷயம் என்னவென்றால் ஆண்களும் இதையெல்லாம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது தான். கூட பணிபுரியும் பெண்களையோ, அம்மா மற்றும் சகோதரிகளையோ தினமும் பார்ப்பவர்கள், இது எத்தனை சாதாரணம் என்று கவனித்திருக்கலாம். யாரும் "நீ ஷேவ் செய்யலையா இன்னிக்கு" என்று (நகைச்சுவைக்கு கூட) கேட்பதில்லை. முகத்தில் முடி இருக்கும் பெண்களை காதலிப்பவர்களையும், கைக்குள் வைத்து தாங்கும் கணவர்களையும் பார்த்தபடி தான் இருக்கிறோம்.

பெண்கள் எப்படி இருப்பினும் அழகிகள் தான். மற்றபடி சாமியின் இந்த அருவருக்கதக்க எகத்தாளமான குற்றசாட்டு அவர் மனமுதிற்சியின் அளவை காட்டுகிறது. முகத்தில் முடி இருப்பது தான் அவர் செக்ஸ் உணர்ச்சிகளை தடுக்கவோ தூண்டவோ செய்யுமேயானால் அவர் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் நிறைய இருக்கிறது.

- அனிதா

Thursday, October 18, 2007

முத்தக்காடு

முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்

திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.

-அனிதா

Wednesday, October 10, 2007

பெங்களூரு புத்தக கண்காட்சியில் உயிர்மை..

பெங்களூருவில் அக்டோபர் 12 ல் துவங்கி 21 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகமும் இதில் பங்கேற்கிறது.

உயிர்மை பதிப்பகம் கடந்த நான்கு ஆண்டுகளில் கதைகள், நாடகங்கள், கவிதைகள் என பல்வேறு சுவைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

நவீன தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, கி.ராஜநாராயணன், தியோடர் பாஸ்கரன் மற்றும் பலரின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.

உயிர்மை பத்திரிக்கையின் ஐம்பதாவது இதழுக்கும், கரிசல் விருது பெற்றமைக்கும், புத்தக கண்காட்சி சிறப்பாய் நடக்கவும் வாழ்த்துகள்!!!


பெங்களூரு புத்தக கண்காட்சி 2007

தேதி: அக்டோபர் 12 லிருந்து 21 வரை
நேரம்: காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை
ஸ்டால் எண் : 163
இடம்: PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

உயிர்மையின் புத்தக பட்டியல் விவரங்களை இங்கு காணுங்கள்.

- அனிதா

Monday, August 20, 2007

காந்தி மை பாதர் - விமர்சனம்

சமீபத்தில் நான் பார்த்த இரண்டு திரைப்படங்கள் - சிவாஜி, காந்தி மை பாதர் (Gandhi my Father). சிவாஜி பற்றி ஏற்கனவே பலரும் தேவையான அளவு அலசி ஆராய்ந்து பிழிந்துலர்த்திவிட்டதால், "காந்தி மை பாதர்" பற்றி சில...

கதை தெரிந்தால் படம் பார்க்க நன்றாக இருக்காது என்பது பொருந்தாத, நானும் பார்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டிய Period films வரிசையில் மற்றொன்று.

முதல் தயாரிப்பாய் இருப்பினும், Blockbuster, Superduper hit என்றெல்லாம் பேசப்படாது என்று தெரிந்தும், மசாலாக்களில் இறங்காமல் நம் பிரகாஷ்ராஜ் போல நல்ல படம் குடுக்க நினைத்த அனில் கபூரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காந்திக்கும் அவர் மகன் ஹரிலாலுக்குமான உறவே படம். தான் படித்த பேரிஸ்டர் படிப்பு, தன் மகனுக்கு தேவை இல்லை என்றும், அடிப்படை கல்வியைவிட உரிமைகளுக்காய் போராடி சிறை செல்வது வாழ்வை கற்றுத் தரும் என்றும் நினைக்கும் காந்தியின் எண்ணங்களும், அதன்படியே மகனை "சுதந்திரமாய்" தன் போராட்டப் பாதையில் நடக்கச் செய்ய முயற்சிப்பதும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகி விடுகிறது. படிப்படியாய் சீர்குலையும் ஒருவரின் வாழ்க்கை கண்முன்னே விரியும்போது வேதனையே மிஞ்சுகிறது.

காந்தி மீது மிகுந்த மரியாதையும், பயமும் கொண்ட ஹரிலால், இந்தியா திரும்புவதற்குமுன் தன் தந்தையிடம் மிகத் தெளிவாய் நியாயம் கேட்பதும், அவர் பேச்சற்று நிற்பதுமான உரையாடலில் இனி ஹரி விரும்பிய பேரிஸ்டர் படிக்கவோ, அவன் விரும்பிய நியாயமான வாழ்வை கூட வாழ முடியாது என்றும் புரியும் இடம் முக்கியத் திருப்புமுனை.

காந்தியின் வேகம், உற்சாகம், தன்னம்பிக்கை எல்லாம் அப்படியே கொண்ட மகன், சிறிது சிறிதாய் தோய்ந்து போகிறான். படிப்பும் இல்லை, தொழில் தொடங்க வசதி இல்லை, அப்பாவின் பணத்தில் வாழ்கிறோமென்ற கழிவிரக்கம், நான்கு குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள முடியாத இயலாமை எனத் துயரத்தில் இருக்கும் ஒருவன். இவன் வாழ்வைத் திருத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தும், காந்தி அவற்றைத் தவறவிடுவதும், புறக்கணிப்பதும், அவனாக சுயமாய் வேலை செய்யும்போது இவர் சென்று தன்னுடன் வந்துவிடும்படி வேண்டி மீண்டும் அவன் காயப்பட்டு குறுகிப் போவதும் நடந்தபடி இருக்கிறது. கடைசி வரை தனக்கென்று எவருமே இல்லாமல், சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே செய்ய முடியாமல் தெருவில் கிடந்து இறந்து போவானென்றும் (கதையே தெரியாமல் படம் பார்க்க சென்றாலும்) சுலபமாய் ஊகிக்க முடிகிறது.

ஆப்பிரிக்கா, குஜராத், கல்கத்தா என காட்சிகள் தெளிவாய் உணர்த்துவதால் இட குழப்பங்கள் இல்லை. காந்தியின் வெவ்வேறு போராட்டங்களும், படிப்படியாய் புரட்சிகள் செய்வதும், அச்சமயங்களில் ஹரிலாலின் நிலையும் ஒப்பீடாய் காட்டப்படுகிறது.

மெல்லிய இசையும், கண் உறுத்தாத காட்சியமைப்பும், கருப்பு வெள்ளை காட்சிகளை படமாக்கிய விதமும் அழகு.
வசன உச்சரிப்பு, காந்தியின் அச்சாய் தோற்றம்(காது உட்பட) வயோதிக ஒப்பனை எல்லாம் தர்ஷன் ஜரிவாலா (Darshan Jariwala) வுக்கு பொருந்தி வந்திருக்கிறது. ஹரிலாலாய் வரும் அக்ஷை கண்ணா (Akshay Khanna) உற்சாகமும் கனவுகளும் கண்ணில் தேக்கி அலையும்போதும் சரி, சிதைந்தபின் அன்பிற்கு ஏங்கி அம்மாவைத் தேடி வரும்போதும் சரி, காட்சிக்கு காட்சி மிளிர்கிறார்.
காந்தியின் மனைவி கஸ்தூர் (ஷெபாலி ஷெட்டி) க்கு வயோதிக ஒப்பனை அடை அடையாய் கண்ணை உறுத்துகிறது. மகன் தவறான பாதையில் செல்வதை வெறுமே பார்த்து வேதனைப்படுவதும், காந்தி செல்லும் இடமெல்லாம் கூட செல்வதும் மட்டுமே அவர் வேலை என்பதுபோல் காட்டி இருக்கிறார்கள். ஹரிலாலின் மனைவியாய் வரும் பூமிகா, நல்ல மனைவி, நல்ல மருமகள், நல்ல தாய் பட்டங்கள் வாங்கிக்கொண்டு இறந்து போகிறார்.

காந்தி செய்த பிழையால்தான் மகன் கஷ்டப்படுகிறான் என்பது தெளிவாய் தெரிகிறது. காந்தி மேல் ஏற்படும் கோபத்தை படிப்படியாய் திசை திருப்ப முயற்சித்திருக்கிறார்கள். சரி படிக்க வைக்கவில்லை, அதற்குபிறகு எல்லா உதவியும் செய்தாரே.. அப்பொழுதும் ஏன் அவன் திருந்தவில்லை என்பதுபோல் காந்தி இமேஜ் பாதிக்காமல் இருக்க கவனமாய் இருப்பதால் சின்ன செயற்கைத்தனம் வந்துவிடுகிறது.

வரலாற்றில் கவனிக்கபடாமல் அமிழ்ந்துபோன சிறிய பகுதியை தெரிந்துக்கொள்ளும் எண்ணத்தோடோ, சுதந்திரம் வந்த கணத்தை உணர்ந்து ரசிக்கவோ, என்னதான் நடந்துது அந்த ஆளுக்கு என்ற வெறும் ஆர்வத்துக்காகவோ, எப்படியானாலும் முன் முடிவுகளின்றி ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம்.

-அனிதா

Thursday, August 16, 2007

என் பிரிய வழிபோக்கனுக்கு

இன்னும் நேரமிருக்கிறது
காதலோ காமமோ கவிதையோ
எது தோன்றினாலும் பேசு.

கனவுகள் நெய்வதும்,உயிர் உருக காத்திருப்பதும்
இதயம் பரிமாறுவதும்
இன்ன பிற வசனங்களையும்
பொறுமையாய் கேட்டுக்கொள்கிறேன்.

நெடு நாள் சலிக்காமலிருக்கும்படியாய்
கவனமாய் நினைவுகள் சேகரித்துவை
பிரிவுகள் பற்றிபேசாது இருள் கவியும் வரை
என் விரல்பின்னி தோள்சாய்ந்துக்கொண்டிரு.

என் ரயில் வரும் வேளை
தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
நகர்ந்துவிடு.

Tuesday, August 07, 2007

அந்தர் முகம் - நாவல்

என்டமூரி வீரேந்திரநாத் எழுதி தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதிர்ச்சிகளுடன் துவங்கி அதிர்ச்சிகளுடனே நீண்டு, அதிர்ச்சியாய் முடிகிறது நாவல்.

எத்தனை விதமான மாயைகள் சூழ வாழ்கிறோமென புரியும்போது உண்மை முகத்தில் அறைகிறது. கதையின் நாயகனைப் போல பலரும் நம்மைச் சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மீதான நமது அபிப்பிராயங்கள் சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லை. அல்லது அவர்களைப்பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ள நாம் மெனக்கெடுவது கூட இல்லை. வேஷங்களிட முற்படாத மனிதர்களை வேஷமணிந்தவர்கள் புறக்கணிப்பதும் அலட்சியமாய் கையாள்வதும் தினமும் நம்மிடையே நடப்பதுதானென உணர்த்துகிறது.

கதையெங்கும் ஒரு மெல்லிய எள்ளல் இருப்பது பெரும் பலம். எத்தனையோ நிகழ்வுகளை கடந்தபோதும் ,சமூகம் குறித்தான நாயகனின் கண்ணோட்டம் மாறாமலிருப்பதும், மாற்றிக்கொள்ள தேவை இல்லையென நமக்கு படுவதும் அந்த கதாபாத்திரத்தின் மதிப்பை கூட்டி விடுகிறது.

கதை நெடுக மெல்லிய நீரோடை போல பெண்கள் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களை கையெடுத்துக்கும்பிடுங்கள் என போதிக்காமல், பெண்களே சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம் காரணம் என்றும் பழிச்சொல்லிகொண்டிருக்காமல், சற்று கூட குறைய இருந்திருந்தாலும் அர்த்தங்கள் மாறி விடும் அபாயம் இருக்கும் இது போன்ற கதைகளில் மிக கவனமாக கையண்டிருக்கிறார் வீரேந்திரநாத்.

திரைப்படம் பார்ப்பதுபோல் ஆங்காங்கே தோன்றினாலும் மனிதர்களின் பொய் முகங்களை கிழித்தெறியும் இது போன்ற நாவல்களில் அவைகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.

சமூகம் என்ற ஒன்றை உடைத்தெறியும் எண்ணங்கள் இல்லாமல், அதற்குள் இருக்கும் மனிதமன அழுக்குகளை மட்டுமே வெளிக்கொண்டுவர மேற்கொண்ட சிறந்த முயற்சி இது.இந்த நாயகன் நிச்சயம் உங்களருகில் இருக்கும் ஒருவரை நினைவுபடுத்துவான் அல்லது அவன் நீங்களாகவே கூட இருக்கலாம்.இப்படி தான் இருக்கிறோம் எனத்துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ள முடிந்தால் இந்த கதை ஒரு நல்ல அனுபவம்.

-அனிதா

Friday, August 03, 2007

டாஓ டே சிங்க் - சீன நூல்


ஏறக்குறைய இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன மொழியில் உருவாக்கபட்ட டாஓ டே சிங்க் (Tao Te Ching), சீன புத்தகங்களிலேயே மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் எனலாம். எல்லா நிகழ்வுகளின் அடிப்படையிலும் விவாதங்களே வேண்டியிராத உண்மை ஒன்றிருப்பதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம் எல்லா சீன சித்தாந்தங்களுக்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.

டாஓ டே சிங்க் எனத் தட்டச்சினால், எண்பத்தியோரு அதிகாரங்களே கொண்ட இந்த நூலின் பல வடிவங்கள் வந்து குவிந்துவிடும். அரை மணியில் படித்துவிடலாம் என்றாலும் மலரை பற்றிய விவரணை மலரை குறிக்கவில்லை என்றும், மண் பற்றிய வாக்கியங்கள் மண்ணைச் சொல்லவில்லை என்றும் உணரும் நேரம் புத்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.


வள்ளுவரை யாரேனும் பார்த்திருக்கிறார்களா, அவர் தாடி வைத்திருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேள்விகள் மிச்சமிருப்பதுப்போல டாஓ டே சிங்க்கை எழுதிய லாவோ ட்ச்சு (Lao Tzu - வயதான வாலிபன் என்று பொருள்) பற்றியும் சரியான தகவல்கள் இல்லை. இருந்தும் சுவாரஸ்யமாய், அவர் மிக வயோதிகமான நிலையில், எருமை மேல் பயணித்து மலைகளுக்குள் வசிக்க விரும்பி புறப்பட்ட நேரம், ஒரு எல்லை காவலாளி அவரை நிறுத்தி அவர் கற்றவையும் போதித்தவையும் எழுதி தருமாறு வேண்டிக்கொள்ள, அவர் அங்கேயே எழுதிக்கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாயும் பின் அவரை யாருமே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆழ்ந்து படிக்க வேண்டாம். தட்டையான முதல் வாசிப்பிலேயே மனது மிக லேசாகி விடுகிறது.கவிதை போன்ற சின்ன சின்ன உவமைகளுடனும், மிக எளிய கற்பனை செய்துக்கொள்ளமுடிந்த விவரணைகளுமாக தொடரும் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த போதகரின் அனுபவங்களை வழிபோக்கனின் அலட்சியத்தோடு சொல்லியிருப்பதுத் தெரிகிறது.


புத்தகத்திலிருந்து சில‌ :-


அதிகாரம் 3

திறமைகளை பெரியதாய் எண்ணாமலிருந்தால் பொறாமைகள் வருவதில்லை. பொருட்களை மதிப்பிடாமலிருந்தால் திருடும் எண்ணம் வருவதில்லை. இன்னவை தான் பிடித்தவை என முடிவுகளெடுக்காமலிருப்பின் குழப்பங்கள் வருவதில்லை.

தேவையற்ற எண்ணங்களால் இதயத்தை நிறைப்பதற்குபதில் நல்ல உணவு உண்டு வயிறு நிறைக்கலாம். நோயில்லாமல் காத்துக்கொள்ள முற்படலாம். ஆசைகளற்ற சாதாரண மனிதனிடம் சாமர்த்தியக்காரர்களின் வேலைகள் எடுபடுவதில்லை. எதிர்ப்பார்ப்புகளின்றி காரியங்களைத் தொடர்ந்தபடி இரு. தொல்லையே இல்லை!!


அதிகாரம் 45

சிறந்த சாதனைகள் முழுமையற்றவையாக தெரிகின்றன, இருந்தும் அதன் உபயோகங்களை அலட்சியப்படுத்திவிட முடிவதில்லை. பூரணமாய் இருப்பது ஒன்றுமில்லாததாய் தெரிகிறது, இருந்தும் அதை வற்ற வைக்க முடிவதில்லை.

மிக நேராக இருப்பது கோணலாக‌ தெரிவதும், சிறந்த அறிவு குழப்புவதாய் தெரிவதும், சிறந்த பேச்சு திக்குவதாய் தோன்றுவதும் இவ்வாறாகவே இருக்கிறது. அசைவது குளிரை குறைக்கிறது. அசைவற்றிருப்பது சூடு தணிக்கிறது.

அமைதியாய் இருப்பது எல்லா சஞ்சலங்களையும் நேர்படுத்திவிடுகிறது.

மேலும் படிக்க‌ :-
http://en.wikipedia.org/wiki/Tao_Te_Ching

http://www.religiousworlds.com/taoism/ttcstan3.html
http://www.sacred-texts.com/tao/taote.htm

Thursday, July 12, 2007

நெடுங்குருதி - ஒரு பார்வை

தினந்தோறும் வேலையிலிருந்து வேம்பலைக்கு திரும்புவதுபோல் இருந்தது இத்தனை நாளின் நெடுங்குருதி வாசிப்பு. இவ்வளவு அருகிலிருந்து ஒரு கிராமத்தை இதுவரை பார்த்ததில்லை.

ராமகிருஷ்ணன் அவர்களின் ஆரவாரமில்லாத கனமான நடை பழகியதுதான் என்றாலும் நானூறு பக்கங்களும் தோய்வில்லாத நடை வியக்க வைக்கிறது. ஒரு குடும்பத்திலிருந்து கதைத் துவங்கினாலும் குறிப்பாய் யார் பார்வையிலும் கதை சொல்லப்படவில்லை. சில நேரம் வெவ்வேறு மனிதர்களிடம் நெருங்குவதும் சில நேரம் விலகுவதுமாய் நகர்கின்றன நிகழ்வுகள்.

சம்பவங்களை கோர்த்துச் செல்லும் அழகில் பெரிய திருப்புமுனைகளின் தேவை மங்கி விடுகிறது. பிறப்பும் இறப்பும் எத்தனை இயல்பென புரிந்துக்கொள்ளவும், சாதாரணமான யூகிக்க முடிந்த கதைகளுக்கு பழகி இருப்பவர்களை சற்று அதிர்ச்சிகளுடனே அவற்றை ஏற்றுக்கொள்ள பழக்குகிறது இப்படி தானே நடக்கும் என்பதான கதையோட்டம்.

சற்றே பெரிய பத்தி என்று அடுத்த பக்கதிற்கு தாவுபவர்கள் கதையின் மிக முக்கிய சம்பவத்தை நழுவ விட்டிருப்பார்கள். எப்பொழுதோ வாழ்ந்த மிகச்சாதரண மக்களை யாரவது கோடிட்டு காட்டினாலும் நமக்கும் அவர்கள் நினைவுக்கு வந்து விடுவது ஆச்சர்யமாகவும், மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. நாகு, ரத்னாவதியுடன் சென்னம்மா, நீலா, மல்லிகா, வகீதா கூடவே கந்தர்வ சிலையும் அருகிருப்பது எழுத்தின் வலிமையை காட்டுகிறது.

ஒரு வெயில் காலத்தில் மனம் கசங்கி கிடப்பதும், மழை பொழிதலோடு துளிர்த்துக்கொள்வதுமாய் இயற்கையிலிருந்து பிரிந்திடாத கிராமங்களையும் கிராமவாசிகளையும் புறக்கணிக்கமுடியாத அவரவர் நியாயங்களையும் முரண்களின்றி கொடுத்திருக்கும் ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் பக்கங்களைத்தீர்க்கவும், வெளிவரவும் மனதற்றுப்போகிறது.

இன்னும் தாமதித்துக்கொண்டிருப்பவர்கள் பெட்டி படுக்கையுடன் வேம்பலைக்கு போய் வாருங்கள்.வேம்பர்களையும் சாயக்காரர்களையும் நான் விசாரித்ததை சொல்லுங்கள். பயணம் இனிதாகட்டும்.

நாவல் : நெடுங்குருதி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 275.00
பக்கங்கள் : 472
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.

எழுத்தாளரின் மற்றும் சில நூல்கள் :

விழித்திருப்பவனின் இரவு
உறுபசி
அரவான்
பதேர் பாஞ்சாலி
நடந்து செல்லும் நீரூற்று
கால் முளைத்த கதைகள்

-அனிதா

Thursday, July 05, 2007

மல்லிப்பூக்களும் நிலக்கடலைகளும்.

முட்டி மோதி ரயில் ஏறுபவர்களில் நானும்.
அவளும்.

அடித்துபிடித்து ஜன்னலோரம் உட்கார்ந்துக்கொண்டேன்.
கசங்கலின்றி அருகில் அமர்ந்தவள்
எனக்கு பிடிக்காத நாவல் படித்தபடி
நிலக்கடலை கொறிக்கிறாள்
பூனைமுடிகளற்ற சிவந்த கன்னங்கள் வலிக்காதபடி.

அசைவதும் ஆடை திருத்துவதும்
இயல்பாய் இல்லாவிடினும்
அழகாய்த்தானிருந்தாள்
நெரிசல் பார்வைகளிலிருந்து ரயிலிறங்கி மறையும்வரை.

என் மல்லிப்பூக்களையும் மருதாணிக் கைகளையும்
விழிவிரிய பார்த்தபடி நிற்கிறது
இதே கூட்டம்
இப்போது.

அவரவர்க்கும் பொழுது கழிந்தபடிதானிருக்கிறது

- 2007 சங்கமம் கவியரங்கத்தில் வாசித்தது.

Thursday, June 21, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

என் பிறந்தநாளுக்கு நண்பர்களின் கவிதைகள் :

இதோ உன் பிறந்தநாள்
பூக்கள் எல்லாம் இன்றுதான் பிறந்தன
வண்ணங்கலோடு பட்டாம்பூச்சிகளும்
தேவதை பற்றிய கதைகளும் வானவில்லும்
இன்றுதான் பிறந்தன
உனக்கு பரிசாக அந்த வண்டுகளின் தேனையும்
பூக்களின் நறுமணத்தையும் தருகிறேன்
வாழ்க நீயும் உன் கவிதையும் நூறாண்டுகள்!

- தியாகு ((c) seewtypie2000@gmail.com)

ஏ சூரியனே..
அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை
சொல்லி விட்டாயா?
மழை மேகத்தால்
உன் அழகு முகம் மறைத்து சொல்லாமல்
ஒடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே.
நாளையும் இதே வழியாகத்தான் போயாக வேண்டும் நீ. (!!!)

- வீணாப்போனவன் ((c) veenaapponavan@yahoo.com )

:)

நண்பர்களுக்கு நன்றி!!!

Wednesday, June 13, 2007

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்து
ஏன் அழறீங்க என்றான்
பின் என்ன நினைத்தானோ அழாதீங்க‌ என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

Monday, June 04, 2007

தெறித்துச் சிதறும் வார்த்தைகள்

இடைவிடாது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

இறைந்து கிடக்கும் சொற்கள் சேர்த்து
நேர்க்கோட்டில் அடுக்குகிறேன்
உன்னை சுவாரஸ்யபடுத்த புதிது புதிதாய் செதுக்கியெடுக்குறேன்
நயமிகு வார்த்தைகளை

கண்ணீரோ சிரிப்போ சலிப்போ பூசி மேலும் அலங்கரிக்கிறேன்.
ஊறவைத்து அலம்பி மிதமாய் சூடெற்றி
மிக கவனமாய் உன் விழி பார்த்தபடி
மெல்ல உதிர்க்கிறேன் ஒவ்வொரு வரியாய்

கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்
துவக்கமும் முடிவுமற்ற ஒற்றை வரியில்.

சிறு உரசலுக்கு உடைந்துவிடுகிற பெரும் மௌனம்
என்னுள் வளரத்துவங்குகிறது
அதிவேகமாய்.

Monday, May 07, 2007

மரணம் பழகும் மனிதர்கள்

மரணம் பற்றி யோசிப்பதும் எழுதுவதும் மிகுந்த மன சோர்வையும் துயரத்தையும் தருவதாய் இருக்கிறது. இறப்பின் கடைசித் தருணங்களை யாரும் அசை போட விரும்புவதில்லை. ஒருவரின் இறப்பு ஒரு சிலருக்கு வாழ்வை எதிர்நோக்கும் பயத்தையும் மற்றவருக்கு நாமில்லை என்ற ஆசுவாசத்தையும் தருகிறது. இருப்பினும் மரணம் நம்முடனே பயணிக்கிறது. இறப்பிற்கு பின்னான தேற்றல்களும் மனமுதிர்சிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன.

சமீபத்தில் மிக நெருக்கத்தில் இப்படியான மற்றுமொரு மரணம் பார்க்க நேர்ந்தது.
உடல் அகற்றப்பட்டு புகைப்படம் வந்துவிட்டத் தருணத்தில் நான் சென்றதால் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கவில்லை. வாம்மா எப்போ வந்தே என்றார்கள். கை பிடித்து ஆறுதல் சொன்னேன். எப்படி இறந்தார் என முன்னமே தெரிந்திருந்ததனால் அதிகம் பேசவும் துன்புறுத்தவும் விரும்பவில்லை. நடப்புக்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்து, படைத்துவிட்டு, மற்றவர்கள் வேலை, நலம் விசாரித்து நேரம் கழிந்தது.

பின் கணீரென்ற குரலில் ஜெபிக்கத்துவங்கினார் ஒருவர்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;

சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.


எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

எல்லோரும் க‌ண்க‌ல‌ங்கினோம், அவ‌ர‌வ‌ர் வீட்டு ம‌ர‌ண‌ங்க‌ளை நினைத்து. என் கான்வ‌கேஷ‌னுக்கு கூட‌ அப்பா வ‌ர‌லை... இன்னும் கொஞ்ச‌ம் நாள் இருந்திருக்க‌லாம் இல்ல‌? என்றான் போன‌ வ‌ருட‌ம் இற‌ந்த‌வ‌ரின் ம‌க‌ன். ஒரு அக்காவையும், அடுத்து அம்மாவையும், போன‌ வ‌ருட‌ம் அண்ண‌னையும், இப்பொழுது த‌ம‌க்கையின் க‌ண‌வ‌னையும் இழ‌ந்து ஜெபித்துக்கொண்டிருந்த சின்ன மாமாவை பார்க்க‌ பாவ‌மாய் இருந்த‌து.

போன சாவுக்கு பார்த்த பல உறவுகளை இந்த சாவிலும் பார்க்க நேர்ந்தது. தொலைபேசி எண்களும் ஈ மெயில் முகவரிகளும் பரிமாறிக்கொண்டோம். மீபோ ஓர்குட் பற்றி பேசினோம். யாருக்கு முதலில் திருமணம் என கேலிகள் பேசினோம். ம‌ர‌ண‌ங்க‌ள் நிக‌ழ‌க் கூடாதென‌ வேண்டிக்கொண்டோம். விடைபெற்றோம்.

Monday, March 05, 2007

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசௌக‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

Tuesday, February 13, 2007

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடைய‌தாக‌வும் இருக்க‌லாம்.

ம‌ற‌ந்த‌தா ம‌றுத்த‌தா எனத் தெரியாத‌ ப‌ட்ச‌த்தில்
ம‌ட‌ல்வில‌க்கி தூசு அக‌ற்றி சுவ‌ரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்த‌வ‌ரும் பெற்ற‌வ‌ரும்
இன்னும் பிரியாம‌ல் இருக்க‌வும் கூடும்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்
என் ஒழுங்கின்மையின் நுணுக்கங்களை
சோதித்துக் கொண்டிருந்தப் புத்தகத்தை
மூடிய வேகத்தில் சிதறித்தெறித்தன‌
சில முளைக்கட்டிய விதைகள்.
தலையணைக்குள் முகம் புதைத்து
காயத்துவங்கியிருந்த விதைகளை
நெருடிக்கொண்டிருந்தேன்.
ஜ‌ன்ன‌லின் வெளியே
அன‌ல்காற்றின் சுழ‌ற்சியில்
இடைவ‌ளைத்து சுழ‌ன்றுக்கொண்டிருந்த‌து
சூல்தாங்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌
ச‌ற்று முன் இருந்திராத‌
அந்த‌ ம‌ர‌ம்.

Wednesday, February 07, 2007

காமம் குழைத்துப் பூசிய‌
என் மூளைச்சுருக்கங்களிலிருந்து
ஒவ்வொன்றாய் உதிரத்துவங்குகின்றன‌
மலரின் ஸ்பரிசமும்
தனிமையின் நிச்சலனமும்
மரணத்தின் இயல்பும்.
சில கூரிய வாஞ்சைகளின்
முடுச்சுக்கள் இளகியதும்
பக்கு பக்காய் உதிர்ந்துவிட்டிருந்தது
என் காமமும்.

Tuesday, January 30, 2007

நா.முத்துகுமாரும் கோலிவுட் கோர்ட்டும்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சியில் நா.முத்துகுமாருடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. என்னை பாதித்த கவிதைகளில் ஒன்றாய் அவருடைய 'தூர்' கவிதை இன்னமும் இருப்பதாலும், வெயில் படத்தின் வெயிலை உருவகப்படுத்திய பாடலும், உருகுதே மருகுதே பாடலும் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களில் திகட்டாமல் கேட்க முடிவதாலும், ஒரு வளரும் கவிதாயினியின் ஆர்வத்தோடு அந்நிகழ்ச்சியை பார்க்கத்துவங்கினேன். அத்தனை ஆர்வமும் பத்தே நிமிடங்களில் போய்விட்டது.

ஒரு கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் தரக்கூடிய அதிகபட்ச தண்டனை அவனை கேள்வி கேட்பதும் அதற்கு ஒரு வரியில் பதில் எதிர்பார்ப்பதும் தானோ என்று நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைத்தது. நீங்கள் எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் (600) என்று ஆரம்பித்து பிடித்த இசையமைப்பாளர் யார் (எல்லோரையும் பிடிக்கும்), ஏன் தத்துவ பாடல்கள் எழுதுவதில்லை (கதைகள் வருவதில்லை), கவிதைகளுக்கும் திரைப் பாடல்களுக்குமான வித்தியாசங்கள் என்ன (எழுத்து சுதந்திரம்), இசையில் வார்த்தைகள் புதைந்துவிடுவது பற்றிய அபிப்பிராயம் (???) என்று பல ஆண்டுகளாய் கேட்கப்பட்டுவரும் அதே புளித்த கேள்விகள் தான். இதற்கெல்லாம் பதிலளிக்க முத்துக்குமார் தேவையா என்று தெரியவில்லை.

நீங்கள் ஜென் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருப்பதனால் அவைகளை உங்கள் பாடல்களில் உபயோகிக்கின்றீர்களா என்றார் பேட்டி எடுப்பவர். எந்த தத்துவமாயினும் நிகழ்வுகளாயினும் ஒரு மனிதன் உள்வாங்கி பின் வெளிப்படுத்தும்போது அவனுடைய தனிபட்ட கருத்துக்களும் அதில் சேர்ந்துக்கொள்ளும் என்பதுத் தெரிந்ததே. ஆக, பாடல்களில் வரும் தத்துவங்கள் தத்துவங்களாய் இல்லாமல் அவைகளின் பாதிப்புகளாய் இருக்கின்றன என்று சொல்ல முயற்சித்தார் கவிஞ‌ர். எல்லோரும் புரிந்துக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

நிகழ்ச்சியின் இறுதி வரை பதினெட்டிலிருந்து இருபது வயது வரையான நாற்பது இளைஞ‌ர்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். கேள்வி கேளுங்கள் என்றதும் கேட்டார்கள். என்ன பதில் சொன்னாலும் ஏற்று கொண்டு மைக்கை அடுத்தவர்க்கு கொடுத்தார்கள். யாருமே இயல்பாய் இல்லாத இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒரு இலக்கியவாதியோ பாடலாசிரியனோ எவ்வளவு தூரம் தங்கள் எண்ணங்களையும், பார்த்த‍, கேட்ட,படித்த விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ள முடியும்?

மற்றபடி நா.முத்துகுமாரின் புத்தகங்கள் பற்றிய‌ கேள்வியும், இடைவெளியில் சேனல் மாற்றியதில் பார்த்த அவரது பாடல்களும் நன்றாக இருந்தன. ஆழ்ந்த கருத்துக்களும் சுவையான சிந்தனைகளையும் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து மனம்திறந்த பதில்கள் வரவழைக்கும் இன்னும் செறிவான கேள்விகளுக்கு சற்றே மெனக்கெடலாம் என்று தோன்றுகிறது.

Wednesday, January 10, 2007

கரிசனம்

அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற‌ சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்